தேடுதல்

#PrayForTheWorld - திருத்தந்தையின் காணொளி #PrayForTheWorld - திருத்தந்தையின் காணொளி 

"உலகிற்காக செபியுங்கள்" – திருத்தந்தையின் செபக்கருத்து

புனிதமும், மகிமையும் நிறைந்த கன்னியே, சோதனைக்குள்ளாகியிருக்கும் எங்கள் வேண்டுதலை புறக்கணியாது, எங்களை அனைத்து ஆபத்துக்களிலிருந்தும் மீட்டருளும் – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒவ்வொரு மாதமும் திருத்தந்தை வெளியிடும் செபக்கருத்துக்களை தொகுத்து வழங்கிவரும் செபத்தின் திருத்தூதுப்பணி அமைப்பு, தற்போதைய கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத்தை நீக்க, திருத்தந்தை வெளியிட்டுள்ள ஒரு சிறப்புக் கருத்தை, “The Pope Video” காணொளி வழியே வழங்கியுள்ளது.

#PrayForTheWorld அதாவது, "உலகிற்காக செபியுங்கள்" என்ற 'ஹாஷ்டாக்'குடன் வெளியிடப்பட்டுள்ள இந்த காணொளியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை மரியாவின் துணையையும், பாதுகாப்பையும் நாடி கூறியுள்ள ஒரு செபம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

"நோயுற்றோர் மற்றும் துன்புறுவோர் அனைவருக்காகவும் ஒன்றிணைந்து செபிப்போம்" என்ற சொற்களுடன் இக்காணொளியைத் துவக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறை அன்னையின் பாதுகாப்பை வேண்டியும், தன்னுடன் இணைந்து செபிக்கும் அனைத்து கிறிஸ்தவர்கள் மற்றும் நல்மனம் கொண்டோர் அனைவருக்கும் நன்றி கூறியும் இக்காணொளியை நிறைவு செய்துள்ளார்.

மரியன்னையிடம் திருத்தந்தையின் வேண்டுதல்

மரியன்னையிடம் திருத்தந்தை எழுப்பியுள்ள வேண்டுதலும், நன்றியுரையும்:

"இறைவனின் புனித அன்னையே, உமது பாதுகாப்பின் கீழ் தஞ்சம் தேடுகிறோம். புனிதமும், மகிமையும் நிறைந்த கன்னியே, சோதனைக்குள்ளாகியிருக்கும் எங்கள் வேண்டுதலை புறக்கணியாது, எங்களை அனைத்து ஆபத்துக்களிலிருந்தும் மீட்டருளும்.

இவ்வேளையில் செபத்தில் இணைந்திருக்கும் அனைத்து கிறிஸ்தவர்கள், நல்மனம் கொண்ட ஆண்கள், பெண்கள், பல்வேறு மத நம்பிக்கை கொண்டவர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்"

இயேசு சபையின் திருத்தூது இறைவேண்டல் பணி என்ற அமைப்பு, ஒவ்வொரு மாதமும், திருத்தந்தை வெளியிடும் செபக்கருத்துக்களை “The Pope Video” காணொளி வழியாகவும், "clicktopray.org" என்ற இணையதளம் வழியாகவும் உலகெங்கும் வழங்கி வருகிறது.

'ஊருக்கும் உலகுக்கும்' - சிறப்பு ஆசீர்

மேலும், உலகெங்கும் பரவியுள்ள கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்குதலை நீக்க, மார்ச் 27, இவ்வெள்ளியன்று, உரோம் நேரம் மாலை 6 மணிக்கு, புனித பேதுரு பெருங்கோவிலில் சிறப்பு வழிபாடு ஒன்றும், அதைத் தொடர்ந்து, புனித பேதுரு பெருங்கோவில் வாசலில் நின்றபடி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருநற்கருணை ஆண்டவரைத் தாங்கியிருக்கும் கதிர்பேழையைக் கொண்டு வழங்கும் 'Urbi et orbi' அதாவது, 'ஊருக்கும் உலகுக்கும்' என்ற சிறப்பு ஆசீரும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 March 2020, 15:04