தேடுதல்

வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் 'ஊர்பி எத் ஓர்பி  சிறப்பு ஆசீர் 270320 வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் 'ஊர்பி எத் ஓர்பி சிறப்பு ஆசீர் 270320  

கடவுள் அனைத்தையும் நம் நன்மைக்காக மாற்றுகிறார்

மார்ச் 27 இவ்வெள்ளி மாலையில், உலகில் கோவிட்-19 தொற்றுக்கிருமி பரவல் முற்றிலும் தடை செய்யப்பட, செபித்து 'ஊர்பி எத் ஓர்பி' சிறப்பு ஆசீரை வழங்கினார் திருத்தந்தை. “ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா? என்ற இயேசுவின் திருசொற்களை மையப்படுத்தி மறையுரையும் ஆற்றினார் திருத்தந்தை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மார்ச் 27, இவ்வெள்ளி இந்திய-இலங்கை நேரம் இரவு 10.30 மணிக்கு, மக்கள் யாருமின்றி வெறிச்சோடிக்கிடந்த வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகில் கொரோனா தொற்றுக்கிருமி பரவல் தடைசெய்யப்பட செபித்து, உரோம் நகருக்கும், உலகுக்குமென 'ஊர்பி எத் ஓர்பி (Urbi et Orbi)' சிறப்பு ஆசீரை வழங்கினார்.

இவ்வெள்ளி உரோம் நேரம் மாலை ஆறு மணிக்கு, மழைபெய்து கொண்டிருந்தாலும், அதையும் பொருட்படுத்தாது, ஒரு தவமாக, வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு,  குடையின்றி நடந்து சென்ற திருத்தந்தை, செபத்தைத் தொடங்கி வைத்தார்.

இந்கிழ்வில் சிறிய தியான உரையாற்றியபின், திருநற்கருணை ஆராதனை, அதைத் தொடர்ந்து, உலக மக்கள் அனைவரும் பரிபூரண பலனைப் பெறும் வகையில், திருநற்கருணையில் எழுந்தருளியிருக்கும் இயேசுவால், ஆசீரும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

விசுவாசத்தின் அடையாளங்கள்

விசுவாசத்தின் அடையாளங்களாக, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலின் முன்பகுதியில், வளாகத்தை நோக்கியபடி, உரோம் மக்களுக்கு நலமளிக்கும் (Salus Populi Romani) அன்னை மரியா திருப்படமும், புனித மர்ச்செல்லோ (San Marcello) ஆலயத்தில் வணங்கப்பட்டுவரும் புதுமை திருச்சிலுவையும் வைக்கப்பட்டிருந்தன.

உரோம் மேரி மேஜர் பெருங்கோவிலில் வணங்கப்பட்டுவரும் இத்திருவுருப்படம்,  திருத்தந்தை முதலாம் கிரகரி அவர்களின் தலைமைப்பணிக் காலத்தில், கி.பி. 590ம் ஆண்டில் Crete தீவிலிருந்து உரோம் நகருக்கு எடுத்துவரப்பட்டது. கி.பி.593ம் ஆண்டில் உரோம் நகரை கறுப்பு கொள்ளை நோய் (Black Plague) தாக்கியபோது திருத்தந்தை முதலாம் கிரகரி அவர்கள், இந்த அன்னை மரியிடம் செபித்து, அப்படத்தை உரோம் நகரத் தெருக்களில் எடுத்துச் சென்றார். கொள்ளை நோயும் அகன்றது என்று சொல்லப்படுகிறது. அதேபோல் 1571ம் ஆண்டில் திருத்தந்தை 5ம் பயஸ் அவர்கள், Lepanto போரில் வெற்றியடைய இவ்வன்னையிடம் செபித்தார். வெற்றியும் கிட்டியது.     

கொரோனா தொற்றுக்கிருமி நெருக்கடியையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நடத்திய இச்செப நிகழ்வில், முகநூல், யூடியூப், தொலைக்காட்சி மற்றும், வானொலி போன்ற அனைத்து சமூகத்தொடர்பு சாதனங்கள் வழியாக உலக மக்களுக்கு சிறிய தியான உரையாற்றினார்.

தியான உரை

இச்செப நிகழ்வில், “ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா? (மாற்.4:35-41)” என்று, படகுப் பயணத்தில் புயலில் சிக்கிய தன் சீடர்களுக்குக் இயேசு கூறியதை மையப்படுத்தி தியானச் சிந்தனைகளை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பல வாரங்களாக மாலையாகவே உள்ளது, இந்த காரிருள் நம் சதுக்கங்களை, நம் சாலைகளை, மற்றும், நம் நகரங்களைச் சூழ்ந்துள்ளது. இது நம் வாழ்வில் ஊடுருவி, எல்லாவற்றையும் மௌனத்தாலும், வேதனைதரும் வெறுமையாலும் நிறைத்துள்ளது, கடந்துசெல்லும் அனைத்தையும் நிறுத்துகிறது, இதனை நாம் மக்களின் சைகளில், அவர்களது பார்வையில் உணர முடிகின்றது என்று திருத்தந்தை கூறினார். 

இயேசு, தன் சீடர்களோடு படகுப் பயணம் மேற்கொண்டவேளையில், கடலில் பெரும் புயல் அடித்தது, அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக் கொண்டிருந்தது, சாகப்போகிறோமே! என்று சீடர்கள் கலங்கியது போல, இச்சூழலில், நாமும் அஞ்சிக்கொண்டிருக்கிறோம் என்று திருத்தந்தை உரைத்தார்.

நாம் எல்லாரும் ஒரே படகில்

நாம் எல்லாரும் ஒரே படகில் இருக்கின்றோம் என்பதை, கோவிட்-19 தொற்றுக்கிருமி நினைவுபடுத்துகின்றது என்றும், “போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?” என்று, சீடர்கள் இயேசுவை அழைத்தது போன்று நாமும் இயேசுவை அழைப்போம் என்று கூறினார்.

மற்ற யாரையும்விட நம்மீது அக்கறை கொள்பவர் இயேசு ஒருவரே என்பதால், இந்த நம் வார்த்தைகள் அவரை தட்டியெழுப்பும் என்று கூறியத் திருத்தந்தை, புயல், நம் வலுவின்மை மற்றும், நம் அன்றாட வாழ்வில் நாம் வகுத்துள்ள போலியான மற்றும், மேம்போக்கான நிச்சயங்களை வெளிப்படுத்துகின்றது என்றும் கூறினார்.

நம் பொதுவான மனித சமுதாயமாக, சகோதரர், சகோதரிகளாக, நாம் ஒருவர் ஒருவரைச் சார்ந்துள்ளோம் என்பதை, இச்சூழல் வெளிப்படுத்துகின்றது என்றும் உரைத்த திருத்தந்தை, “ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?” என்று இயேசு சீடர்களிடம் கேட்ட கேள்வியையும் முன்வைத்தார்.

போர்கள், அநீதிகள், ஏழைகளின் அழுகுரல், அழிந்துவரும் நம் பூமிக்கோளம் ஆகிய நம் கழுத்தை நெறிக்கும் அனைத்தையும் புறக்கணித்து, நோயாய் இருக்கும் உலகில் நலமாக நாம் வாழ்வது பற்றி சிந்தித்து வருகிறோம், நம் புயலடிக்கும் கடலில் ஆண்டவரே, விழித்தெழும் என்று அவரை நோக்கி அழுகுரல் எழுப்புகிறோம் என்று கூறினார்.

தெரிவுசெய்யும் காலம்

உண்மையில் இயேசு நம்மை மனமாற்றத்திற்கு அழைக்கிறார், அவரில் நம்பிக்கை கொள்ளுமாறு அழைக்கிறார், இது கடவுளின் தீர்ப்புக் காலம் அல்ல, மாறாக, நம் சொந்த தீர்ப்புக் காலம், நாம் எதைத் தெர்ந்துகொள்ள வேண்டும், எதை விலக்க வேண்டும் என்பதை தெரிவு செய்யும் காலம் என்றும் திருத்தந்தை கூறினார்.

மருத்துவப் பணியாளர்கள், பல்பொருள் அங்காடியில் பணியாற்றுவோர், துப்புரவுத் தொழிலாளர்கள், அருள்பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள், மற்றும், தன்னார்வலர்கள் உட்பட, அச்சம் இருந்தாலும்கூட, தங்கள் வாழ்வையே அர்ப்பணித்துப் பணியாற்றும் பலரிடமிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்வோம், துணிவும், தாராள தன்மறுப்பில், தூய ஆவியார் தன் வரங்களைப் பொழிகிறார் என்று கூறினார், திருத்தந்தை.

நாம் தன்னிறைவு அடைந்தவர்கள் அல்ல, நமக்கு மீட்பு தேவை என்று நாம் உணரும்போது நம்பிக்கை தொடங்குகிறது, நாம் இயேசுவிடம் நம் பயங்களை ஒப்படைத்தால் அவர் அவற்றின்மீது வெற்றி கொள்வார், நமக்கு நடப்பவை அனைத்தையும், ஏன் மோசமான காரியங்களைக்கூட,  கடவுள் நன்மையாக மாற்றுவார் அதுவே அவரின் வல்லமை, அவர் நம் புயல்களில் அமைதியைக் கொணர்வார், ஏனெனில் கடவுளோடு உள்ள வாழ்வு, ஒருநாளும் இறப்பதில்லை என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

எனவே இப்போது பெரும் புயலின் நடுவில், நாம் விழித்தெழுமாறு கடவுள் நம்மிடம் கேட்கிறார் என்று கூறியத் திருத்தந்தை, ஒருமைப்பாட்டுணர்வுக்கும், நம்பிக்கை வாழ்வுக்கும் அழைப்பு விடுத்தார்.

இயேசுவின் சிலுவையே நம்மைக் காக்கின்ற நங்கூரம், அவரின் சிலுவையால் நாம் குணமாக்கப்பட்டுள்ளோம், அவரின் மீட்பளிக்கும் அன்பிலிருந்து எதுவும் நம்மைப் பிரிக்க முடியாது, அஞ்சாதீர்கள், ஆண்டவரிடம் நம் துயரங்களை ஒப்படைப்போம் என்றுரைத்த திருத்தந்தை, கடலின் விண்மீனாகிய அன்னை மரியாவிடம் அனைவரையும் ஒப்படைப்பதாகத் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 March 2020, 15:28