தேடுதல்

Vatican News
திருத்தந்தையின் மறைக்கல்வியுரை 260220 திருத்தந்தையின் மறைக்கல்வியுரை 260220  (Vatican Media)

மறைக்கல்வியுரை: பாலைவனம் என்பது, வாழ்வின் இடம்

ஒவ்வோர் ஆண்டும் நாம் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவுக்கென தயாரிக்கும் நம் ஆண்டு தவக்காலப் பயணத்தை துவக்கி வைப்பதாக உள்ளது, திருநீற்றுப் புதன்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

கடந்த பல வாரங்களாக திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கில் திருப்பயணிகளைச் சந்தித்து புதன் மறைக்கல்வி உரைகளை வழங்கி வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் திருப்பயணிகளைச் சந்தித்தார். தவக்காலத்தை துவக்கிவைக்கும் திருநீற்றுப் புதனான இன்று, இந்நாளின் முக்கியத்துவம் மற்றும் தவக்காலம் குறித்து, தன் சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ். முதலில் புனித லூக்கா நற்செய்தியின் நான்காம் பிரிவின் முதல் பகுதி பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட்டது.

இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு யோர்தான் ஆற்றை விட்டுத் திரும்பினார். பின்னர் அவர் அதே ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார். அந்நாள்களில் அவர் ஒன்றும் சாப்பிடவில்லை.(லூக்.4,1-2)

என்ற இப்பகுதி வாசித்தளிக்கப்பட்டபின் தன் சிந்தனைகளை அனைவருடனும் பகிர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பு சகோதர சகோதரிகளே, இன்று நாம் சிறப்பிக்கும் திருநீற்றுப் புதன், ஒவ்வோர் ஆண்டும் நாம் இயேசுவின் உயிர்ப்பு விழாவுக்கென தயாரிக்கும் நம் ஆண்டு தவக்காலப் பயணத்தை துவக்கி வைப்பதாக உள்ளது. இயேசு தன் பொதுப்பணி வாழ்வைத் துவக்குவதற்கு முன் அதற்குரிய தயாரிப்பாக பாலைவனம் சென்று நாற்பது நாட்களை செபத்தில் செலவிட்டதை இந்நாட்களில் நாம் பின்பற்றுகிறோம். ஆன்மீகக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, பாலைவனம் என்பது மரணத்தின் இடமல்ல, மாறாக, வாழ்வின் இடம். இறைவனின் வார்த்தையைக் கேட்பதற்கும், அவரின் அன்புநிறை அழைப்பை அனுபவிப்பதற்கும் உதவும்வகையில், உள்மன விடுதலையை வழங்கும், ஆரவாரமற்ற அமைதியின் இடமாக பாலைவனம் உள்ளது. வேக வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகில், கடவுளை நோக்கிய திறந்த மனதுடன்கூடிய செபத்தில் நாம் வளரவும், இதயத்திற்குள் நல்லதொரு சூழலைப் பயிரிடவும், முக்கியமானவைகளில் நம் வாழ்வு தன் மையத்தைக் கொண்டிருக்கவும், ஆரவாரமற்ற அமைதி அதிகம் அதிகமாக தேவைப்படுகிறது. நம் பாலைவன தவக்காலத்தில் ஒரு முக்கியப் பகுதியாக உண்ணா நோன்பு என்பது உள்ளது. நாம் நம் வாழ்வில், உள்ளே காலியான, மற்றும், ஆழமற்ற மேற்போக்கான விடயங்களைத் தேடுவதில் நம் வாழ்வை எவ்வாறு வீணடிக்கிறோம் என்பதை தாழ்ச்சியுடன்கூடிய இதயத்துடன் கண்டுகொள்வதற்கு, உண்ணாநோன்பு பயிற்சி அளிக்கிறது. நம்முடைய உதவிக்காகவும், ஊக்குவிப்பிற்காகவும், நம்மிடையே வாழ்ந்து எழுப்பும் மக்களின்  அமைதியான அழுகுரலுக்குச் செவிமடுக்கும், கூர்உணர்சசி உடையவர்களாக, பாலைவனத் தனிமை நம்மை மாற்றுகிறது. புனித வெள்ளி வழியாக உயிர்ப்பை நோக்கிச் செல்லும் நம் இப்பயணத்தில், நம் செபங்களும், உண்ணா நோன்புகளும், இரக்க நடவடிக்கைகளும், இயேசுவைப் பின்பற்றிச் செல்லும் நம் பாதையில் நமக்கு உறுதிப்பாட்டை பலப்படுத்துவதாக. ஒவ்வொரு பாலைவனத்தையும் புது வாழ்வின் பூந்தோட்டமாக மாற்றும் இறையருளின் வல்லமையைத் தெரிந்துகொள்ள இத்தவக்காலப் பயணம் நமக்கு உதவட்டும்.

தன் புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்று உலகை உலுக்கி வரும் கொரோனா நோய்க்கிருமி தொற்று குறித்தும், அதனால் தாக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும், அவர்களுக்குச் சிகிச்சையளிக்கும் நலப்பணியாளர்கள் குறித்தும் எடுத்துரைத்தார். அவர்கள் அனைவருக்காகவும் செபிப்பதாகத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

26 February 2020, 13:47