தேடுதல்

Vatican News
புதன் பொது மறைக்கல்வி உரை 190220 புதன் பொது மறைக்கல்வி உரை 190220  (Vatican Media)

கனிவு, இதயங்களை வெல்லும் – திருத்தந்தையின் டுவிட்டர்

"கனிவுடையோர் பேறுபெற்றோர்" (மத். 5:5) என்று இயேசு வழங்கிய கூற்றை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரு டுவிட்டர் செய்திகளை இப்புதனன்று வெளியிட்டார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்" (மத். 5:5) என்று இயேசு வழங்கிய கூற்றை மையப்படுத்தி, தன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்கூற்றை மையப்படுத்தி, இரு டுவிட்டர் செய்திகளை இப்புதனன்று வெளியிட்டார்.

"கனிவு, இதயங்களை வெல்லும், நட்பைப் பாதுகாக்கும், அதைக்காட்டிலும் கூடுதலாக, கோபம் கொள்வோர் பின்னர் அமைதியடைய கனிவு உதவும். இதனால், உறவுகள் மீண்டும் கட்டியெழுப்பப்படும்" என்ற சொற்களை திருத்தந்தை தன் முதல் டுவிட்டர் செய்தியில் பதிவு செய்தார்.

"கனிவுடையோர் உரிமை கொண்டாடும் உலகம், நமது சகோதரர், சகோதரிகளே. ஒருவருடைய இதயத்தைக் காட்டிலும் சிறந்த உலகம் இருக்கமுடியாது. சகோதரர், சகோதரிகளிடையே அமைதியை உருவாக்கினால், அந்த நாடே, உரிமை கொண்டாடக் கூடிய அழகிய நாடாகும்" என்ற கருத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இரண்டாவது டுவிட்டர் செய்தியில் வெளியானது.

மேலும், 2020ம் ஆண்டு தவக்காலத்திற்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கியுள்ள தவக்காலச் செய்தி, பிப்ரவரி 24 வருகிற திங்களன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம்" (2 கொரி. 5:20) என்று, திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்குக் கூறிய சொற்களை தலைப்பாகக் கொண்டு திருத்தந்தை உருவாக்கியுள்ள இச்செய்தியை, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிடுகிறார்.

மேலும், மத்தியத்தரைக் கடலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பணியாற்றும் ஆயர்களின் கூட்டம் ஒன்றை, இத்தாலிய ஆயர் பேரவை, இத்தாலியின் பாரி நகரில், பிப்ரவரி 19, இப்புதன் முதல், 23 வருகிற ஞாயிறு வரை ஏற்பாடு செய்துள்ளது.

"மத்தியக் கிழக்குப் பகுதி, அமைதியின் முகப்பு" என்ற தலைப்பில், நடைபெறும் இக்கூட்டத்தின் இறுதி நாளான ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாரி நகர் சென்று இக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்

19 February 2020, 14:49