திருத்தந்தையின் மறைக்கல்வியுரை - 180320 திருத்தந்தையின் மறைக்கல்வியுரை - 180320 

மறைக்கல்வியுரை: கடவுளின் இரக்கம் கிறிஸ்தவ வாழ்வின் மையம்

இறைமகன் இயேசு எடுத்துரைத்த எட்டுப் பேறுகளில், “இரக்கமுடையோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்” (மத்.5,7) என்ற ஐந்தாவது பேறு குறித்து இப்புதனன்று மறைக்கல்வியுரை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நிலையில், அதிலும் குறிப்பாக, இத்தாலியில் பாதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில், இந்நோய் பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் மக்கள் ஓரிடத்தில் கூடுவதைத் தவிர்க்குமாறு, அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.. மக்கள் மீது அதிக அக்கறை கொண்டு செயல்படும் நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் .கடந்த வாரத்தைப் போலவே இந்த வாரமும், தன் நூலக அறையிலிருந்தே புதன் மறைக்கல்வி உரையை வழங்கினார். இயேசு மலைமீது அமர்ந்து வழங்கிய எட்டு பேறுகள் குறித்து, கடந்த சில வாரங்களாக, தன் புதன் மறைக்கல்வி உரைகளில் விளக்கமளித்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று, ஐந்தாவது பேறாகிய இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர் (மத்.5,7) என்பது குறித்து எடுத்துரைத்தார்.

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை

அன்பு சகோதர சகோதரிகளே,

இறைமகன் இயேசு எடுத்துரைத்த பேறுகள் பற்றிய நம் தொடரில் இன்று, “இரக்கமுடையோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்” (மத்.5,7) என்ற ஐந்தாவது பேறு குறித்து நோக்குவோம். கொடுத்துப் பெறும் இந்த ஒரே பேறில்தான், காரணமும் விளைவும் ஒன்றாக இருப்பதைக் காண்கிறோம். இரக்கத்தின் இந்த இயல்பை, இங்கு மட்டுமல்ல, இறைவனின் இரக்கம்நிறை அன்பு எங்கெல்லாம் வெளிப்படுகிறதோ, அங்கெல்லாம் நாம் அதைக்  காண்கிறோம். ஏனெனில், வழங்கப்படும் இரக்கத்திற்கும், பெறப்படும் இரக்கத்திற்கும் இடையே பிரிக்க முடியாத தொடர்பு உள்ளது. “எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும்” (6:12) என்று மத்தேயு நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம். நாம் இறைவனுக்கும், நம்மை சுற்றி வாழ்வோருக்கும், எப்போதும் கடன்பட்டுள்ளோம். நம் பாவங்களுக்காகவும், நாம் செய்யத் தவறியவைகளுக்காகவும், நமக்கு மன்னிப்பும் தொடர்ந்து தேவைப்படுகின்றது. பிறரின் உதவி நமக்குத் தேவை என்பதை உணர்ந்தவர்களாக, இறை இரக்கத்தை நாடி, அதனைப் பெற்றவர்களாக, அதன் வழி பிறரை மன்னிக்கும் சக்தி பெறுவோம். இது இரக்கத்தின் இரகசியத்தை வெளியிடுகிறது, அதாவது, மன்னிப்பதன் வழியாக நாம் மன்னிப்பை பெறுகிறோம். இரக்கம் என்பது, பலவற்றுள் ஒன்றல்ல, மாறாக, இது கிறிஸ்தவ வாழ்வின் மிக முக்கிய கூறாகும் மற்றும், மையமுமாகும். இந்த மிக உயரிய கொடைக்காக இறைவனுக்கு நன்றிகூரும்வேளை, பிறரன்பின் இந்த அழகிய கனியாகிய இரக்கத்தை, நம் சகோதரர், சகோதரிகளுடன் பகிர முயல்வோம். இவ்வாறு, தன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை, இவ்வெள்ளி மற்றும், சனி நாள்களில், “ஆண்டவரோடு 24 மணி நேரங்கள்” என்ற பக்தி முயற்சியில் செலவழிக்குமாறு எல்லாருக்கும் அழைப்பு விடுத்தார்.

உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத்திலிருந்து மக்களைக் காப்பாற்றும் நோக்கத்தில் இத்தவக்காலத்தில் இறைவனை நோக்கி செபிக்குமாறும், ஒப்புரவு அருளடையாளத்திற்கு முக்கியத்துவம் கொடுக்குமாறும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இறுதியில், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 March 2020, 15:07