தேடுதல்

Vatican News
ஆர்த்தடாக்ஸ் திருஅவைகளின் பிரதிநிதிகள் சந்திப்பு ஆர்த்தடாக்ஸ் திருஅவைகளின் பிரதிநிதிகள் சந்திப்பு  (Vatican Media)

தூய ஆவியாரின் கொடைகளைப் பகிர்ந்துகொள்வோம்

கிறிஸ்துவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் அழைப்பின்பேரில், கீழை வழிபாட்டுமுறை ஆர்த்தடாக்ஸ் திருஅவைகளின், 18 இளம் அருள்பணியாளர்கள், மற்றும் துறவிகள், உரோம் நகரில் இவ்வாரத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கீழை வழிபாட்டுமுறை ஆர்த்தடாக்ஸ் திருஅவைகளின், இளம் அருள்பணியாளர்கள், மற்றும் துறவிகள், கத்தோலிக்கத் திருஅவை பற்றி மேலும் மேலும் கற்றுக்கொள்ளும்போது, அவர்கள் தூய ஆவியாரின் கொடைகளைப் பகிர்ந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 21, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் தன்னைச் சந்திக்க வந்திருந்த, கீழை வழிபாட்டுமுறை ஆர்த்தடாக்ஸ் திருஅவைகளின், இளம் அருள்பணியாளர்கள், மற்றும் துறவிகளைக்கொண்ட பிரதிநிதிகள் குழு ஒன்றிற்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு சந்திப்பும், கொடைகளின் பகிர்வைக் கொணர்கின்றது என்று கூறினார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, கீழை வழிபாட்டுமுறை ஆர்த்தடாக்ஸ் திருஅவைகளின் தலைவர்களுக்கு, தன் நல்வாழ்த்தையும் திருத்தந்தை தெரிவித்தார்.

கொடைகளின் பகிர்வு

கடவுளின் அன்னை, எலிசபெத்தம்மாளைச் சந்தித்தபோது, கடவுளின் கொடையைப் பெற்றுள்ள அவரோடு, தன் மகிழ்வைப் பகிர்ந்துகொண்டார், அந்நேரத்தில், எலிசெபத்தும், தூய ஆவியாரின் கொடையால் நிறைந்து, தனது உறவினரான கடவுளின் அன்னையை ஆசீர்வதித்தார் என்று கூறியத் திருத்தந்தை, இவ்விருவர் போன்று, திருஅவைகளும், ஆவியாரின் பல்வேறு கொடைகளைக் கொண்டுள்ளன மற்றும், அவற்றைப் பகிர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றன என்று கூறினார்.

இந்தக் கொடைகள், ஒருவர் ஒருவரின், மகிழ்வு மற்றும், நன்மைக்காகப் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டியவை என்றும், கிறிஸ்தவர்களாகிய நாம், ஆண்டவரின் அன்பில், ஒருவர் ஒருவரைச் சந்திக்கையில், இந்தக் கொடைகளைப் பகிர்ந்துகொள்ளும்போது ஆசீர்வதிக்கப்படுகிறோம் என்றும், திருத்தந்தை கூறினார்.

தூய ஆவியார், மற்றவரில் விதைத்துள்ளவற்றை, நமக்கான கொடைகளாக, அவற்றை நாம் பெற முடியும் என்றும் கூறியத் திருத்தந்தை, கத்தோலிக்கத் திருஅவைக்கும், ஆர்த்தடாக்ஸ் திருஅவைகளுக்கும் இடையே நிலவும் உடன்பிறந்த பாசம் கண்டு, ஆண்டவரும் மகிழ்கிறார் என்றும் கூறினார்.

கீழை வழிபாட்டுமுறை ஆர்த்தடாக்ஸ் திருஅவைகள் உரோம் நகரில் நடத்திய கூட்டத்தில் பங்குபெற்ற இவர்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை, இந்த நாள்கள், கத்தோலிக்கத் திருஅவை பற்றிய அறிவிலும், நல்லுணர்விலும் வளர்வதற்கு, அவர்களுக்கு உதவியிருக்கும் என்று, தான் நம்புவதாகக் கூறினார்.

அதேநேரம், கத்தோலிக்கருக்கும், இவர்கள் கொணர்ந்த தூய ஆவியாரின் கொடையைப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது என்றும் கூறியத் திருத்தந்தை, கிறிஸ்து இயேசுவின் வழியாக நீங்கள் பெற்றுக்கொண்ட இறையருளை முன்னிட்டு உங்களை நினைத்து என் கடவுளுக்கு என்றும் நன்றி செலுத்துகிறேன் என்றுரைத்த புனித பவுலடிகளார் போன்று, இன்று நானும் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன் என்றார்.  

கீழை வழிபாட்டுமுறை ஆர்த்தடாக்ஸ் திருஅவைகளின் அருள்பணியாளர்கள், மற்றும் துறவிகளுக்காகத் தான் செபிப்பதாக உறுதி கூறியத் திருத்தந்தை, தனக்காகவும், தனது திருப்பணிக்காகவும் செபிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இச்சந்திப்பின் இறுதியில், திருத்தந்தை கேட்டுக்கொண்டபடி, ஒவ்வொருவரும் அவரவர் மொழியில், இறைத்தந்தையை நோக்கி, இயேசு கற்றுக்கொடுத்த செபத்தைச் செபித்தனர்.

21 February 2020, 15:13