கத்தோலிக்க சுற்றுச்சூழல் உலகளாவிய இயக்கம் கத்தோலிக்க சுற்றுச்சூழல் உலகளாவிய இயக்கம் 

"கத்தோலிக்க சுற்றுச்சூழல் இயக்கம்" திருத்தந்தையுடன்...

தவக்காலத்தையும், திருநீற்றுப் புதனன்று வழங்கிய மறையுரையின் கருத்துக்களையும் மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று ஒரு டுவிட்டர் செய்தியையும், இப்புதனன்று ஆறு டுவிட்டர் செய்திகளையும் வழங்கியுள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிப்ரவரி 27, இவ்வியாழன் காலை, தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதைத் தொடர்ந்து, காலை 9.30 மணியளவில், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்களுடன் வந்திருந்த "கத்தோலிக்க சுற்றுச்சூழல் உலகளாவிய இயக்கம்" என்ற குழுவைச் சேர்ந்த 12 உறுப்பினர்களை, புனித 6ம் பவுல் அரங்கத்தின் ஓர் அறையில் சந்தித்தார்.

சுற்றுச்சூழலையும், பூமிக்கோளத்தையும் பாதுக்காக்க திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Laudato si என்ற திருமடல் வழியே விடுத்த அழைப்பையடுத்து, உலகின் ஏறத்தாழ அனைத்து நாடுகளிலும், 900த்திற்கும் அதிகமான இயக்கங்கள் இணைந்து "கத்தோலிக்க சுற்றுச்சூழல் உலகளாவிய இயக்கம்" உருவாக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தையின் ஏழு டுவிட்டர் செய்திகள்

மேலும், தவக்காலத்தையும், திருநீற்றுப் புதனன்று தான் வழங்கிய மறையுரை மற்றும் புதன் மறைக்கல்வி உரை ஆகியவற்றில் கூறிய கருத்துக்களையும் மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று, ஒரு டுவிட்டர் செய்தியையும், இப்புதனன்று, ஆறு டுவிட்டர் செய்திகளையும் வழங்கியுள்ளார்.

"அருள்நிறை இக்காலத்தில், நாம் செபிக்கிறோம், நோன்பிருக்கிறோம் மற்றும் இரக்கச் செயல்கள் ஆற்றுகிறோம்; இதனால், இறைவன் நம் உள்ளங்களை, அவரது அன்பின் வெற்றியால் நிறைவு செய்கிறார்" என்ற கருத்து, இவ்வியாழனன்று திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் பதிவானது.

மேலும், திருநீற்றுப் புதனன்று, திருத்தந்தை வெளியிட்ட முதல் டுவிட்டர் செய்தியில், "கிறிஸ்தவ வாழ்வின் மூலைக்கல்லான இயேசுவின் மரணம், உயிர்ப்பு ஆகிய பெரும் மறையுண்மைகளை, புதுப்பிக்கப்பட்ட உள்ளங்களுடன் கொண்டாடுவதற்குத் தேவையான தயாரிப்பாக விளங்கும், தகுந்ததொரு காலத்தை, இவ்வாண்டும், ஆண்டவர் நமக்கு வழங்கியுள்ளார்" என்ற சொற்களை, 'தவக்காலம்' என்று பொருள்படும் #Lent ஹாஷ்டாக்குட.ன் வெளியிட்டார்.

இறைவனால் அன்புகூரப்படும் தூசிகள்

இதைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட இரண்டாவது டுவிட்டர் செய்தியில், "சாம்பலைப் பெறுவதன் வழியே, தவக்காலத்தைத் துவக்கியுள்ளோம். இந்த பிரபஞ்சத்தில் நாம் தூசிகள். ஆனாலும், நாம் இறைவனால் அன்புகூரப்படும் தூசிகள்" என்ற சொற்களை திருத்தந்தை வெளியிட்டார்.

"சாம்பலைப் பெறுவது, நாம் இறைவனின் குழந்தைகள் என்பதையும், நம் வாழ்வு, தூசிகளைத் துரத்திச் செல்லும் வாழ்வாக அமைந்துவிடக்கூடாது என்பதையும் நமக்கு நினைவுறுத்துகிறது" என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட மூன்றாவது டுவிட்டர் செய்தியாக அமைந்தது.

சாம்பல், தூசி என்ற எண்ணங்களை வலியுறுத்தி...

அதே வண்ணம், சாம்பல், தூசி என்ற எண்ணங்களை வலியுறுத்தி, திருத்தந்தை வழங்கிய மறையுரையின் வேறு இரு வாக்கியங்கள், அவரது நான்காவது, ஐந்தாவது, மற்றும் ஆறாவது  டுவிட்டர் செய்திகளாக, பிப்ரவரி 26, இப்புதன் மாலையில் வெளியாயின.

இதற்கிடையே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய புதன் மறைக்கல்வி உரையில், நோன்பிருப்பதைக் குறித்து அவர் பகிர்ந்துகொண்ட ஒரு கருத்தை மற்றொரு டுவிட்டர் செய்தியாக வெளியிட்டிருந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 February 2020, 15:22