Knights of Columbus அமைப்பின் உறுப்பினர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கிய உரை Knights of Columbus அமைப்பின் உறுப்பினர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கிய உரை 

Knights of Columbus அமைப்பினருக்கு திருத்தந்தை வாழ்த்து

முதல் உலகப்போரினால் சீரழிந்த உரோம் நகரில், இளையோருக்கும், பிறருக்கும் உதவ, 100 ஆண்டுகளுக்கு முன், திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், Knights of Columbus அமைப்பு, உரோம் நகரிலும் செயலாற்ற அழைப்பு விடுத்தார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

‘கொலம்பஸின் தளபதிகள்’ என்று பொருள்படும் Knights of Columbus என்ற கத்தோலிக்க அமைப்பினர், உரோம் நகரில், தங்கள் பிறரன்புப் பணிகளைத் துவக்கியதன் நூறாம் ஆண்டு நிறைவின் கொண்டாட்டங்கள் நிகழும் இவ்வேளையில், பிப்ரவரி 10, இத்திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களை, திருப்பீடத்தில் சந்தித்து வாழ்த்தினார்.

முதல் உலகப்போரினால் சீரழிந்த உரோம் நகரில், இளையோருக்கும், பிறருக்கும் உதவும் பணிகளை ஆற்ற, 100 ஆண்டுகளுக்கு முன், திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், Knights of Columbus அமைப்பு, உரோம் நகரிலும் செயலாற்ற அழைப்பு விடுத்தார் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் வாழ்த்துரையில் குறிப்பிட்டார்.

1882ம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டில் உருவான Knights of Columbus அமைப்பு, உரோம் நகரிலும்  நிறுவப்படவேண்டுமென 1920ம் ஆண்டு திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள் விடுத்த அழைப்பை தன் உரையில் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இவவமைப்பினர், விளையாட்டு மையங்களைத் துவக்கி, அவற்றின் வழியே, இளையோருக்குத் தேவையான உணவு, பொருள்கள், மற்றும் கல்வி ஆகியவற்றை வழங்கினர் என்று கூறினார்.

கிறிஸ்தவ பிறரன்பு, மற்றும் உடன்பிறந்த நிலை மதிப்பீடுகளுடன் செயலாற்றும் இவ்வமைப்பு, இன்று, மனித மாண்புக்கு ஆதரவாக பல்வேறு துறைகளில் பணியாற்றி வருவது குறித்து, தன் பாராட்டுக்களைத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக, மத்தியக் கிழக்கு நாடுகளில், வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ சமுதாயத்திற்கு, Knights of Columbus அமைப்பு, சிறப்பான பணியாற்றி வருவதற்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் தனிப்பட்ட பாராட்டுக்களை வெளியிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 February 2020, 14:29