தேடுதல்

திருத்தந்தை, அஜர்பைஜான் அரசுத்தலைவர் Aliyev சந்திப்பு திருத்தந்தை, அஜர்பைஜான் அரசுத்தலைவர் Aliyev சந்திப்பு 

திருத்தந்தை, அஜர்பைஜான் அரசுத்தலைவர் Aliyev சந்திப்பு

முன்னாள் சோவியத் யூனியனைச் சேர்ந்த குடியரசுகளில் ஒன்றான அஜர்பைஜான், கிழக்கு ஐரோப்பாவும், மத்திய ஆசியாவும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள அஜர்பைஜான், முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகளில், சமயச்சார்பற்ற குடியரசாக அறிவித்த முதல் நாடாகும்.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அஜர்பைஜான் நாட்டு அரசுத்தலைவர் Ilham Aliyev அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, பிப்ரவரி 22, இச்சனிக்கிழமை காலையில், திருப்பீடத்தில் தனியே சந்தித்து கலந்துரையாடினார்.

அரசுத்தலைவர் Aliyev அவர்கள், திருத்தந்தையைச் சந்தித்தபின், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்களையும் சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்புக்கள் குறித்து அறிக்கை வெளியிட்ட திருப்பீட செய்தித் தொடர்பகம், திருப்பீடத்திற்கும், அஜர்பைஜான் குடியரசுக்கும் இடையே நிலவிவரும் நல்லுறவுகள், அக்குடியரசில் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் நற்பணிகள், குறிப்பாக, கலாச்சாரச் சூழலில் வழங்கிவரும் ஒத்துழைப்பு போன்ற தலைப்புகளில் பகிர்வுகள் இடம்பெற்றன என அறிவித்தது.

மேலும், திருப்பீடமும், அஜர்பைஜான் குடியரசும் ஆர்வம் காட்டும் பொதுவான விவகாரங்களான, பல்வேறு மதத்தவரும், இனத்தவரும் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு, பல்வேறு கலாச்சாரங்களுக்கிடையே உரையாடல், பல்சமய உரையாடல் போன்றவை இடம்பெறுவதன் முக்கியத்துவமும் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்று திருப்பீட செய்தித் தொடர்பகம் கூறியது.

முன்னாள் சோவியத் யூனியனைச் சேர்ந்த குடியரசுகளில் ஒன்றான அஜர்பைஜான், கிழக்கு ஐரோப்பாவும், மத்திய ஆசியாவும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இக்குடியரசு 1918ம் ஆண்டில் தனது விடுதலையை அறிவித்தது. முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகளில், சமயச்சார்பற்ற குடியரசாக அறிவித்த முதல் நாடாகும் அஜர்பைஜான். இக்குடியரசு, 1920ம் ஆண்டில் சோவியத் யூனியனோடு இணைக்கப்பட்டு, 1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி, அதிலிருந்து பிரிந்து நவீன குடியரசாக தன்னை அறிவித்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 February 2020, 15:30