தேடுதல்

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை  110320 திருத்தந்தையின் மறைக்கல்வியுரை 110320 

மறைக்கல்வியுரை:ஒவ்வொரு மனிதருக்கும் கடவுள் மீது தாகம்

மனித சமுதாயத்திற்கு இயேசு கிறிஸ்துவின் நீதி தேவைப்படுகின்றது. கிறிஸ்துவின் நீதிக்காக பசியும், தாகமும் கொண்டிருக்கும் உலகில், கத்தோலிக்கர் நற்செய்தியைப் பரவச் செய்ய வேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான்

கொரோனா தொற்றுக்கிருமி உருவாக்கியுள்ள நெருக்கடி நிலையால், அது மேலும் பரவாமல் தடுப்பதற்கு இத்தாலிய அரசு அதிகாரிகள் மேற்கொண்டுள்ள விதிமுறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் விதமாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 11, இப்புதன்கிழமை பொது மறைக்கல்வியுரையை, வத்திக்கான் மாளிகையிலுள்ள தன் நூலகத்திலிருந்து வழங்கினார். திருத்தந்தையின் மறைக்கல்வியுரையும், வாழ்த்தும், ஆசீரும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மலைப்பொழிவு போதகத்தில், எட்டு பேறுபெற்றோர் குறித்து, இயேசு திருவாய் மலர்ந்தவைகள் பற்றி அண்மை புதன் மறைக்கல்வியுரைகளில் ஒவ்வொன்றாக விளக்கி வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று, நான்காவது பேறுபெற்றோர் குறித்த தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை

அன்பு சகோதரர், சகோதரிகளே, புதன் மறைக்கல்வியுரைகளில், பேறுபெற்றோர் பற்றிய தன் போதகத்தில், நம் ஆண்டவர், நமக்கு வழங்கிய மகிழ்ச்சியான சுடர்விடும் பாதை குறித்து தியானித்து வருகிறோம். இன்று அதில், “நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவுபெறுவர் (மத்.5:6)” என்ற நான்காவது பேறுபெற்றோர் பற்றிச் சிந்திப்போம். ஏழையரின் உள்ளத்தோர், மற்றும், துயருறுவோர் பற்றி நாம் ஏற்கனவே தியானித்துள்ளோம். நாம் இன்று, பசி மற்றும், தாகத்தோடு தொடர்புடைய இன்னொரு விதமான பலவீனம் குறித்து தியானிக்கிறோம். பசியும் தாகமும், உயிர்வாழ்வதற்கு இன்றியமையாத தேவைகள்தான். ஆனால், நீதிக்காக பசியும் தாகமும் கொண்டிருப்பது என்றால் என்ன அர்த்தம்? இயேசு, இந்த நான்காவது பேறில், ஒருவரின் தனிப்பட்ட தேவை மற்றும், சமுதாய நீதிக்காக, பசியாகவும், தாகமாகவும் இருப்பது பற்றி மட்டும் பேசவில்லை, மாறாக, கடவுளின் கண்களில் ஏற்புடைமைக்காக, மிகவும் ஏங்குவதைச் சுட்டிக்காட்டுகிறார்”. “கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது. நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது” (வ.1) என்று திருப்பாடல் 63ல் செபிக்கின்றோம். இதேபோல் புனித அகுஸ்தீன் அவர்களும், “ஆண்டவரே, நீர் எம்மை உமக்காகப் படைத்திருக்கிறீர், எம் இதயங்கள் உம்மில் இளைப்பாறும்வரை ஓய்வுபெறுவதில்லை (பாவஅறிக்கைகள்,I,1)” என்று பதிவுசெய்துள்ளார். இந்த ஆவல், ஒவ்வொரு மனித இதயத்திலும் இருக்கிறது. இந்த ஆவல், கிறிஸ்துவில் தன் நிறைவைக் காண்கிறது. நம் ஆண்டவராம் கிறிஸ்து, பாஸ்கா பேருண்மை வழியாக, நம்மை இறைத்தந்தையோடு ஒப்புரவாக்கினார், மற்றும், நம் ஏற்புடைமை பற்றிய நற்செய்தியை எல்லாருடனும் பகிர்ந்து கொள்ள அழைக்கிறார். இந்த உன்னத உணர்வில், நீதியை ஊக்குவிப்பதன் வழியாக, உண்மையான திருப்தியைக் கண்டுகொள்வோம் என்றும், ஏற்புடைமைக்காக நாம் கொள்ளும் தாகம், கடவுள் தம் மக்கள் மீது பொழியும் அன்பால் தணிக்கப்படும் என்றும், இயேசு உறுதியளிக்கிறார். இவ்வாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் மறைக்கல்வியுரையில், நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பற்றி, பல மொழிகளில் விளக்கினார்.

நோயாளிகள் நலப்பணியாளர்கள்

அதன்பின்னர், கோவிட்-19 தொற்றுக் கிருமியால் தாக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும், ஏனைய நோய்களால் துன்புறும் அனைவருடனும், தன் அருகாமை மற்றும், ஆறுதலை தெரிவித்தார். இந்நோயாளிகளுக்கு உதவும் அனைவருக்கும், குறிப்பாக, இந்த நெருக்கடியான சூழல்களில் செபித்துக்கொண்டிருக்கும் கிறிஸ்தவர்கள் மற்றும், நன்மனம் கொண்ட எல்லா மதத்தவருக்கும் நன்றி தெரிவித்தார். பல ஆண்டுகளாக இடம்பெறும் போரால் துன்புறும் சிரியா மக்களை, குறிப்பாக, கிரீஸ் மற்றும், துருக்கி நாடுகளின் எல்லையில் சிக்கியுள்ள மக்களை மறக்க வேண்டாமெனவும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார். இறுதியில், நோயாளிகள், வயது முதிர்ந்தோர், இளைஞர், புதுமணத் தம்பதியர் போன்ற எல்லாரையும் வாழ்த்தினார். இந்த தவக்காலத்தில் நமக்காகத் துன்புற்று மரித்து உயிர்த்த இயேசு மீது நம் கண்களைப் பதிப்போம். அவரின் தூய ஆவியில் ஆறுதலையும், கனிவையும் பெறுவோம் என்று சொல்லி, தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 March 2020, 15:02