தேடுதல்

Vatican News
திருத்தந்தையின் மறைக்கல்வியுரை 050220 திருத்தந்தையின் மறைக்கல்வியுரை 050220  (Vatican Media)

மறைக்கல்வியுரை: ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்

இவ்வுலக சக்திகளுக்கு எதிரானதாக, இறைவனின் சக்தி, அன்புடன்கூடிய இரக்கத்தில் காணப்படுகின்றது என்பதை, தன் இரத்தத்தையே சிந்தும் அளவுக்குச் சென்று, இயேசு காண்பிக்கிறார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இயேசு தன் மலைப்பொழிவில் முதலில் எடுத்துரைத்த எட்டு பேறுகளை விளக்கும் மறைக்கல்வித் தொடர் ஒன்றை, கடந்த வாரம் துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம், முதல் பேறான, 'ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்’என்பது குறித்து தன் சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார். முதலில் மத்தேயு நற்செய்தி, பிரிவு பதினொன்றிலிருந்து ஒரு பகுதி வாசிக்கப்பட்டது.

இயேசு, “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். 29நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.✠ 30ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது” என்றார் (மத்.11, 28-30).

மறைக்கல்வியுரை

அன்பு சகோதர சகோதரிகளே, நற்பேறுகள் குறித்த நம் மறைக்கல்வித்தொடரில் இன்று, எட்டு பேறுகளுள் முதல் பேறான, “ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில், விண்ணரசு அவர்களுக்கு உரியது' என்பது குறித்து நோக்குவோம் (மத். 5:3). மத்தேயு நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது, லூக்கா நற்செய்தியில் கூறப்பட்டுள்ளதைப்போல் அல்லாமல், ஏழையரின் உள்ளத்தோர் பற்றி எடுத்துரைக்கின்றது. இறைவன் ஆதாமுக்கு வழங்கிய உயிர் மூச்சை நினைவூட்டுவதாக இருக்கும், இந்த ஏழையரின் உள்ளத்தோர் என்ற பதம், நம் வாழ்வின் ஆழமான, இன்றியமையாத பகுதியையும் குறிப்பிடுவதாக உள்ளது. ஏழைகளின் உள்ளத்தோர், தங்கள் ஏழ்மையையும், கடவுளைச் சார்ந்து வாழும் நிலையையும் ஆழமாக உணர்ந்தவர்களாக செயல்படுகின்றனர். அதேவேளை, இதயச்செருக்குள்ளவர்களோ, தங்களிடம் அனைத்தும் உள்ளன என்பதில் நம்பிக்கை கொண்டு, மனிதரின் உண்மையான உடைபடும் நிலைகளை, குறைபாடுகளை  நினைவுறுத்துபவைகளை வெறுப்பவர்களாக உள்ளனர். ஏழையரின் உள்ளத்தோர் என்பது,  நம் குறைபாடுகள், இயலாமைகள் குறித்து, நாம் உணர்ந்தவர்களாகச் செயல்படுவதையும், நம் தவறுகளை ஏற்று அதற்காக மன்னிப்பை இறைஞ்சுவதையும் குறிக்கிறது. இதுவே, இறையரசை நோக்கி நம்மை வழிநடத்தும் அருளைப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது. இவ்வுலக சக்திகளுக்கு எதிரானதாக, இறைவனின் சக்தி, அன்புடன்கூடிய இரக்கத்தில் காணப்படுகின்றது.   மற்றவர்களின் நலனே முக்கியம் என்பதைத் தேர்ந்தெடுத்து நமக்காக தன் இரத்தத்தையே சிந்தும் அளவுக்கு, இயேசு இதனை காண்பிக்கிறார். இவ்வுலகில் சார்ந்து வாழும் ஏழ்மை நிலையை நாம் ஏற்றுக்கொள்வதுடன், இயேசுவின் ஏழ்மையைப் பின்பற்ற முயன்று, நமக்கு அடுத்திருப்பவர்களுக்கு அன்புடன் சேவையாற்றும்போது, நாம் பேறுபெற்றவர்களாவோம்.

இவ்வாறு, இயேசுவின் மலைப்பொழிவில் காணப்படும் எட்டு பேறுகளுள் முதல் பேறாகிய, ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர் என்பது குறித்து தன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

05 February 2020, 13:32