நோயுற்ற ஒரு குழந்தையை ஆசீர்வதிக்கும் திருத்தந்தை நோயுற்ற ஒரு குழந்தையை ஆசீர்வதிக்கும் திருத்தந்தை 

நோயாளிகள், நலப்பணியாளர்களுக்கு திருத்தந்தை செபம்

நோயின் பளுவைச் சுமக்கின்றவர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும், அவர்களைப் பராமரிக்கும் நலவாழ்வுப் பணியாளர்களை, கன்னி மரியாவிடம் அர்ப்பணிக்கின்றேன்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

லூர்து நகர் அன்னை மரியா விழா மற்றும், 28வது உலக நோயாளிகள் நாளான, பிப்ரவரி 11, இச்செவ்வாயன்று, நோயாளிகள் மற்றும், அவர்களின் குடும்பங்களுக்காக, தன் டுவிட்டர் செய்திகள் வழியாக இறைவேண்டல் செய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

#WorldDayOfTheSick #OurLadyOfLourdes என்ற ஹாஷ்டாக்குடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள முதல் டுவிட்டர் செய்தியில், “நோயின் பளுவைச் சுமக்கின்றவர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும், அவர்களைப் பராமரிக்கும் நலவாழ்வுப் பணியாளர்களை, நோயாளிகளுக்கு நலமளிக்கும் கன்னி மரியாவிடம் அர்ப்பணிக்கின்றேன். அவர்கள் அனைவருடன் செபத்தில் ஒன்றித்திருக்கிறேன் என உறுதியளிக்கிறேன்” என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.

#WorldDayOfTheSick என்ற ஹாஷ்டாக்குடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள இரண்டாவது டுவிட்டர் செய்தியில், “பலவீனம், துன்பம், மற்றும், வலுவின்மையால், கடுந்துன்பத்தில் இருப்பவர்களுக்கு இயேசு கிறிஸ்து தம் இரக்கத்தைப் பொழிவாராக. நாம் அனைவரும் அவரின் கனிவான அன்பை அனுபவிக்கும்பொருட்டு, அவர் தம் வாழ்வில் பங்குகொள்ள அழைப்பு விடுக்கிறார்” என்ற வார்த்தைகள் பதிவாகியிருந்தன.   

“பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத்.11,28)” என்ற தலைப்பில், பிப்ரவரி 11, இச்செவ்வாயன்று 28வது உலக நோயாளிகள் நாள் சிறப்பிக்கப்பட்டது.   

நோயாளிகளும், அவர்களின் குடும்பங்களும் அனுபவிக்கும் வேதனை குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்தில், 1992ம் ஆண்டு, மே மாதம் 13ம் தேதி, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், உலக நோயாளிகள் நாளை உருவாக்கினார். இந்த உலக நாள், கத்தோலிக்கத் திருஅவையில், 1993ம் ஆண்டிலிருந்து, ஒவ்வோர் ஆண்டும், லூர்து அன்னை விழாவான பிப்ரவரி 11ம் தேதி சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

இதே பிப்ரவரி 11ம் தேதி, 2013ம் ஆண்டில் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், திருஅவையின் தலைமைப்பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பிரேசில் நாட்டு ஆயர்கள், அத் லிமினா சந்திப்பையொட்டி, இச்செவ்வாய் காலையில் திருத்தந்தையை திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 February 2020, 14:27