திருத்தந்தையின் Querida Amazonia திருத்தூது அறிவுரை மடல் திருத்தந்தையின் Querida Amazonia திருத்தூது அறிவுரை மடல் 

திருத்தந்தையின் Querida Amazonia திருத்தூது அறிவுரை மடல்

அன்னையே, அமோசான் பகுதியின் ஏழைகளை நோக்கியருளும். சில்லரைத்தனமான ஆதாயங்களுக்காக, அவர்களின் இல்லம் அழிக்கப்பட்டு வருகிறது. சக்திபடைத்தவர்களின் இதயங்களைத் தொடும். காலம் கடந்து செபிக்கின்றோம் எனினும், இன்னும் இருப்பதைக் காப்பதற்கு, தாங்கள் எம்மை அழைக்கிறீர்.

மேரி தெரேசா: வத்திக்கான்

தென் அமெரிக்காவில் ஒன்பது நாடுகளில் பரவியுள்ள அமேசான் பருவமழைக் காடுகள், உலகின் மிகப் பெரிய வனப் பகுதியாகும். நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியின் நுரையீரல் என்றழைக்கப்படும் இக்காடுகளிலிருந்து உலகிற்குத் தேவையான இருபது விழுக்காடு ஆக்சிஜன் உற்பத்தி ஆகிறது. கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட கடும் சுற்றுச்சூழல் நடவடிக்கைகளையும் மீறி, அமேசான் பருவமழைக் காடுகளில் 12 விழுக்காடு, அதாவது 9 கோடியே 30 இலட்சம் ஏக்கர் நிலமானது, தற்போது விவசாய நிலமாக மாற்றப்பட்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்களின் அத்துமீறல் நடவடிக்கைகளால், அமேசான் மழைக் காடுகளின் 25 விழுக்காட்டுப் பகுதி அழிந்துபோயுள்ளது. இந்த சூழலில், கடந்த ஆண்டு கோடையில் அமேசான் மழைக் காடுகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, உலகையே கவலைக்குள்ளாக்கியது. ஏற்கனவே சுற்றுச்சூழல் சீர்கேட்டால் மனித சமுதாயம்  அனுபவித்துவரும் காலநிலை மாற்றத்தின் எதிர்விளைவுகள் மற்றும், வாழ்வின் அடிநாதத்திற்கே உலைவைக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பழங்குடியின மக்களின் பாதுகாப்பது ஆகியவை பற்றி திருஅவை மிகுந்த கவலை கொண்டுள்ளது. எனவே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில், வத்திக்கானில் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி முதல் 27ம்  தேதி முடிய, அமேசான் பற்றிய சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெற்றது.

அன்புக்குரிய அமேசான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த மாமன்றத்தில் ஆயர்கள் நிறைவேற்றிய தீர்மானங்களை, "Querida Amazonia", அதாவது, "அன்புக்குரிய அமேசான்" என்ற தலைப்பில், திருத்தூது அறிவுரை மடல் ஒன்றை உருவாக்கியுள்ளார். உலகில் பரபரப்பாக எதிர்நோக்கப்பட்ட அவ்வறிவுரை மடல், பிப்ரவரி 12, இப்புதனன்று செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்டது. இஸ்பானிய மொழியில் உருவாக்கப்பட்டுள்ள இம்மடல், நற்செய்தி அறிவிப்பிற்கும் சுற்றுச்சூழல் மற்றும், வறியவர்கள் மீது அக்கறை கொள்வதற்கும் புதிய பாதைகளைக் கண்டுள்ளது. இம்மடல், தூதுரைப் பணியில் புதிய உந்துதலை ஊட்டும் மற்றும், திருஅவையில் பொதுநிலையினரின் ஈடுபாட்டை அதிகரிக்கும் என்று திருத்தந்தை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறார். அன்புக்குரிய அமேசான் நிலப்பகுதி, தன் அனைத்து விந்தைகள், வியப்புகள் மற்றும், புதிர்களுடன் இந்த உலகின்முன் நிற்கின்றது என்று, இந்த அறிவுரை மடலை திருத்தந்தை ஆரம்பித்துள்ளார். அமேசான் பருவமழைக் காடுகள் மீது திருத்தந்தை கொண்டுள்ள காதலை வெளிப்படுத்துவதாய், ஒரு காதல் கடிதம் போல உருவாக்கப்பட்டுள்ள இம்மடல் நான்கு பிரிவுகளையும், 111 பத்திகளையும் கொண்டுள்ளது. அமேசான் நிலப்பகுதியோடு தொடர்புடைய கவிஞர்கள் எழுதிய கவிதைகள், அப்பகுதி ஆயர்களின் ஆவணங்கள் ஆகியவற்றின் உதவியுடன் திருத்தந்தை இம்மடலை உருவாக்கியுள்ளார். முதல் மூன்று பத்திகளில், இந்த அறிவுரை மடலின் முக்கியத்துவம் பற்றி திருத்தந்தை விளக்கியுள்ளார் இந்த மடல் முன்வைக்கும் சவால்கள் மற்றும், அழைப்புகளை, அமேசான் நிலப்பகுதி திருஅவை மட்டுமன்றி, உலகளாவிய திருஅவையும் செயல்படுத்த வேண்டுமென திருத்தந்தை விரும்புகிறார்.

சமுதாயக் கனவு: நசுக்கப்படுபவர்கள் பக்கம் திருஅவை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமேசான் பருவமழைக் காடுகள் பகுதிக்கென தான் காண விழையும் நான்கு கனவுகளை, சமுதாயக் கனவு, கலாச்சாரக் கனவு, சுற்றுச்சூழல் கனவு, மற்றும் திருஅவைக் கனவு என்ற நான்கு பிரிவுகளில் விளக்கிக் கூறியுள்ளார். அன்புக்குரிய அமேசான் அறிவுரை மடலின் முதல் பிரிவு, திருத்தந்தையின் சமுதாயக் கனவு பற்றிக் கூறுகிறது. மேற்கத்திய காலனி ஆதிக்கத்தால் அமேசான் நிலப்பகுதி எவ்வளவு தூரம் சிதைந்துள்ளது என்பதை, ஆப்ரிக்க மற்றும், அமேசான் பகுதி கவிஞர்களின் வரிகளில் காண்கிறோம். அப்பகுதியில், குடிநீர் சுனைகளை தனியார் மயமாக்குதல், கட்டுப்பாடற்ற வகையில் மரங்கள் வெட்டப்படுதல், பழங்குடியின மக்களை விரட்டியடிக்க, வேண்டுமென்றே காடுகளைத் தீ வைத்து கொளுத்துதல் போன்ற குற்றங்கள் இடம் பெறுகின்றன. உண்மையான சுற்றுச்சூழல் அணுகுமுறை, ஒரு சமுதாய அணுகுமுறையாகும். அது பழங்குடியின மக்களின் நல்வாழ்வை மதிப்பதாய் அமைய வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், சூழலியலை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், மண்ணின் மைந்தர்களான பழங்குடியின மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் மற்றும் குற்றங்கள் களையப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாய் அமைய வேண்டும். அமேசான் பகுதியின் வருங்காலம் பற்றிச் சிந்திக்கையில், காடுகளைவிட்டு, நகரங்களுக்கு கட்டாயமாகப் புலம்பெயரும் கடுமையான அநீதிகளை எதிர்கொள்ளும் பழங்குடியினத்தவர், வறியோர், மற்றும் சமுதாயத்தில் மிகவும் நலிவுற்ற சகோதரர், சகோதரிகள் ஆகியோரின் குரல்கள் கேட்கப்படுவதற்கும் ஆவன செய்யப்பட வேண்டும். இதற்கு அரசியல் தலைவர்கள் உட்பட எல்லாரும் தங்களை அர்ப்பணிக்க வேண்டும். ஊழல் என்ற தீமை, நாட்டையும், நிறுவனங்களையும் நச்சுப்படுத்துகின்றது. எனவே, அமேசான் பகுதி முதலில், ஒரு சமுதாய கலந்துரையாடல் இடமாக மாற வேண்டும். அப்பகுதியில், ஏழைகளின் குரல், மிகவும் அதிகாரம் கொண்ட குரலாக அமைய வேண்டும். இவ்வாறு திருத்தந்தை, தனது சமுதாய கனவு பற்றி முதல் பிரிவில் விளக்கியுள்ளார்.  

கலாச்சார கனவு: அமேசான் பகுதி உரையாடலின் இடமாக மாற...

இந்த அறிவுரை மடலின் இரண்டாவது பிரிவை, தனது கலாச்சார கனவுக்கென திருத்தந்தை அர்ப்பணித்துள்ளார். அமேசான் பகுதி, மனித நேயத்தின் அழகு, பல்வேறு வடிவங்களில் ஒளிரும்படி, தனக்கே உரிய கலாச்சாரக் கருவூலங்களைப் பேணிக்காக்கின்றது. அமேசான் பகுதியை முன்னேற்றுவது என்பது, கலாச்சாரப்படி ஆதிக்கம்செலுத்துவது என்பதல்ல. அப்பகுதியில் இடம்பெறும் காலனி ஆதிக்கத்தின் நவீனமுறை வீழ்த்தப்பட வேண்டும். ஒவ்வொருவரும் தங்களின் கலாச்சாரங்களைப் பராமரிப்பது உடனடியாகத் தேவைப்படுகின்றது. மனிதர்களை, நுகர்வுப்பொருள் என்ற கண்ணோட்டத்துடன் நோக்குவது, கலாச்சாரங்கள் மீது, குறிப்பாக, இளைஞர்கள் மீது எதிர்தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. எனவே இளைஞர்கள் தங்களின் சொந்த கலாச்சாரங்கள் பாதுகாக்கப்படுவதற்குப் பொறுப்பேற்க வேண்டும். இளைஞர்கள், தங்களின் நினைவுகளிலிருந்து சிதைந்துள்ளவற்றை மீட்க வேண்டும் என்று தனது இரண்டாவது கனவில் கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, பல கலாச்சாரங்களின் சந்திப்பு பற்றியும் விளக்கியுள்ளார். இயற்கையோடு இயைந்து வாழ்வதால் ஒரு கலாச்சார கருவூலத்தை வளர்த்துக்கொண்டுள்ள மக்களிடமிருந்து, மிகவும் வளர்ச்சியடைந்துள்ள கலாச்சாரங்களைக் கொண்டிருக்கிறோம் எனச் சொல்பவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். எனவே பன்மைத்தன்மை ஒரு சுவர் அல்ல, மாறாக, அது ஒரு பாலம். இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, அழிவை எதிர்கொள்ளும் கலாச்சாரங்கள் மற்றும், மக்கள் பற்றியும் விளக்கியுள்ளார். மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், தாங்கள் பிறந்த மற்றும் வளர்ந்த சுற்றுச்சூழல் சேதமடையாதது மற்றும் பாதிக்கப்படாதது என்ற செய்தியை அம்மக்கள் கேட்க வேண்டும்.

சுற்றுச்சூழல் கனவு: சுற்றுச்சூழல் மற்றும், மக்கள் பராமரிப்பு

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்மடலின் மூன்றாவது பிரிவில் தனது சுற்றுச்சூழல் கனவு பற்றி விவரித்துள்ளார். இந்தப் பிரிவு, Laudato si’ அதாவது நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பது குறித்த, இறைவா உமக்கே புகழ் என்ற திருமடலோடு நேரிடையாகத் தொடர்புகொண்டுள்ளது. இப்பிரிவில், அமேசான் நிலப்பகுதியில், மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது பற்றி கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. ஆண்டவர் நம்மைப் பராமரிப்பது போன்று, நம் சகோதரர், சகோதரிகளைப் பராமரிப்பதே, நமக்குத் தேவைப்படும் முதல் சுற்றுச்சூழலாகும். சுற்றுச்சூழலைப் பராமரிப்பதும், ஏழைகளைப் பராமரிப்பதும் பிரிக்கமுடியாதவை. சுற்றுச்சூழல் கனவு என்பது, அப்பகுதியில் காணப்படும் நீரை அடிப்படையாகக் கொண்டது. அப்பகுதியின் உயிர்நாடியாக விளங்கும் அமேசான் நதியின் வல்லமை மற்றும், அதன் அழகு பற்றி கவிஞர் Pablo Neruda மற்றும், உள்ளூர் கவிஞர்கள் கூறியிருப்பது, இயற்கையை அழிக்கும் தொழில்நுட்ப மற்றும், நுகர்வுத்தன்மையிலிருந்து நாம் விலகியிருக்க உதவுகின்றது. உலகம் நலமுடன் இருப்பதற்கு, அமேசான் பருவமழைக்காடுகளும் நலமுடன் இருக்க வேண்டும். அமேசான் நிலப்பகுதி உலகின் நுரையீரல் என்று பல அறிஞர்கள் கூறியுள்ளனர். எனவே, சுற்றுச்சூழல் மீது அக்கறையையும், மரியைதையையும் வளர்க்கும் வகையில், கல்வியும், பழக்கவழக்கங்களும் மாற வேண்டும். மொத்தத்தில், அமேசான் பகுதியிலுள்ள, அளவற்ற இயற்கை அழகையும், காடுகளிலும், நதிகளிலும் வாழும் எண்ணற்ற உயிரினங்களையும் மிகுந்த ஆர்வத்துடன் பாதுக்காக்க விழைய வேண்டும் என்று, தனது மூன்றாவது சுற்றுச்சூழல் கனவில் அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, திருவழிபாட்டில் பண்பாட்டுமயமாக்குதல் இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். பழங்குடியின மக்கள் மத்தியில் திருவழிபாடு பண்பாட்டுமயமாக்கப்பட வேண்டும். ஓர் அமேசான் வழிபாட்டுமுறையை வளர்ப்பதற்கு, ஆயர்கள் மாமன்றத்தில் பரிந்துரைக்கப்பட்டது. திருவருள்சாதனங்கள், ஏழைகளுக்கு கிடைக்கும் வழிவகை செய்ய வேண்டும் என்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

திருஅவை கனவு: திருவழிபாட்டில் பண்பாட்டுமயமாக்கல்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "Querida Amazonia" என்ற தன் திருத்தூது அறிவுரை மடலின் இறுதியில், அமேசான் பகுதிக்கு, தூதுரைப் பணியாளர்கள் அனுப்பப்பட வேண்டியதை, திருஅவைக் கனவாகச் சொல்லி, இம்மடலை நிறைவு செய்துள்ளார். 24 பக்கங்கள் கொண்ட இம்மடலில் ஏறத்தாழ பாதியை, இந்த தன் நான்காவது கனவைச் சொல்ல ஒதுக்கியுள்ளார். இப்பிரிவு, 61 முதல் 110 முடிய உள்ள பத்திகள் அடங்கிய நீளமான பிரிவாக அமைந்துள்ளது. கலாச்சாரத்தில் வேரூன்றியவண்ணம் திருஅவை செயலாற்ற வேண்டும். கத்தோலிக்கத் திருஅவையில், பணித்துவ முறைகளிலும், அதிகார கட்டமைப்பிலும் மாற்றங்களை உருவாக்க துணிவு பெறவேண்டும். வழிபாட்டு முறைகளும், திருஅவையின் பணித்துவ முறைகளும் அமேசான் பகுதியின் கலாச்சாரத்தோடு வேரூன்றியிருக்க வேண்டும். திருப்பலி நிறைவேற்றுவது மற்றும், ஒப்புரவு அருளடையாளம் வழங்குவது ஆகிய இரு பணிகளும் அருள்பணியாளர்களுக்கென குறித்து விடப்பட்ட தனித்துவமான பணிகள் என்பதை தெளிவுபடுத்தியுள்ள திருத்தந்தை, அமேசான் பகுதியில், அருள்பணித்துவம் எவ்வகையில் மக்களுக்கு உதவியாக இருக்க முடியும் என்பது குறித்து சிந்தித்துப் பார்க்கவும் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், திருஅவையில் பெண்களின் வலிமை மற்றும், கொடை பற்றியும் விளக்கியுள்ள திருத்தந்தை, அமேசான் பகுதியில், சில குழுமங்கள், உறுதியுள்ள மற்றும், தாராளமிக்க பெண்களால் மட்டும் பேணிக் காக்கப்படுகின்றன என்று கூறியுள்ளார். அப்பகுதியில் மத நம்பிக்கை வளர்வதற்கு பெண்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். எனவே திருஅவையில் அருள்பணித்துவ ஆதிக்க மனப்பான்மையின்றி பெண்களுக்கு புதிய இடங்கள் வழங்கப்பட வேண்டும். அமேசான் பகுதியில் ஏழைகளைப் பாதுகாப்பதற்கு கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும். தாங்கள் வாழும் பகுதிகளில் வேரூன்றி, தாராள அர்ப்பண உணர்வுடன் அமேசானின் உண்மை இயல்பைக் காட்டும் புதிய முகங்களை திருஅவைக்கு வழங்கும் கிறிஸ்தவக் குழுமங்கள் உருவாக வேண்டும். இவற்றையெல்லாம் திருத்தந்தை, தனது நான்காவது கனவாக வெளியிட்டுள்ளார்.

அன்னை மரியாவிடம் செபம்

"Querida Amazonia" என்ற தன் திருத்தூது அறிவுரை மடலின் முதல் 110 பத்திகளில் இந்த நான்கு கனவுகளைக் குறித்து தன் விளக்கங்களை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறுதி 111வது பத்தியில், அமேசான் பகுதியின் அன்னையான கன்னி மரியாவிடம் எழுப்பும் ஒரு வேண்டுதலுடன் நிறைவு செய்துள்ளார். அன்னையே, அமோசான் பகுதியின் ஏழைகள் மீது உம் கருணைக்கண்களைத் திருப்பும். சில்லரைத்தனமான ஆதாயங்களுக்காக, அவர்களின் இல்லம் அழிக்கப்பட்டு வருகிறது. சக்திபடைத்தவர்களின் இதயங்களைத் தொடும். காலம் கடந்து செபிக்கின்றோம் எனினும், இன்னும் இருப்பதைக் காப்பதற்கு தாங்கள் எம்மை அழைக்கிறீர்.

அமேசான் பருவமழைக்காடுகளின் அழகையும் பயனையும் அறிவோம். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு நம்மால் இயன்றதை ஆற்றுவோம். நலமான ஒரு பூமியை வருங்காலத் தலைமுறைகளுக்கு விட்டுச் செல்வோம்.

திருத்தந்தையின் Querida Amazonia திருத்தூது அறிவுரை மடல்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 February 2020, 15:00