'Divino Amore' அன்னை மரியா திருத்தலத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்(கோப்பு படம்) 'Divino Amore' அன்னை மரியா திருத்தலத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்(கோப்பு படம்) 

நோயுற்றோரின் நலமான அன்னை மரியாவுக்கு செபம்

சிலுவையடியில் நின்று, தன் மகனின் கொடூரமான மரணத்தைக் கண்டபோதும், தன் நம்பிக்கையைக் கைவிடாமல் இருந்த அன்னை மரியா, தொற்றுக்கிருமி துயர வேளையில், நாம் நம்பிக்கை இழக்காமல் இருக்க நமக்கு உதவவேண்டும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நோயுற்றோரின் நலமாக விளங்கும் அன்னை மரியாவின் பாதுகாப்பை வேண்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு செபத்தை உருவாக்கியுள்ளார்.

மார்ச் 11ம் தேதி, இப்புதன்கிழமை, உரோம் மறைமாவட்டத்தின் செபம், மற்றும் உண்ணாநோன்பு நாளாகக் கடைபிடிக்கப்பட்டதையடுத்து, அன்று மாலையில், அன்னை மரியாவின் திருத்தலங்களில் ஒனறான, 'Divino Amore' என்ற ஆயலத்தில், கர்தினால் ஆஞ்செலோ தே தொனாத்திஸ் அவர்கள் நிறைவேற்றிய திருப்பலிக்கு முன்னதாக, திருத்தந்தை, இந்த நாளையொட்டி வெளியிட்டியிருந்த காணொளிச் செய்தியொன்று ஒளிபரப்பானது.

இக்காணொளிச் செய்தியில், அன்னை மரியாவை நோக்கி திருத்தந்தை உருவாக்கியுள்ள செபத்தில், சிலுவையடியில் நின்று, தன் மகனின் கொடூரமான மரணத்தைக் கண்டபோதும், தன் நம்பிக்கையைக் கைவிடாமல் இருந்த அன்னை மரியா, தொற்றுக்கிருமி துயர வேளையில், நாம் நம்பிக்கை இழக்காமல் இருக்க நமக்கு உதவவேண்டும் என்ற வேண்டுதலை எழுப்பியுள்ளார்.

உரோம் நகரைக் காத்த அன்னை மரியா

1944ம் ஆண்டு, நாத்சி படையின் ஆக்ரமிப்பிலிருந்து உரோம் நகரைக் காத்தருள, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், உரோம் மக்களோடு இணைந்து, இத்திருத்தலத்தில், அன்னை மரியாவின் திருஉருவத்திற்கு முன்னர், வேண்டியதுபோல், தற்போது, இந்த தொற்றுக்கிருமியின் தாக்குதலிலிருந்து உரோம் நகரைக் காக்க திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரோம் மக்களுடன் இணைந்து செபித்துள்ளார் என்று, வத்திக்கான் செய்தித்துறை தலைவர், மத்தேயோ புரூனி (Matteo Bruni) அவர்கள் கூறினார்.

திருப்பீடத்தின் அவசரக்கூட்டம்

இதற்கிடையே, மார்ச் 12, இவ்வியாழன் காலை, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் தலைமையில், திருப்பீடத்தின் அனைத்து துறைகளையும் சார்ந்தோருடன், அவசரக்கூட்டம் ஒன்று நடைபெற்றது.

COVID-19 நெருக்கடியையொட்டி, திருப்பீடத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வரைமுறைகளையும், எந்தெந்த துறைகள் எந்தெந்த வழிகளில் செயல்படவேண்டும் என்பதையும் குறித்த முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டன என்று, வத்திக்கான் செய்தித்துறை அறிவித்துள்ளது.

திருத்தந்தை உருவாக்கிய செபம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நோயுற்றோரின் நலமாக விளங்கும் அன்னை மரியாவை நோக்கி எழுப்பியுள்ள செபம்:

ஓ, அன்னை மரியாவே, எங்கள் வாழ்வுப் பயணம் முழுவதிலும், மீட்பு மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக நீர் ஒளிர்கின்றீர். சிலுவையடியில், இயேசுவின் துயரத்தில் பங்கேற்ற வேளையிலும், நம்பிக்கையைக் காத்த நோயுற்றோரின் நலமே, உம்மிடம் எங்களையே ஒப்படைக்கிறோம். உரோம் மக்களின் பாதுகாவலே, கானா திருமணத்தில் தேவையறிந்து செயல்பட்ட நீர், எங்கள் தேவைகளையும் அறிவீர். எங்கள் துயரங்களும், போராட்டங்களும் நீங்கி, மகிழ்வும், கொண்டாட்டமும் வந்து சேருவனவாக.

இறையன்பின் அன்னையே, தந்தையின் திருவுளத்தையும், இயேசுவின் சொற்களையும் கேட்டு நடக்க எங்களுக்கு உதவியருளும். சிலுவையின் வழியே, எங்கள் துன்பங்களையும், வேதனைகளையும் தன் மீது சுமந்து, உயிர்ப்பின் மகிழ்வுக்கு எங்களை அழைத்துச் செல்பவர் இயேசுவே.

உமது பாதுகாப்பை நம்பி வந்துள்ள எங்கள் வேண்டுதலை தள்ளிவிடாமல், எங்களை அனைத்து ஆபத்துக்களிலிருந்தும் காத்தருளும். ஆமென்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 March 2020, 14:35