திருத்தந்தையின் பிப்ரவரி மாதச் செபக் கருத்து காணொளி திருத்தந்தையின் பிப்ரவரி மாதச் செபக் கருத்து காணொளி 

புலம்பெயர்ந்தோரின் கதறலைக் கேட்க...

புலம்பெயர்ந்த சகோதரர், சகோதரிகளின், மற்றும், குற்றக் கடத்தல்களில் பாதிக்கப்பட்டவர்களின் கதறலைக் கேட்டுக் கருத்தில் கொள்ள நாம் மன்றாடுவோம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

புலம்பெயர்ந்தோரில் பலர், மனித வர்த்தக குற்றத்திற்குப் பலியாகியிருக்கும்வேளை, அம்மக்களின் கதறலுக்குச் செவிமடுக்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் பிப்ரவரி மாத செபக் கருத்து வழியாக, உலகினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மனித சமுதாயம் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக, ஒவ்வொரு மாதமும் தன் செபக்கருத்தை வெளியிட்டு, அது பற்றி காணொளியில் விளக்கி வருகின்ற  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி மாதச் செபக் கருத்தில், புலம்பெயர்ந்தோரை மையப்படுத்தி பேசியுள்ளார்.

மனிதக் கடத்தல் மற்றும், மனித வர்த்தக குற்றத்திற்குப் பலியாகியிருக்கும் புலம்பெயர்ந்துள்ள நம் சகோதரர், சகோதரிகளின் கதறல் கேட்கப்படவும், அக்கதறலை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவும் வேண்டுமென செபிப்போம் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

மக்கள் புலம்பெயர்வதற்கு காரணிகளாக உள்ள, மனிதக் கடத்தல் மற்றும், மனித வர்த்தகம் தவிர, பொருளாதார ஆதாயத்திற்காக, மனிதர் எதையும் செய்வதற்கு விரும்பும் ஊழலும் ஒரு காரணமாக அமைகின்றது என்று, திருத்தந்தை, காணொளியில் பேசியுள்ளார்.

மனிதரின் ஊழல் தொழிலால் திரட்டப்படும் பணம், இரத்தப்பணம் என்று நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லை என்றும், அது இரத்தப் பணம்தான் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

புலம்பெயர்ந்த சகோதரர், சகோதரிகளின், மற்றும், குற்றக் கடத்தல்களில் பாதிக்கப்பட்டவர்களின் கதறலைக் கேட்டுக் கருத்தில் கொள்ள நாம் மன்றாடுவோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி மாத செபக் கருத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 February 2020, 14:58