தேடுதல்

Vatican News
புதன் மறைக்கல்வியுரையின்போது - 250320 புதன் மறைக்கல்வியுரையின்போது - 250320  (ANSA)

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை - மங்கள வார்த்தை விழா

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர், மனித வாழ்வின் மதிப்பு மற்றும் மீறமுடியாத தன்மை குறித்த எவாஞ்ஜேலியும் வீத்தே (Evangelium vitae) என்ற ஏட்டினை வெளியிட்டார் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்-வத்திக்கான்

மார்ச் 25ம் தேதி, இப்புதனன்று, திருஅவையில், ஆண்டவரின் பிறப்பு அறிவிப்பு பெருவிழா சிறப்பிக்கப்படும் நிலையில், அன்னை மரியா குறித்த புதன் மறைக்கல்வி உரையை தன் நூலக அறையிலிருந்து காணொளி வழியாக வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். முதலில் லூக்கா நற்செய்தியின் முதல் பிரிவிலிருந்து  ஒரு பகுதி வாசிக்கப்பட்டது.

வானதூதர் அவரைப் பார்த்து, “மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்., இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்……… அதற்கு மரியா வானதூதரிடம், “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” என்றார். வானதூதர் அவரிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்.…… பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார். (லூக்.1,30-31.34-35.38)

பின்னர் திருத்தந்தையின் மறைக்கல்வியுரை தொடர்ந்தது.

அன்பு சகோதர சகோதரிகளே, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர், இதே மார்ச் 25ம் தேதி, மங்கள வார்த்தை திருவிழாவின்போது, மனித வாழ்வின் மதிப்பு மற்றும் மீறமுடியாத தன்மை குறித்த எவாஞ்ஜேலியும் வீத்தே (Evangelium vitae) என்ற ஏட்டினை வெளியிட்டார் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால்.

நாம் இப்போதுதான் ஆண்டவரின் பிறப்பு அறிவிப்பு குறித்த நற்செய்தி வாசகத்திற்கு செவிமடுத்தோம். கபிரியேல் தூதருக்கு, ஆகட்டும் என உரைப்பதன் வழியாக, வார்த்தை மனுவுரு எடுப்பதற்கு அன்னை மரியா உதவுகிறார், இறைமகனுக்குத் தாயாக அவர் இசைவளிக்கிறார். இதன் வழியாக அன்னை மரியாவில், இறைவன் மனிதரைச் சந்திப்பது ஏதுவாகிறது. இயேசுவின் பிறப்பு அறிவிப்பிற்கும், வாழ்வின் நற்செய்திக்கும் இடையேயான பிணைப்பு, புனித ஜான் பவுல் தன் மடலில் கூறுவதுபோல், நேரடியானது மற்றும் ஆழமானது. உலகின் பொருளாதாரத்தையும், மனித வாழ்வையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இன்றைய கொள்ளை நோய் பிரச்சனையின் பின்னணியில், இந்த புனித திருத்தந்தையின் ஏட்டில் காணப்படும் படிப்பினைகளை மீண்டும் நோக்குகிறோம். இன்றைய சூழலில் முதியோர்களோடும், நோயாளிகளோடும், தனிமையில் வாடுவோருடனும், கைவிடப்பட்டோருடனும் பணியாற்றி, மௌனச் சான்றுகளாக இருப்போரை, இந்நேரத்தில் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். இவர்கள் வாழ்வின் நற்செய்தியை செயலில் காட்டுகின்றனர். அன்னை மரியாவும், கபிரியேல் தூதரிடமிருந்து செய்தியைப் பெற்றபின்னர், உதவியின் தேவையிலிருந்த எலிசபெத்துக்கு பணிவிடை புரிய கிளம்பிச் சென்றார். பாதுகாக்கவும், ஊக்கமளிக்கவும் முன்வைக்கப்படும் வாழ்வு என்பது, புரிந்துகொள்ள முடியாத ஒரு கருப்பொருள் அல்ல. இது, கருவில் வளரும் குழந்தையிலும், தீராத நோயில் வாழ்வோருடனும், அகதிகளுடனும், ஒடுக்கப்பட்டோருடனும் தன் பிரசன்னத்தைக் கொண்டுள்ளது. வாழ்வின் முழுமையைக் கொண்டாட ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டுள்ளோம். இது, திருஅவையின் தாய்க்குரிய  அக்கறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மனித மாண்பு, மற்றும், வாழ்வுக்கு வழங்கப்படும் அனைத்து விதமான அச்சுறுத்தல்களும், தாய்மைப் பண்புடைய திருஅவையின் இதயத்தில் உணரப்படுகின்றன.

மனித வாழ்வு என்பது மதிப்பிப்பட முடியாத உயரிய ஒன்று. இது, வார்த்தைகளாலும் செயல்பாடுகளாலும் துணிச்சலுடன் சான்று பகரப்படவேண்டிய ஒன்று. மனிதகுல குடும்பத்திற்கும், அதன் அங்கத்தினர்களுக்கும் ஒருமைப்பாட்டுணர்வுடனும், உடன்பிறப்பு அன்புடனும் செயல்பட அழைப்பு விடுக்கிறது.

25 ஆண்டுகளுக்கு முன்னர் புனித திருத்தந்தை ஜான் பால் அவர்கள் விடுத்த விண்ணப்பத்தை நானும் மீண்டும் இணைந்து உறுதிசெய்கிறேன். அனைத்து மனித வாழ்வையும் மதித்து, பாதுகாத்து, அன்புகூர்ந்து பணிபுரிவோம். இந்தப் பாதையில்தான், நாம் நீதி,வளர்சசி,விடுதலை,அமைதி, மற்றும், மகிழ்வைப் பெறமுடியும் (எவாஞ்ஜேலியும் வீத்தே, 5).

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். மார்ச் 25, இப்புதன் நண்பகலில், திருத்தந்தையின் அழைப்பின்பேரில், உலகின் அனைத்து கிறிஸ்தவர்களும் செபித்த இயேசு கற்றுக்கொடுத்த செபம் பற்றியும் கூறி, தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

25 March 2020, 16:37