தேடுதல்

ஞாயிறு மூவேளை செப உரை 220320 ஞாயிறு மூவேளை செப உரை 220320 

திருத்தந்தை: கிறிஸ்துவே, நம் இருளை அகற்றும் ஒளி

ஒளியைப் பெற்றால் மட்டும் போதாது, ஒளியாகவும் மாற வேண்டும். நாம் ஒவ்வொருவரும் நாம் பெற்ற இறை ஒளியை நம் வாழ்வு முழுவதும் வெளிப்படுத்த வேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஒளியைப் பெற்றால் மட்டும் போதாது, மாறாக, நம் வாழ்வு முழுவதும் அந்த ஒளியை வெளிப்படுத்துவதற்கு, நாம் ஒளியாக மாற வேண்டும் என்று, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தவக்காலத்தின் நான்காம் ஞாயிறாகிய, மார்ச் 22, இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகமான, “பிறவியிலேயே பார்வையற்றவர் பார்வை பெறுதல்” பற்றி இம்மூவேளை செப உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை, ஒளி, விசுவாசம் எனும் கொடை ஆகிய இரு கருத்துக்கள் பற்றி விளக்கினார்.

உலகின் ஒளி

பிறவியிலேயே பார்வையற்றவருக்கு பார்வை அளித்த இந்த புதுமை வழியாக, இயேசுவே உலகின் ஒளி என்பதை அவர் உறுதிப்படுத்துகிறார் என்றும், நம் இருளை ஒளிரச்செய்யும் ஒளி அவரே என்றும், திருத்தந்தை கூறினார்.

இது உடல் அளவிலும், ஆன்மீக அளவிலும் பொருந்தும் என்றும், பார்வையற்றவர் முதலில் உடலளவில் பார்வை பெறுகிறார், பின்னர், இயேசுவில் விசுவாசம் எனும் ஆன்மீகக் கொடையைப் பெறுகிறார் என்றும் உரைத்த திருத்தந்தை, இயேசு ஆற்றும் வியத்தகு செயல்கள், ஆடம்பர அடையாளங்கள் அல்ல, மாறாக, அவை, அகவாழ்வின் மாற்றத்தின் பயணம் வழியாக, விசுவாசத்திற்கு இட்டுச்செல்கின்றன என்று விளக்கினார்.

விசுவாசம் எனும் கொடை

பரிசேயர்களும், சட்ட அறிஞர்களும் இப்புதுமையை ஏற்பதற்கு மறுத்தனர், பார்வை பெற்றவரை கேள்விகளால் துளைத்தனர், ஆனால் பார்வை பெற்றவரோ, பார்வையற்றவனாய் இருந்தேன், இப்போது பார்வை பெற்றுள்ளேன் என்ற உண்மையைச் சொல்லி அவர்களைக் குழப்பினார் என்று கூறியத் திருத்தந்தை, பார்வை பெற்றவர், படிப்படியாக, தன் கண்களைத் திறந்தவரை அடையாளம் கண்டுகொண்டு, அவரில் தன் விசுவாசத்தை அறிக்கையிட்டார் என்று கூறினார்.

புதிய ஒளியில் வாழ்வைப் பார்த்தல்

நாமும் இதேபோன்ற அனுபவத்தைப் பெற முடியும் என்றும், பார்வை பெற்றவர், விசுவாச ஒளியில் தனது புதிய தனித்துவத்தைக் கண்டுகொள்கிறார், அவர் தனது வாழ்வு மற்றும், தன்னைச் சுற்றிய உலகத்தை புதிய ஒளியில் பார்க்கிறார் என்று கூறியத் திருத்தந்தை, பாவம், நம் முகத்தையும், நம்மையும், உலகையும் தெளிவாகப் பார்ப்பதிலிருந்து தடுக்கும் இருள் சூழ்ந்த முக்காடு என்றும், கடவுளின் இரக்கம், நிழல்களையும், இருளையும் அகற்றுகிறது, நமக்கு புதிய ஒளியைத் தருகின்றது என்றும் கூறினார்.    

ஒளியாக மாற

ஒளியைப் பெற்றால் மட்டும் போதாது, ஒளியாகவும் மாற வேண்டும் என்றும், நாம் ஒவ்வொருவரும் நாம் பெற்ற இறை ஒளியை நம் வாழ்வு முழுவதும் வெளிப்படுத்த வேண்டும் என்றும் கூறியத் திருத்தந்தை, யோவான் நற்செய்தியின் பிரிவு 9ஐ இன்று எல்லாரும் வாசிக்க வேண்டும், தானும் அதை வாசிக்கிறேன் என்று உரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 March 2020, 12:30