தேடுதல்

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை 190220 திருத்தந்தையின் மறைக்கல்வியுரை 190220 

மறைக்கல்வியுரை: கனிவுடையோர் பேறுபெற்றோர்

இயேசு கூறுவது, முரண்பாடான ஒன்றாகத் தெரிகின்றபோதிலும், அவர் வலியுறுத்திக் கூறுகிறார், கனிவுடையோர் இவ்வுலகை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர் என்று

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இயேசு மலைமேல் வழங்கிய போதனையின் முதல் பகுதியான பேறுகள் பற்றிய ஒரு தொடரை ஆரம்பித்து, கடந்த இரு வாரங்களாக, ஏழையரின் உள்ளத்தோர், மற்றும், துயருறுவோர் அடையும் பேறுகள் குறித்து தன் புதன் மறைக்கல்வி உரைகளில் கருத்துக்களைப் பகிர்ந்து வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம், 'கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்'(மத். 5:5) என்பது குறித்து எடுத்துரைத்தார். புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு, முதலில், 37ம் திருப்பாடலில் இருந்து, ஒரு பகுதி பல்வேறு மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டது.

ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்;

நாட்டிலேயே குடியிரு;

நம்பத் தக்கவராய் வாழ்.

வெஞ்சினம் கொள்ளாதே;

வெகுண்டெழுவதை விட்டுவிடு;

எரிச்சலடையாதே;

அதனால் தீமைதான் விளையும்.

தீமை செய்வோர் வேரறுக்கப்படுவர்;

ஆண்டவருக்காகக் காத்திருப்போரே

நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்.

இன்னும் சிறிதுகாலம்தான்;

பிறகு பொல்லார் இரார்;

அவர்கள் இருந்த இடத்தில்

நீ அவர்களைத் தேடினால்

அவர்கள் அங்கே இரார்.

எளியோர் நிலத்தை

உடைமையாகப் பெறுவர்;

அவர்கள் வளமிகு வாழ்க்கையில்

இன்பம் காண்பர். (திருப்பாடல்கள் 37, 3.8-11). இப்பகுதி வாசிக்கப்பட்டபின், திருத்தந்தையின் உரை தொடர்ந்தது.

மறைக்கல்வியுரை

அன்பு சகோதர சகோதரிகளே, இயேசு எடுத்துரைத்த நற்பேறுகள் குறித்த நம் மறைக்கல்வித் தொடரில் இன்று, மூன்றாவது பேறாகிய, 'கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர் (மத்.5:5)', என்பது குறித்து நோக்குவோம். ஏழைகள், மற்றும், நிலமற்றோரை, 'கனிவுடையோர்' என்ற பதத்தை பயன்படுத்தி அழைக்கிறது விவிலியம். ஆகவே, கனிவுடையோர் நாட்டை உரிமையாக்குவர் என்று இயேசு கூறுவது, முரண்பாடான ஒன்றாகத் தெரிகிறது. இருப்பினும், கடவுள் வலியுறுத்திக் கூறுகிறார், கனிவுடையோர் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர் என்று. இந்தப் பேறு, இறுதியாக நமக்கு சுட்டிக்காட்டுவது என்னவென்றால், இறைவனின் குழந்தைகளுக்கு என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ள விண்ணக இல்லத்தையே ஆகும். இயேசுவைப் பொறுத்தவரையில், கனிவுடையோர் என்பவர்கள், இறைவனோடு தாங்கள் கொண்டிருக்கும் உறவின் பரப்பையும், அவரின் அமைதி, இரக்கம், உடன்பிறந்த உணர்வு எனும் கொடைகளையும் பாதுகாக்க கற்றுக்கொண்டவர்கள் ஆவர். இந்த உரிமைச்சொத்தை, பாவம் அழித்துவிடக்கூடும். ஏனெனில், பாவத்திலிருந்து வழிந்தோடும் பகைமையும் பிரிவினை உணர்வுகளும் அழிவைத் தர வல்லவை.  இதற்கு நேர்மாறாக, கனிவு என்பது, இந்த உரிமைச்சொத்தை பாதுகாப்பதுடன், அது வளரவும், அன்பு, இரக்கம், நட்புணர்வு ஆகியவைகளின்வழி இதயங்களை வெல்லவும் உதவுகிறது. இயேசுவின் கனிவை கடைப்பிடிப்பதன் வழியாக, இறையரசு பரவ உதவுவதுடன், இயேசுவின் நற்பேறு போதனையில் வாக்களிக்கப்பட்டுள்ள உரிமைச்சொத்தை பெறவும் முன்வருவோமாக.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை அரங்கில் குழுமியிருந்த அனைவருக்கும் வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 February 2020, 14:22