Laudato Si’  திருமடல் குறித்த உலக கருத்தரங்கில் கலந்துகொண்டோருடன் திருத்தந்தை  (கோப்பு படம்) Laudato Si’ திருமடல் குறித்த உலக கருத்தரங்கில் கலந்துகொண்டோருடன் திருத்தந்தை (கோப்பு படம்) 

“Laudato Si’ வாரத்தைக்” கொண்டாட திருத்தந்தை அழைப்பு

நமக்குப்பின் வருகின்ற சிறார் வளர்வதற்கு, எத்தகைய ஓர் உலகை விட்டுச்செல்ல விரும்புகிறோம் என்ற கேள்வியால் தூண்டப்பட்டு, இப்பூமியைப் பராமரிப்போம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, Laudato Si’ அதாவது, இறைவா உமக்கே புகழ் என்ற திருமடல் வெளியிடப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு உருவாக்கப்பட்டுள்ள “Laudato Si’ வாரத்தைக்” கொண்டாடுமாறு, கத்தோலிக்கர் எல்லாருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

வருகிற மே மாதம் 16ம் தேதி முதல், 24ம் தேதி வரை கொண்டாடப்படவிருக்கும் “Laudato Si’ வாரத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுகளை, ஒரு காணொளிச் செய்தி வழியாகவும் திருத்தந்தை விளக்கியுள்ளார்.

உலகின் அனைத்து கத்தோலிக்கப் பங்குத்தளங்கள், துறவு சபைகள், மறைமாவட்டங்கள், பள்ளிகள் மற்றும், ஏனைய கத்தோலிக்க நிறுவனங்களும் இவ்வாரத்தைக் கொண்டாடி, அத்திருமடலுக்குச் செயல்வடிவம் கொடுக்குமாறும், திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

நமக்குப்பின் வருகின்ற சிறார் வளர்வதற்கு, எத்தகைய ஓர் உலகை விட்டுச்செல்ல விரும்புகிறோம் என்ற கேள்வியால் தூண்டப்பட்டு, இவ்வாரத்தைக் கொண்டாடுமாறு திருத்தந்தை அச்செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2015ம் ஆண்டு மே மாதம் 24ம் தேதி, Laudato Si’ என்ற திருமடலை வெளியிட்டார். அதன் ஐந்தாம் ஆண்டு நிறைவாக, “Laudato Si’ வாரம்” கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 March 2020, 14:37