தேடுதல்

சிறார் பாதுகாப்பு குறித்து, திருத்தந்தையின் தலைமையில் வத்திக்கானில் நடைபெற்ற கூட்டம் சிறார் பாதுகாப்பு குறித்து, திருத்தந்தையின் தலைமையில் வத்திக்கானில் நடைபெற்ற கூட்டம் 

சிறார் பாதுகாப்பு சிறப்புப்பணிக் குழு

2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வத்திக்கானில் நடைபெற்ற, சிறார் பாதுகாப்பு குறித்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட திட்டத்தின்படி, சிறார் பாதுகாப்பு சிறப்புப்பணிக்குழுவை திருத்தந்தை உருவாக்கியுள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருஅவையில் சிறார் பாதுகாப்பு குறித்து, கடந்த ஆண்டு வத்திக்கானில் நடைபெற்ற கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின்படி, சிறார் பாதுகாப்பு சிறப்புப்பணிக்குழு ஒன்றை உருவாக்கியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை உருவாக்கியுள்ள இந்த பணிக்குழு, உலகில் ஆயர் பேரவைகள், சிறார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு, தங்களைத் தயாரிக்கவும், சிறார் பாதுகாப்பு வழிமுறைகளைப் புதுப்பித்துக்கொள்ளவும் உதவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற்ற, சிறார் பாதுகாப்பு குறித்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில், இத்திட்டம் பற்றி தீர ஆராய்ந்தபின், அதற்கு ஓராண்டு சென்று, அத்திட்டத்திற்கு திருத்தந்தை செயலுருவம் கொடுத்துள்ளார் என்று திருப்பீட செய்தி தொடர்பகம், பிப்ரவரி 28, இவ்வெள்ளியன்று அறிவித்துள்ளது.

மேற்பார்வையிடும் குழு

திருப்பீட செயலகத்தின், ஒவ்வொரு நாளைய நடவடிக்கைகளைக் கவனிக்கும் பொது விவகாரத் துறையின் தலைவரான பேராயர் Edgar Peña Parra அவர்கள், இந்தப் பணிக்குழுவின் பணிகளை மேற்பார்வையிடுவார். அவரோடு சேர்ந்து, மும்பை பேராயர் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ், சிகாகோ பேராயர் கர்தினால் Blase Cupich, மால்ட்டா பேராயர் Charles Scicluna, உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தின் உளவியல் நிறுவனத்தின் தலைவர் இயேசு சபை அருள்பணி Hans Zollner ஆகியோரும் பணியாற்றுவர். 

சிறப்புப்பணிக்குழுவின் உறுப்பினர்கள்

மால்ட்டா ஆயர் பேரவையின் பாதுகாப்பு பணிக்குழுத் தலைவர் முனைவர் Andrew Azzopardi அவர்கள், இந்த சிறப்புப்பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுகிறார். அக்குழுவில், பல்வேறு நாடுகளின் திருஅவை சட்ட வல்லுனர்களும் உள்ளனர். Azzopardi அவர்கள், இந்தப் பணிக்குழுவின் நடவடிக்கைகள் குறித்து, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை, பேராயர் Parra அவர்களிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஆயர் பேரவைகள், துறவு சபைகள் ஆகியவை, சிறார் பாதுகாப்பு குறித்த தயாரிப்புகளுக்கும், வழிமுறைகளுக்கும் இக்குழு உதவும்.

இந்த சிறப்புப்பணிக்குழு, பிப்ரவரி 24, இத்திங்கள் முதல், இரண்டு ஆண்டுகளுக்கு பணியாற்றும். இக்குழுவின் பணிகளுக்கென, நன்கொடையாளர்கள் வழங்கிய நிதியுதவியால், ஒரு சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆயர் பேரவைகள், மற்றும், துறவு சபைகள், taskforce@org.va. என்ற மின் அஞ்சல் முகவரியில், இந்த சிறப்புப்பணிக்குழுவைத் தொடர்புகொள்ளலாம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 February 2020, 15:06