தேடுதல்

காலியாரி நகரில் அமைந்துள்ள 'போனாரியா'வின் நமதன்னை திருத்தலம் காலியாரி நகரில் அமைந்துள்ள 'போனாரியா'வின் நமதன்னை திருத்தலம் 

'போனாரியா' திருத்தலத்திற்கு திருத்தந்தையின் வாழ்த்து

1370ம் ஆண்டு, கடலில் கண்டெடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் ‘போனாரியா’ அன்னை மரியாவின் திருஉருவம் நிறுவப்பட்ட திருத்தலம், தன் 650ம் ஆண்டு நிறைவைச் சிறப்பித்து வருகிறது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இத்தாலியின் சார்தீனியா தீவின் தலைநகரான காலியாரி (Cagliari) என்ற நகரில் அமைந்துள்ள 'போனாரியா'வின் (Bonaria) நமதன்னை கோவிலில் வணங்கப்பட்டு வரும் அன்னை மரியாவின் திருஉருவம் அந்நகரை அடைந்ததன் 650ம் ஆண்டு கொண்டாடப்படுவதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வாழ்த்து மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

காலியாரி உயர் மறைமாவட்டத்தின் பேராயர் ஜியூசெப்பே பத்தூரி (Giuseppe Baturi) அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள இம்மடலில், இந்த ஆலயத்தையும், 'போனாரியா' மரியன்னையின் திருஉருவத்தையும் பாதுகாத்துவரும் Mercedarian அருள்பணியாளர்களுக்கு சிறப்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள இந்த வாழ்த்துச் செய்திக்கு நன்றி கூறியுள்ள காலியாரி பேராயர் பத்தூரி அவர்கள், தொற்றுக்கிருமியின் தாக்கத்தால் துவண்டிருக்கும் இத்தாலிய மக்களுக்கு, திருத்தந்தை வழங்கிவரும் ஆறுதல் மற்றும் நம்பிக்கை ஆகிய கொடைகளுக்கு சிறப்பான நன்றியைத் தெரிவித்துள்ளார்.

‘நல்ல காற்று’ என்று பொருள்படும் 'போனாரியா' என்ற பெயரைத் தாங்கியுள்ள இத்திருத்தலத்தில் உள்ள அன்னை மரியா, இவ்வுலகெங்கும் நோய் நீங்கி, நம்பிக்கையைக் கொணரும் உலகின் ஒளியான கிறிஸ்துவை மீண்டும் நமக்கு வழங்குவாராக என்று பேராயர் பத்தூரி அவர்கள் கூறியுள்ளார்.

1370ம் ஆண்டு, கடலில் கண்டெடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் 'போனாரியா' அன்னை மரியாவின் திருஉருவம் நிறுவப்பட்ட திருத்தலம், தன் 650ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிப்பதையொட்டி, இவ்வாண்டு, இத்திருத்தலத்தில், சிறப்பு யூபிலி ஆண்டு கொண்டாடப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 March 2020, 15:03