தேடுதல்

இயேசுவும் திருத்தூதர்களும் இயேசுவும் திருத்தூதர்களும் 

இறையழைத்தல்களை தொடர்ந்து ஊக்குவிக்க அழைப்பு

சவால் நிறைந்த வாழ்வெனும் படகுப் பயணத்தில் நாம் தனியாக இல்லை, இயேசு நம்முடன் இருக்கிறார், நம்மை வழிநடத்துகிறார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இறையழைத்தலுக்காக இறைவேண்டல் செய்யும் உலக நாளிலும், நம் கிறிஸ்தவக் குழுமங்களில் நடைபெறும் மேய்ப்புபணிகளிலும் இறையழைத்தல்களைத் தொடர்ந்து ஊக்குவிக்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று திருஅவைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

வருகிற மே மாதம் 3ம் தேதி சிறப்பிக்கப்படும் 57வது உலக இறையழைத்தல் நாளுக்கென, மார்ச் 24, இச்செவ்வாயன்று செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விசுவாசிகள் அனைவரும் தங்கள் வாழ்வில் கடவுளின் அழைப்பை நன்றியுணர்வோடு கண்டுகொள்வதற்குத் திருஅவை உதவுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

விசுவாசிகள், கடவுளுக்கு ஆகட்டும் என்று சொல்வதற்குத் துணிச்சலைப் பெறவும், தங்கள் வாழ்வின் சோர்வுகள் அனைத்தையும் கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தால் மேற்கொள்ளவும், தங்களின் வாழ்வை, கடவுளுக்கும், சகோதரர், சகோதரிகளுக்கும், உலகுக்கும் புகழ்ச்சிப் பண்ணாக அமைக்கவும் திருஅவை உதவுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆர்ஸ் நகர் கூரேதாஸ் அவர்கள் இறைவனடி சேர்ந்ததன் 160ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அனைத்து அருள்பணியாளர்களுக்கு நன்றி கூறி, அவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி, தான் எழுதிய மடலில், வேதனை, நன்றியுணர்வு, ஊக்கப்படுத்தல், இறைவனைப் போற்றுதல் ஆகிய சொல்லாடல்களைப் பயன்படுத்தியிருந்தேன், இவை பற்றி, 57வது உலக நாளன்று, இறைமக்கள் எல்லாருக்கும் கூற விழைகிறேன் என்று, இச்செய்தியைத் துவக்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வாழ்வெனும் படகுப் பயணம்

கூட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்த அப்பங்களைப் பலுகச் செய்த புதுமைக்குப்பின், இயேசு மக்களை அனுப்பிவிட்டு, தன் சீடரை உடனே படகேறித் தமக்குமுன் அக்கரைக்குச் செல்லுமாறு (cf.மத்.14:22-33) கூறினார், சீடர்கள், ஏரியைக் கடந்த நிகழ்வு, நம் சொந்த வாழ்வுப் பயணம் பற்றிச் சொல்கிறது என்று, அப்படகுப் பயணம் பற்றி விளக்கியுள்ளார், திருத்தந்தை.

உண்மையில் நம் வாழ்வுப் படகு, பாதுகாப்பான துறைமுகத்தை நோக்கி பதட்டத்துடன் மெதுவாக முன்னேறுகிறது, கடலின் ஆபத்துக்களை எதிர்கொள்ளவும் தயாராகிறது, அதேநேரம், சரியான பாதையில் மாலுமி கொண்டு செலுத்துகிறார் என்ற நம்பிக்கையிலும் நகர்கின்றது என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை,  எனினும், இன்னல், சந்தேகம், அச்சம் போன்ற புயல்களால் படகு தன் பாதையைவிட்டு தடம்புரளக்கூடும் என்றும் கூறியுள்ளார்.

நாசரேத் ஆசிரியரைப் பின்பற்ற அழைக்கப்பட்டவர்களின் இதயங்களிலும் இதேபோன்று ஏதாவது நிகழக்கூடும், இந்த சவால்நிறைந்த படகுப் பயணத்தில் நாம் தனியாக இல்லை என்பதை நற்செய்தி நமக்குச் சொல்கின்றது என்று கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நன்றியுணர்வு             

இறையழைத்தலின் முதல் சொல் நன்றியுணர்வு, கடவுள் நம்மை அழைக்கும்போது, நாம் சேரவேண்டிய இடம் எதிரேயுள்ள கரை என்றும், படகில் பயணம் மேற்கொள்ள அவர் நமக்குத் துணிச்சலை வழங்குகிறார் என்றும், நம்மை அவர் அழைக்கும்போது, நம் துறைமுகமாக அவர் இருக்கிறார், பயணத்தில் நாம் சந்திக்கும் இன்னல்களைத் தடை செய்கிறார், நம்முடன் இருந்து நம்மை வழிநடத்துகிறார், அலைகள் நிறைந்த நீரில்கூட நாம் நடக்கச் செய்கிறார் என்றும் திருத்தந்தை கூறினார்.               

ஒவ்வோர் அழைப்பும், நம்மை ஆண்டவர் சந்திக்கவரும் அன்புப் பார்வையிலிருந்து பிறக்கிறது என்றும், இறையழைத்தல் என்பது, நாமாகத் தேர்ந்துகொள்வது அல்ல, மாறாக, ஆண்டவரின் விலைமதிப்பற்ற அழைப்புக்குப் பதிலளிப்பதாகும் என்று கூறியுள்ள திருத்தந்தை, நன்றியுணர்வுடன் நாம் நம் இதயங்களைத் திறந்து வைத்து, நம் வாழ்வில் கடவுள் அழைப்பை ஏற்கும்போது, நம் அழைப்பை கண்டுணர்வதிலும், அதை ஏற்பதிலும் வெற்றியடைவோம் என்று கூறினார்.

துணிவு

இறையழைத்தலின் இரண்டாவது சொல், துணிவு என்று குறிப்பிட்டு அதைப் பற்றி விளக்கியுள்ள திருத்தந்தை, இயேசு கடல்மீது நடந்துவருவதைப் பார்த்த சீடர்கள் முதலில் அவர் ஒரு பேய் என்று அச்சத்தால் அலறினர், அச்சமயத்தில் இயேசு அவர்களிடம், “துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்” (மத்.14:27).  என்று சொன்னார், இயேசுவின் இந்த வார்த்தைகளே, நம் இறையழைத்தல் பயணத்திலும் தொடர்ந்து துணை வரவேண்டும் என்று கூறினார்.

நம் பயணத்தை, நம் வளர்ச்சியை, ஆண்டவர் நமக்கென குறித்து வைத்த பாதையைத் தேர்ந்தெடுக்கையில், சில பேய்கள் நம் இதயங்களைத் துன்புறுத்துகின்றன, திருமணம், திருப்பணி குருத்துவம், அர்ப்பணிக்கப்பட்ட துறவு வாழ்வு போன்ற நம் வாழ்வின் நிலைகளை ஏற்கும்போதும், பாதுகாப்பான கரைகளைவிட்டு வாருங்கள் என்று அழைக்கப்படும்போதும், இந்த அழைப்பு எனக்குரியது அல்ல என்ற, நம் முதல் உணர்வு நம்பிக்கையின்மை என்ற பேயிடமிருந்து வருகிறது என்று திருத்தந்தை கூறியுள்ளார்.  

திருமணம், திருப்பணி குருத்துவம், அர்ப்பணிக்கப்பட்ட துறவு வாழ்வு போன்ற வாழ்வின் அடிப்படையான தெரிவுகளுக்குத் துணிச்சல் அவசியம் என்பதை ஆண்டவர் அறிந்திருக்கிறார், “துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்” என்ற வார்த்தைகளால் நமக்கு உறுதியளிக்கிறார் என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.

நம் வாழ்வில் சோர்வோ அச்சமோ நம்மை மூழ்கடிக்கையில் இயேசு நமக்கு தன் கரங்களை நீட்டுகிறார், நம் அழைப்பை மகிழ்வோடும், மனஉறுதியோடும் வாழ்வதற்குத் தேவையான ஆர்வத்தை அவர் அருளுகிறார், இயேசு தன் சீடர்களின் படகில் ஏறியதும் காற்று அடங்கியது, அதேபோல் நம் வாழ்வின் சோதனைகள் மற்றும் புயல் நேரங்களிலும் இயேசு செயலாற்றுகிறார் என்று கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சமுதாயத்தில் முக்கியமான பொறுப்புக்களை வகித்திருப்போர், குறிப்பாக, அருள்பணித்துவ மற்றும், அர்ப்பணிக்கப்பட்ட துறவு வாழ்வை மேற்கொண்டுள்ளோர், பணிச்சுமையில் தனிமையை உணரக்கூடும், வருங்காலம் பற்றிய அச்சம், நிச்சயமற்ற மற்றும் பாதுகாப்பற்ற நிலையின் சுமை, இறையழைப்பின் ஆர்வச்சுடரை, மெல்ல மெல்ல அணைக்கக்கூடும், அந்நேரங்களில் இயேசுவின் சொற்களை இதயத்தில் இருத்துமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

போற்றுதல்

புயலால் அலைகழிக்கப்படும் தண்ணீரின் நடுவிலும், நம் வாழ்வு இறைவனைப் போற்றவதற்கு திறந்த மனதாய் இருக்குமாறு மாற வேண்டும், இதுவே இறையழைத்தலின் இறுதிச் சொல் என்று கூறியுள்ள திருத்தந்தை, இறையழைப்பிற்கு, ஆகட்டும் என்று பதில் சொல்ல, அன்னை மரியாவின் உதவியை நாடுவோம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 March 2020, 15:43