யூபிலி ஆண்டைத் துவக்கியுள்ளது கோஸ்டா ரிக்கா தலத்திருஅவை யூபிலி ஆண்டைத் துவக்கியுள்ளது கோஸ்டா ரிக்கா தலத்திருஅவை 

கோஸ்டா ரிக்கா சோர்வின்றி நற்செய்தி அறிவிக்க...

1921ம் ஆண்டு, "Praedecessorum" என்ற ஆணைப் பத்திரத்தின் வழியாக, திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், கோஸ்டா ரிக்காவில் மறைமாவட்டங்களை உருவாக்கினார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

கோஸ்டா ரிக்கா தலத்திருஅவை, எல்லாருக்கும், குறிப்பாக, தேவையில் மற்றும், கிறிஸ்துவிற்குத் தொலைவில் இருப்பவர்களுக்கு, நற்செய்தியின் மகிழ்வைக் கொணரும் வழிகளைத் தொடர்ந்து ஆற்றுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிக்காவில் மறைமாவட்டங்கள் உருவாக்கப்பட்டதன் நூறாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, பிப்ரவரி 16, இஞ்ஞாயிறன்று, யூபிலி ஆண்டைத் துவங்கியிருக்கும் அத்தலத்திருஅவைக்கு அனுப்பிய செய்தியில், அந்நாட்டு கத்தோலிக்கர், நற்செய்தியை சோர்வின்றி அறிவிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கோஸ்டா ரிக்கா நாட்டிற்கு, கடந்த நூறு ஆண்டுகளாக இறைவன் வழங்கிய கொடைகளுக்கு நன்றி தெரிவித்துள்ள திருத்தந்தை, சமுதாய வாழ்வின் பல்வறு சூழல்களில் கிறிஸ்தவ வாழ்வுக்கு சான்று பகருமாறு, அந்நாட்டு மக்களிடம் கூறியுள்ளார்.

கோஸ்டா ரிக்காவில் இந்த யூபிலி ஆண்டு திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றி துவக்கி வைத்த திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள்,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கையொப்பமிட்டு அனுப்பிய செய்தியை வாசித்தார்.

1921ம் ஆண்டு, "Praedecessorum" என்ற ஆணைப் பத்திரத்தின் வழியாக, திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், கோஸ்டா ரிக்காவில் மறைமாவட்டங்களை உருவாக்கினார். அதன் நூறாம் ஆண்டை முன்னிட்டு, அந்நாட்டுத் தலத்திருஅவை, பிப்ரவரி 16, கடந்த சனிக்கிழமையன்று யூபிலி ஆண்டைத் துவக்கியுள்ளது. 2021ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி நிறைவடையும் இந்த ஆண்டிற்கு, திருப்பீடம் பரிபூரணபலன் சலுகையையும் வழங்கியுள்ளது. அந்நாட்டின் மூன்று பேராலயங்களுக்கு, இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

1502ம் ஆண்டில், நாடுகாண் பயணி கிறிஸ்டோபர் கொலம்பஸ் அவர்கள், தனது நான்காவது பயணத்தில் கோஸ்டா ரிக்கா மண்ணில் முதலில் கால்பதித்த எல் லிமோன் என்ற நகரிலுள்ள பேராலயத்தில், இந்த யூபிலி ஆண்டின் துவக்கமாக, பிப்ரவரி 13ம் தேதி திருப்பலி நிறைவேற்றப்பட்டது. 

வருகிற ஜூலை 19ம் தேதி San José பேராலயத்திலும், 2021ம் ஆண்டு பிப்ரவரியில் ந்த யூபிலி ஆண்டின் நிறைவு நிகழ்வு Alajuela மறைமாவட்டத்திலும் இடம்பெறும். பிப்ரவரி 16, இஞ்ஞாயிறன்று, இந்த மூன்று பேராலயங்களின் புனிதக் கதவுகள் திறக்கப்பட்டன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 February 2020, 15:00