தேடுதல்

சிரியாவின் Idlib பகுதியில் இடம்பெற்றுவரும் மோதல்கள் சிரியாவின் Idlib பகுதியில் இடம்பெற்றுவரும் மோதல்கள் 

சிரியாவின் இன்றைய நிலைகள் குறித்து திருத்தந்தை கவலை

மனிதர்களை வியாபாரப் பொருளாக்கும் நிலைகளுக்கு, நவீனத் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுவது தடைசெய்யப்பட வேண்டியது அவசியம் - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தன் ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில், தற்போது வடமேற்கு சிரியாவில், இஸ்லாமிய குழுவுக்கும் அரசு துருப்புகளுக்கும் இடையே இடம்பெறும் மோதல்களில் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவது குறித்து தன் கவலையை வெளியிட்டு, அவர்களுக்காக செபிக்குமாறு அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வடமேற்கு சிரியாவில், இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி இடமான Idlib பகுதியில், அரசு துருப்புகள் புகுந்து, தீவிரவாதிகளுடன் போரிட்டு வருவதால், பலர், தங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறி வருகின்றனர் என்ற கவலையை வெளியிட்டத் திருத்தந்தை, பொதுமக்களின் வாழ்வைப் பாதுகாக்கும் பொருட்டு, இப்போரில் ஈடுபட்டிருக்கும் இரு தரப்பினரும், ஆயுதங்களை நம்பாமல், பேச்சுவாரத்தைகளுக்கு முன்வரவேண்டும் என, அழைப்பு விடுத்தார்.

மேலும், மனிதர்களை வியாபாரப் பொருட்களாக கடத்துவதற்கு எதிரான அனைத்துலக செப நாளாகிய புனித ஜோசப்பின் பக்கித்தாவின் திருவிழா, சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்டதை தன் மூவேளை செப உரையில் சுட்டிக்காட்டி, மனிதர்களை வியாபாரப் பொருளாக்கும் இந்நிலைகளுக்கு எதிரான விழிப்புணர்வு கல்வியின் அவசியம் குறித்தும், இத்தவறுக்கு நவீன கால தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுவது தடைசெய்யப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 February 2020, 12:35