தேடுதல்

மூவேளை செபஉரையின்போது திருத்தந்தை பிரான்சிஸ் - 290320 மூவேளை செபஉரையின்போது திருத்தந்தை பிரான்சிஸ் - 290320  

இறப்பின் கற்களை அகற்றுமாறு இறைவன் கேட்கிறார்

திருத்தந்தை : மரணம் இருக்கும் இடங்களிலெல்லாம் வார்த்தையாம் இறைவன் வாழ்வை வழங்கட்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நம் இதயத்திலிருக்கும் கற்களை அகற்றி, புதிய வாழ்வுக்கு நம்மைத் திருப்புவோம் என்ற அழைப்பை முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு இலாசரை உயிர்ப்பித்த நிகழ்வு குறித்த இன்றைய நற்செய்தி வாசகத்தை முன்வைத்து, ஞாயிறு மூவேளை செப உரையை தன்  நூலக அறையிலிருந்து வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மரணம் இருக்கும் இடங்களிலெல்லாம் வார்த்தையாம் இறைவன் வாழ்வை வழங்கட்டும் என்றார்.

நீர் இங்கு இருந்திருந்தால் என் சகோதரர் இறந்திருக்க மாட்டார், என்ற மார்த்தா மற்றும் மரியாவின் வார்த்தைகளை நினைவூட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இலாசரின் சகோதரிகளின் அழுகையைப் பார்த்து இயேசுவும் அழுததை எடுத்துரைத்தார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம், இறைவனே வாழ்வு என்பதையும், அவரே வாழ்வை வழங்குகிறார் என்பதையும் நேரடியாகக் காண்கிறோம் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தன் நண்பர் இலாசரின் மரணத்தை இயேசு முதலிலேயே தவிர்த்திருக்க முடியும், ஆனால்,  மரணம் நமக்குத் தரும் வேதனையில் இயேசு பங்குபெறவும், மரணத்தின் மீது இறைவன் கொண்டுள்ள அதிகாரத்தை வெளிப்படுத்தவும் விரும்பியதால், இம்மரணத்தை இயேசு அனுமதித்தார் என்றார் திருத்தந்தை.

மனிதரின் விசுவாசமும், இறையன்பின் வரையற்ற வல்லமையும் ஒன்றையொன்று தேடிக்கொண்டிருக்கின்றன, இறுதியில் அவை சந்திக்கின்றன என்பதை  காண்கின்றோம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துன்பவேளைகளில் நம் விசுவாசத்தை தொடர்ந்து பாதுகாத்து வைத்திருப்போம் என அழைப்பு விடுத்தார்.

அன்று கல்லறைக் கல்லை அகற்றச் சொன்ன இயேசு, இன்றும் நம்மைப் பார்த்து, நம் இதயத்திலிருந்து கற்களை அகற்றச் சொல்கிறார் என எடுத்துரைத்தார் திருத்தந்தை.

ஏழைகளை ஒடுக்குதல், வெளிவேடத்தைக் கொண்ட விசுவாச வாழ்வு போன்ற இறப்பின் கற்களை அகற்றுமாறு இறைவன் நம்மை கேட்கிறார் என்ற அழைப்பை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வாறு நிகழும்போது நம்மைச் சுற்றியிருப்பவைகள் அனைத்தும் புதுப்பொலிவுடன் விளங்கும் எனவும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 March 2020, 14:26