தேடுதல்

நூலகத்தில் மூவேளை செப உரை  நூலகத்தில் மூவேளை செப உரை  

இத்லிப் மக்கள், கோவிட்-19 நோயாளிகள் ஆகியோருக்காக செபம்

திருத்தந்தை : இந்த துன்பமான சூழலில், கடவுள் நம்பிக்கை, எதிர்நோக்கு மற்றும், பிறரன்பு என்ற சக்தியினால் விசுவாசிகளை ஊக்கப்படுத்திவரும் சகோதர ஆயர்களுடன் இணைந்து செபத்திற்கு அழைப்பு விடுக்கிறேன்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

வடமேற்கு சிரியாவில் இத்லிப் நகர மக்களுக்காகவும், கொரோனா தொற்றுக் கிருமி நோயாளிகளுக்காகவும், இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் இறைவனை நோக்கி மன்றாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் நூலகத்திலிருந்து வழங்கிய இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில், சிரியா மக்களுடன், குறிப்பாக, சிரியாவில் இடம்பெற்றுவரும் போரில், அண்மை இராணுவ நடவடிக்கைகளால் கட்டாயமாகப் பலம்பெயர்ந்துள்ள இத்லிப் மக்களுடன் தோழமையுணர்வை செயலில் வெளிப்படுத்திவரும் கழகங்கள் மற்றும் குழுக்களுக்கு நன்றியைத் தெரிவித்தார் திருத்தந்தை.

சிரியாவில் மனிதாபிமானமற்ற சூழலில், ஆபத்துக்களை எதிர்கொள்ளும், மற்றும், தங்களையே பாதுகாத்துக் கொள்ளும் நிலையற்ற மக்கள், குறிப்பாக சிறார் குறித்து கவலையையும் வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நாம் சுயநலன்களுக்கு முன்னுரிமை கொடுத்து, இத்தகைய மனிதமற்ற சூழலை எதிர்கொள்கின்றவர்களை புறக்கணிக்கக்கூடாது என்ற விண்ணப்பத்தை முன்வைத்த திருத்தந்தை, சிரியாவின் இத்லிப் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை ஆற்றும் தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

சிரியாவில் துன்புறும் இந்த நம் சகோதரர், சகோரிகளுக்காக அமைதியில் செபிப்போம் என்றும் திருத்தந்தை விண்ணப்பித்தார்.

பின்னர், உலக அளவில், நலவாழ்வில்  எதிர்கொள்ளப்படும் கொரோனா தொற்றுக்கிருமி பிரச்சனை குறித்து குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த துன்பமான சூழலில், கடவுள் நம்பிக்கை, எதிர்நோக்கு மற்றும், பிறரன்பு என்ற சக்தியினால் விசுவாசிகளை ஊக்கப்படுத்திவரும் சகோதர ஆயர்களுடன் இணைவதாகவும் கூறி, இந்நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு சிகிச்சை வழங்கும் அனைவருக்காகவும் செபிப்போம்  என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 March 2020, 16:00