தேடுதல்

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை 260220 திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை 260220 

கொரோனா கிருமியால் தாக்கப்பட்டுள்ளவர்களுடன் தோழமை

கொரோனா தொற்றுக் கிருமியால் பாதிக்கப்பட்டிருப்போர், அவர்களிடையே சேவையாற்றும் நலப்பணியாளர்கள் போன்ற அனைவருடனும் தன் அருகாமையை அறிவிப்பதாகத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருநீற்றுப் புதனான பிப்ரவரி 26, இப்புதன் காலையில், வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் மறைக்கல்வி உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் இறுதியில், இந்நாள்களில்  உலகை உலுக்கிவரும் கொரோனா நோய்க்கிருமி தொற்று குறித்தும் எடுத்துரைத்தார்.

கொரோனா தொற்றுக் கிருமியால் பாதிக்கப்பட்டிருப்போர், அவர்களிடையே சேவையாற்றும் நலப்பணியாளர்கள் என அனைவருடனும் தன் அருகாமையை அறிவிப்பதாகத் தெரிவித்தார் திருத்தந்தை.

இவர்களோடு மட்டுமல்ல, அரசு அதிகாரிகள், இந்நோயாளிகளுக்கு உதவுவோர், மற்றும், இந்நோயைக் கட்டுப்படுத்த உழைத்துவருவோர் அனைவருடனும், தன் அருகாமையையும் தெரிவிப்பதாகவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

சீனாவில் தோன்றிய, கோவிட்-19 எனப்படும் கொரோனா தொற்றுக் கிருமி, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும், உலகின் மற்ற பகுதிகளிலும் பரவி வருகிறது. கிரீஸ், ஆஸ்ட்ரியா, இஸ்பெயின், குரோவேஷியா, பிரேசில் போன்ற நாடுகளில் இந்நோய்க் கிருமி தொற்றியுள்ளதாக, பிப்ரவரி 26, இப்புதனன்று வெளியான செய்திகள் கூறுகின்றன.  

இத்தொற்றுக் கிருமியால் தென் கொரியாவில் 11 பேர் இறந்துள்ளனர் என்று, இப்புதனன்று அந்நாடு அறிவித்துள்ளவேளை, இக்கிருமியால், இத்தாலியில் 372 பேர் தாக்கப்பட்டுள்ளனர், 12 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும், ஒருவர் குணமடைந்துள்ளார் என்று இப்புதனன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றிக்கிருமியால் உலக அளவில் குறைந்தது எண்பதாயிரம் பேர் தாக்கப்பட்டுள்ளனர் என்றும், 2750க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 February 2020, 13:51