திருத்தந்தை பிரான்சிஸ்  திருத்தந்தை பிரான்சிஸ்  

எனது அறையிலிருந்தே தியான உரைகளைக் கேட்கிறேன்

இம்மாதத்தில் இத்தாலியின் அச்சி நகரில் நடைபெறவிருந்த “பிரான்சிஸ் பொருளாதாரம்” என்ற பன்னாட்டு உச்சி மாநாடு, வருகிற நவம்பர் மாதம் வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்:  வத்திக்கான் செய்திகள்

கடவுளோடு கொண்டிருக்கும் நெருங்கிய நட்புறவுக்கு, மோசே ஓர் எடுத்துக்காட்டு என்று, திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும், திருப்பீட தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகளுக்கு, தியானச் சிந்தனை வழங்கும் இயேசு சபை அருள்பணி பியெத்ரோ போவாத்தி அவர்கள் கூறினார்.

உரோம் நகருக்கருகே அரிச்சா (Ariccia) எனுமிடத்தில் அமைந்துள்ள, தெய்வீகப் போதகர் தியான இல்லத்தில், திருப்பீடத்தின் உயர் அதிகாரிகளுக்கு தியான உரைகள் ஆற்றிவரும், திருத்தந்தை விவிலியப் பணிக்குழுவின் செயலர் அருள்பணி போவாத்தி அவர்கள், “நெருப்பில் புதர் – கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே சந்திப்பு” என்ற தலைப்பில், முதல்நாள் தியானச் சிந்தனைகளை வழங்கினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணி போவாத்தி அவர்களுக்கு அனுப்பியுள்ள மடலில், வத்திக்கானில் சாந்தா மார்த்தா இல்லத்தில் தனது அறையில் இருந்துகொண்டே தியான உரைகளைக் கேட்டு தியானிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு,  அருள்பணி போவாத்தி அவர்களுக்கும், திருப்பீட உயர் அதிகாரிகளுக்கும் தன் செபங்களையும், ஆசீரையும் அம்மடலில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவெளிப்பாட்டை மனதார ஏற்றல், செபத்தின் எடுத்துக்காட்டு போன்ற தலைப்புகளில் முதல் நாள் தியானச் சிந்தனைகளை வழங்கினார், அருள்பணி போவாத்தி. இந்த ஆண்டு தியானம், மார்ச் 06, வருகிற வெள்ளிக்கிழமை முடிவடையும்.

“பிரான்சிஸ் பொருளாதாரம்” உச்சி மாநாடு

இத்தாலியில் கொரோனா தொற்றுக்கிருமி தாக்கத்தால், இம்மாதத்தில் அச்சி நகரில் நடைபெறவிருந்த “பிரான்சிஸ் பொருளாதாரம்” என்ற பன்னாட்டு உச்சி மாநாடு, வருகிற நவம்பர் மாதம் வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று, அம்மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

அசிசி நகரில் இம்மாதம் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில், உலகின் இளம் தொழில்முனைவோர், பொருளாதார நிபுணர்கள் போன்ற பலர் பங்குபெறவிருந்த பொருளாதார உச்சி மாநாடு, வருகிற நவம்பர் மாதம் 21ம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மார்ச் மாத மாநாட்டில், 115 நாடுகளிலிருந்து ஏறத்தாழ இரண்டாயிரம் பொருளாதார நிபுணர்கள் மற்றும், இளம் தொழில்முனைவோர் கலந்துகொள்ளவிருந்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 March 2020, 14:56