தேடுதல்

Vatican News
பாரியில் திருத்தந்தை பிரான்சிஸ் பாரியில் திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

சிரியா மக்களுக்காக திருத்தந்தையின் சிறப்பான விண்ணப்பம்

சிரியாவில், போரால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களின், குறிப்பாக, குழந்தைகளின் குரல்களுக்கு செவிமடுத்து, ஆயுதங்களின் சப்தங்கள் நிறுத்தப்படுமாறு, ஆயர்களாகிய நாங்கள் அனைவரும் விண்ணப்பிக்கிறோம் - திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மத்தியத்தரைக்கடல் பகுதியில், அதுவும் கடலுக்கு மறுபுறம், குறிப்பாக, பெரும் துயரங்களை அடைந்துவரும் வடமேற்கு சிரியாவின் மக்கள் குறித்து சிந்திக்க நாம் இங்கு கூடியுள்ளோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று வழங்கிய மூவேளை செப உரையில் கூறினார்.

மத்தியத்தரைக்கடல் பகுதியின் அமைதியை மையப்படுத்தி, இத்தாலியின் பாரி நகரில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்ட 58 ஆயர்களுடன் இணைந்து திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, திருப்பலியில் இறுதியில் வழங்கிய மூவேளை செப உரையில் சிரியா நாட்டு மக்களைப்பற்றி சிறப்பாகக் குறிப்பிட்டு, அவர்களுக்காக செபிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

சிரியாவில், போரால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களின், குறிப்பாக, குழந்தைகளின் குரல்களுக்கு செவிமடுத்து, ஆயுதங்களின் சப்தங்கள் நிறுத்தப்படுமாறு, ஆயர்களாகிய நாங்கள் அனைவரும் விண்ணப்பிக்கிறோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிறப்பாக விண்ணப்பித்தார்.

சிரியாவில் மோதலில் ஈடுபட்டுள்ள குழுக்கள், மோதல்களையும், பழி மற்றும் பகைமை உணர்வுகளையும் விட்டொழித்து, அனைவரும், இறைவனின் குழந்தைகள், உடன்பிறந்தோர் என்பதைக் கண்டுகொள்ள, இறைவனை நோக்கி தான் வேண்டுவதாக, திருத்தந்தை எடுத்துரைத்தார்.

நாம் ஒவ்வொருவரும் நம் தினசரி வாழ்வில் அன்பு நடவடிக்கைகள் வழியே புதிய உறவுகளைக் கட்டியெழுப்ப உதவுவோமாக என்ற வேண்டுதலுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாரி நகர் சதுக்கத்தில் வழங்கிய மூவேளை செப உரையை நிறைவு செய்தார்.

23 February 2020, 12:40