தேடுதல்

ஆள் நடமாட்டமற்ற வளாகத்தைப் பார்வையிடுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ் ஆள் நடமாட்டமற்ற வளாகத்தைப் பார்வையிடுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்  

நோயுற்றோருடனும், நலப் பணியாளருடனும் இணைந்து...

கொரோனா தொற்றுக்கிருமியின் பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டு வாழும் நிலையில், திருஅவையில் ஒன்றிப்பின் மதிப்பீடுகளை ஆழப்படுத்தும் வழிகளை மீண்டும் கண்டுகொள்ள நாம் அழைக்கப்பட்டுள்ளோம் - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமியின் பாதிப்பால் நாம் ஓரளவு தனிமைப்படுத்தப்பட்டு வாழும் நிலையில், திருஅவையில், ஒன்றிப்பின் மதிப்பீடுகளை ஆழப்படுத்தும் வழிகளை மீண்டும் கண்டுகொள்ள நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

தன் நூலக அறையிலிருந்து நேரடி ஒளிபரப்பின் வழியே வழங்கிய ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில், ஒன்றிப்பு குறித்து எடுத்துரைத்தத் திருத்தந்தை, இயேசுவைத் தலையாகக் கொண்டுள்ள திருஅவையில், நாம் அனைவரும் ஒரே உடலாக உள்ளோம், தனிமையில் இல்லை என்று எடுத்துரைத்தார்.

திருநற்கருணை எனும் அருளடையாளத்தைப் பெறஇயலாதச் சூழலில், திருநற்கருணையுடன் கொள்ளும் ஆன்மீக ஒன்றிப்பின் வழியாகவும், செபத்தின் வழியாகவும் நாம் ஊட்டம் பெறுகிறோம் என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நோயுற்றோருடனும், அவர்களுக்காகப் பணியாற்றுவோருடனும் தன் நெருக்கத்தை புதுப்பிப்பதாகக் கூறியத் திருத்தந்தை, வீட்டிற்குள்ளேயே அடைபட்டிருக்கும் மக்கள், ஏழைகள், வீடற்றோரிடையே பணியாற்றுவோர், மற்றும் சுயவிருப்பப் பணியாளர்களுடன் தன் ஒன்றிப்பை வெளியிடுவதாக மூவேளை செப உரையின் இறுதியில் கூறினார்.

துன்பகரமான இவ்வேளையில், எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்காகவும், நன்றி கூறுவதாகத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காக செபிக்கும்படி விண்ணப்பித்து, தன் மூவேளை செப உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 March 2020, 15:22