"பெரிய புனித ஜான்பால்" என்று பொருள்படும் "San Giovanni Paolo Magno" என்று இத்தாலிய மொழியில் தலைப்பிடப்பட்டுள்ள நூல் "பெரிய புனித ஜான்பால்" என்று பொருள்படும் "San Giovanni Paolo Magno" என்று இத்தாலிய மொழியில் தலைப்பிடப்பட்டுள்ள நூல் 

"பெரிய புனித ஜான்பால்" – திருத்தந்தையின் புதிய நூல்

புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களது பிறப்பின் முதல் நூற்றாண்டு, 2020ம் ஆண்டு சிறப்பிக்கப்படுவதையொட்டி, வெளியாகும் புதிய நூல்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லுயீஜி மரிய எப்பிகோக்கோ (Luigi Maria Epicoco) என்ற இத்தாலிய அருள்பணியாளருடன் இணைந்து, புனித திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களைக் குறித்த தன் கருத்துக்களை ஒரு நூலாக வெளியிட்டுள்ளார்.

2019ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2020ம் ஆண்டு சனவரி மாதம் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும், அருள்பணி எப்பிகோக்கோ அவர்களுக்கும் இடையே நிகழ்ந்த பல்வேறு உரையாடல்களின் விளைவாக, இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது என்று, அருள்பணி எப்பிகோக்கோ அவர்கள், இந்நூலின் அணிந்துரையில் கூறியுள்ளார்.

1920ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி பிறந்த புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களது பிறப்பின் முதல் நூற்றாண்டு, இவ்வாண்டு சிறப்பிக்கப்படுவதையொட்டி, இவ்வாண்டு, பிப்ரவரி 11ம் தேதி, வருகிற செவ்வாயன்று, இந்நூல் இத்தாலிய மொழியில் வெளியாகிறது.

"பெரிய புனித ஜான்பால்" என்று பொருள்படும் "San Giovanni Paolo Magno" என்று இத்தாலிய மொழியில் தலைப்பிடப்பட்டுள்ள இந்நூலை, புனித பவுல் பதிப்பகம் வெளியிடுகிறது.

1978ம் ஆண்டு, கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப்பொறுப்பை ஏற்ற புனித 2ம் ஜான்பால் அவர்கள், ஹோர்கே மாரியோ பெர்கோலியோ என்ற இயேசு சபை அருள்பணியாளரை, 1992ம் ஆண்டு, புவனஸ் அயிரஸ் உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராகவும், பின்னர், 1998ம் ஆண்டு, அவரை, அதே மறைமாவட்டத்தின் பேராயராகவும் நியமித்தார்.

2001ம் ஆண்டு புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்ட பெர்கோலியோ அவர்கள், 2013ம் ஆண்டு, கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்று, 2014ம் ஆண்டு, அருளாளர் 2ம் ஜான்பால் அவர்களை, புனிதராக உயர்த்தினார்.

இலாத்தரன் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் பேராசிரியாகப் பணியாற்றிவரும், 39 வயதான அருள்பணி எப்பிகோக்கோ அவர்கள், 2014ம் ஆண்டு, "2ம் ஜான்பால்: ஒரு புனித திருத்தந்தையின் நினைவுகள்" என்ற நூலை, பேராயர் பியெரோ மரீனி அவர்களுடன் இணைந்து வெளியிட்டார்.

ஆன்மீகத்தை மையப்படுத்தி, அருள்பணி எப்பிகோக்கோ அவர்கள், உருவாக்கியுள்ள பல நூல்களில் ஒன்றான, "சாட்சிய வாழ்வின் ஆன்மீகம்" என்ற ஒரு நூலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடத்தில் பணியாற்றும் அனைவருக்கும் தன் கிறிஸ்மஸ் பரிசாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 February 2020, 15:01