தேடுதல்

Vatican News
"ஒருங்கிணைப்பின் புதிய வடிவங்கள்" என்ற பன்னாட்டு கருத்தரங்கில் பங்குபெற்றோருடன் திருத்தந்தை "ஒருங்கிணைப்பின் புதிய வடிவங்கள்" என்ற பன்னாட்டு கருத்தரங்கில் பங்குபெற்றோருடன் திருத்தந்தை 

வறியோருக்கு முன்னுரிமை வழங்கும் பொருளாதாரம்

2.2 ட்ரில்லியன் டாலர்களை குவித்து வைத்துள்ள 50 செல்வந்தர்கள் மனதுவைத்தால், உலகில் உள்ள அனைத்து குழந்தைகளும் தங்கள் வாழ்நாள் முழுவதும் கல்வி வசதியும், நலவாழ்வு பாதுகாப்பும் பெறமுடியும் – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலகப் பொருளாதாரத்தை உருவாக்குவோர், உலகமயமாக்கப்பட்ட அக்கறையின்மை காரணமாக ஒதுக்கப்பட்டிருக்கும் வறியோருக்கு முன்னுரிமை வழங்கி, வருவாயில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க முன்வரவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உலக மாநாட்டு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

சமுதாயவியல் பாப்பிறைக் கழகம், "ஒருங்கிணைப்பின் புதிய வடிவங்கள்" என்ற தலைப்பில், உரோம் நகரில் ஏற்பாடு செய்திருந்த ஒரு பன்னாட்டு கருத்தரங்கில், சனவரி 5, இப்புதனன்று மாலை உரையாற்றிய திருத்தந்தை, தற்போதையை உலகில் நிலவும் பொருளாதாரத்தில் மறைந்திருக்கும் ஆபத்துக்களை வெளிச்சமிட்டுக் காட்டினார்.

வறியோர் எண்ணிக்கையில் வளரும் உலகம்

உலகம் செல்வச்செழிப்பில் வளர்கிறது என்ற அதே வேளையில், நம்மைச் சுற்றி, வறியோரின் எண்ணிக்கையும் அளவுக்கதிகமாக வளர்ந்து வருகிறது என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருத்தத்துடன் சுட்டிக்காட்டினார்.

உறைவிடம், உணவு, நலவாழ்வு, கல்வி, மின்சாரம், குடிநீர் என்ற பல்வேறு அடிப்படைத் தேவைகள் மறுக்கப்பட்டுள்ள மனிதர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதை வலியுறுத்திக் கூறியத் திருத்தந்தை, வறுமை தொடர்பான பல்வேறு காரணங்களால், இவ்வாண்டு, 50 இலட்சம் குழந்தைகள் இறக்கக்கூடும் என்பதை வேதனையுடன் குறிப்பிட்டார்.

விரக்தியில் ஆழ்த்தாமல், தீர்வுகளைக் காண...

வருவாயில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளால், கொத்தடிமைத்தனம், விபச்சாரம் மனித வர்த்தகம், உடல் உறுப்புக்களின் வர்த்தகம் போன்ற கொடுமைகளுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் உள்ளாகின்றனர் என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

வேதனை தரும் இப்புள்ளிவிவரங்கள், நம்மை விரக்தியில் ஆழ்த்தாமல், இந்த ஏற்றத்தாழ்வுகளை சரி செய்யும் தீர்வுகளைக் காண்பதற்கு நம்மை உந்தித்தள்ள வேண்டும் என்று திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.

உலகில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் நம்மீது சுமத்தப்பட்ட தண்டனை அல்ல, மாறாக, நம்மால் தீர்த்து வைக்கக்கூடிய ஒரு பிரச்சனை என்று வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், யாருக்கு முன்னுரிமை, எதற்கு முன்னுரிமை என்பதில் நம் முயற்சிகள் துவங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

50 செல்வந்தர்களின் சொத்து, 2.2 ட்ரில்லியன் டாலர்கள்

உலகில் உள்ள 50 செல்வந்தர்களின் சொத்து, 2.2 ட்ரில்லியன் டாலர்கள், அதாவது, 22 இலட்சத்து கோடி டாலர்கள் என்பதை, தன் உரையில் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, இந்த 50 பேர் மனதுவைத்தால், உலகில் உள்ள அனைத்து குழந்தைகளும் தங்கள் வாழ்நாள் முழுவதும் கல்வி வசதியும், நலவாழ்வு பாதுகாப்பும் பெறமுடியும் என்று எடுத்துரைத்தார்.

மலைபோல் குவிக்கப்பட்டுள்ள இச்செல்வம், மனித சமுதாயத்திற்கு எவ்வகையிலும் பயன்படாமல், அந்நிய நாடுகளில் உள்ள வங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டிருப்பது, ஒரு சமுதாயப் பாவம் என்று திருத்தந்தை கோடிட்டுக் காட்டினார்.

வங்கிகளில் குவிக்கப்பட்டுள்ள செல்வங்கள்

அடிப்படை வருவாய், நலவாழ்வு பாதுகாப்பு, உலகளாவிய கல்வி வசதிகள் ஆகியவற்றை ஒவ்வொரு அரசும் மனிதர்களின் அடிப்படை உரிமைகளாக நிலைநாட்ட வேண்டும் என்றும், வங்கிகளும், பொருளாதார நிறுவனங்களும் தங்களிடம் குவிக்கப்பட்டுள்ள செல்வங்களை மனித முன்னேற்றத்திற்கு பயன்படுத்தும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

பொருளாதாரத் துறையில் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டுள்ள இந்த மாநாட்டின் உறுப்பினர்கள் அனைவரும், கடன் சுமையால் தவிக்கும் நாடுகளுக்கு உதவுதல், சமுதாயத்தில் நலிவுற்றோரை முன்னேற்றுதல், சுற்றுச்சூழலைக் காப்பாற்றுதல் போன்ற விடயங்களில் துணிவுடன் முடிவுகள் எடுக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

06 February 2020, 15:11