தேடுதல்

Vatican News
காணொளி வழியாக மூவேளை செப உரை வழங்கும் திருத்தந்தை - 160320 காணொளி வழியாக மூவேளை செப உரை வழங்கும் திருத்தந்தை - 160320  (ANSA)

திருத்தந்தையின் மூவேளை செப உரை

தொற்றுக்கிருமியின் தாக்கத்தால், துன்பம் நிறைந்த இவ்வேளையில், மக்களுக்கு நெருக்கமாகவும், ஆறுதலாகவும் பணியாற்றிவரும் அருள்பணியாளர்களை திருத்தந்தை பாராட்டினார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத்தால், இத்தாலியின் லொம்பார்தியா பகுதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அங்கு மக்களோடு இணைந்து, மக்களுக்காகப் பணியாற்றிவரும் திருஅவைப் பணியாளர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிறப்பான முறையில் தன் நன்றியை வெளியிட்டார்.

தன் நூலக அறையிலிருந்து, மார்ச் 15, இஞ்ஞாயிறன்று, நண்பகல் மூவேளை செப உரையை, நேரடி ஒளிபரப்பின் வழியே வழங்கிய திருத்தந்தை, துன்பம் நிறைந்த இவ்வேளையில், மக்களுக்கு நெருக்கமாகவும், ஆறுதலாகவும் பணியாற்றிவரும் அருள்பணியாளர்களைப் பாராட்டினார்.

கிணற்றடியில், சமாரியப்பெண் ஒருவருடன் இயேசு மேற்கொண்ட உரையாடலைப்பற்றிய நற்செய்தி வாசகம் குறித்து, தன் மூவேளை செப உரையில் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு பக்கம், வாழ்வின் முக்கிய அம்சமாகவும், மறுபக்கம், தெய்வீக அருளின் அடையாளமாகவும் இருக்கும் தண்ணீர், நற்செய்தியில் நடைபெறும் உரையாடலின் மையமாக விளங்குகிறது என்று எடுத்துரைத்தார்.

வாழ்வுதரும் நீரின் ஆதாரம் இறைவனே என்பதை விவிலியத்தின் சில பகுதிகளிலிருந்து எடுத்து விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமாரியப் பெண்ணுக்கு இயேசு வாக்களித்த உயிருள்ள தண்ணீர் என்பது, சிலுவையில் அவரது விலாவிலிருந்து இரத்தமும், நீரும் வெளியேறியபோது உண்மையாகிறது என்று கூறினார்.

வாழ்வுதரும் தண்ணீர் என்ற இக்கொடை, சான்று பகர்தலின் ஆதாரமாகவும் உள்ளது என்பதையும் எடுத்துரைத்தத் திருத்தந்தை, சமாரியப்பெண் ஊருக்குள் சென்று, தனக்கு நிகழ்ந்ததைக் கூறியதை, மேற்கோளாகச் சுட்டிக்காட்டினார்.

16 March 2020, 15:19