Hanauவில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடம் Hanauவில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடம்  

ஜெர்மனியில் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு செபம்

கொடூரமான தாக்குதல் பற்றிய செய்தி அதிர்ச்சியளித்தது. உயிரிழந்தவர்களின் ஆன்மா நிறைசாந்தி அடைய செபிக்கின்றேன் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஜெர்மனியின் Hanauவில் இவ்வாரத்தில் இடம்பெற்ற கொடூரமான தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் மற்றும், அவர்களின் குடும்பங்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 19, இப்புதன் இரவில், ஜெர்மனியின் Frankfurt நகரின் புறநகர்ப் பகுதியில், 43 வயது நிரம்பிய ஜெர்மன் நாட்டவர் ஒருவர், பல்வேறு இடங்களில் துப்பாக்கியால் சுட்டதில், ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்த இவர்கள் எல்லாரும், துருக்கி, ருமேனியா, பல்கேரியா, போஸ்னியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

இந்த கொடூரமான தாக்குதல் பற்றிய செய்தி தனக்கு அதிர்ச்சியளித்தது என்றும், உயிரிழந்தவர்களின் ஆன்மா நிறைசாந்தி அடைய செபிக்கின்றேன் என்றும் கூறியுள்ள திருத்தந்தை, இறந்தவர்களின் குடும்பங்களுடன் தன் ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ளார்.

திருத்தந்தையின் இந்த இரங்கல் தந்திச் செய்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், Hanau பகுதியில் மேய்ப்புப்பணிக்குப் பொறுப்பான ஆயர் Michael Gerber அவர்களுக்கு அனுப்பியுள்ளார். ஆயரவர்களும், தங்களிடமிருந்து மாறுபட்ட பின்புலத்தைக் கொண்டிருக்கும் மக்களிடையே உரையாடலும் நட்புறவும் உருவாக்கப்படுவது இன்றியமையாதது என்று, தன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

இத்தாக்குதலை நடத்தியவர், அதற்குப்பின், தன் 72 வயது நிரம்பிய தாயையும் சுட்டுக் கொலை செய்து, தன்னையும் சுட்டுக் கொன்றுள்ளார். இதற்குமுன், இந்த கொலைகாரர், இணையபக்கத்தில் வெளியிட்ட காணொளியில், ஜெர்மனியில் சிறுபான்மை இனத்தவர் படுகொலை செய்யப்பட வேண்டும் என்ற செய்தியைப் பதிவு செய்துள்ளார் என்று செய்திகள் கூறுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 February 2020, 15:46