ஒன்றிணைந்து செபித்த வேளையில் திருத்தந்தை  (தொகுப்பு படம்) ஒன்றிணைந்து செபித்த வேளையில் திருத்தந்தை (தொகுப்பு படம்) 

துன்புறும் வெனெசுவேலா மக்களுக்காக திருத்தந்தை செபம்

ஏறத்தாழ 45 இலட்சம் வெனெசுவேலா மக்கள், கொலம்பியா, பெரு, பிரேசில், மெக்சிகோ, ஈக்குவதோர், அமெரிக்க ஐக்கிய நாடு, இஸ்பெயின் போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்துள்ளனர்.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வெனெசுவேலா நாட்டில் துன்புற்றுவரும் மக்களுக்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்  தொடர்ந்து செபிக்கின்றார் என்றும், அந்நாட்டின் நிலைமையை மிகுந்த அக்கறையோடு கவனித்து வருகிறார் என்றும், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவைத் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் கூறினார்.

‘எல்லையில் பிறரன்பு’ என்ற தலைப்பில், வெனெசுவேலா நாட்டு எல்லையிலுள்ள, கொலம்பியாவின் Cúcuta நகரில் நடைபெற்ற கூட்டத்திற்கு, சனவரி 31, இவ்வெள்ளியன்று செய்தி அனுப்பிய கர்தினால் டர்க்சன் அவர்கள், எல்லைப்புறத்தில் துன்புறும் அனைவருடனும், வெனெசுவேலா மக்களுடனும், திருத்தந்தையின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார்.  

வெனெசுவேலா நாடு எதிர்கொள்ளும் கடுமையான மனிதாபிமான நெருக்கடிகள் போன்று துன்பங்களை அனுபவிக்கும் அனைவருக்கும் தலத்திருஅவை பாகுபாடின்றி உதவிகளை ஆற்றி வருவதற்கு, திருத்தந்தை தன் நன்றியைத் தெரிவித்தார் என்றும், கர்தினாலின் செய்தி கூறுகின்றது.

தென் அமெரிக்க நாடான வெனெசுவேலாவில் இடம்பெற்றுவரும் மனிதாபிமான நெருக்கடியால், இலத்தீன் அமெரிக்கா மற்றும், கரீபியன் பகுதிகளில், ஏறத்தாழ 45 இலட்சம் பேர் புலம்பெயர்ந்துள்ளனர் என்ற, ஐ.நா. நிறுவனங்களின் புள்ளிவிவரங்களையும் குறிப்பிட்டுள்ள கர்தினால் டர்க்சன் அவர்கள், நாங்கள் அரசு-சாரா அமைப்பு இல்லை. எங்களது பணி, வெறும் உதவி என்பதையும் கடந்தது என்றும், இம்மக்களின் மனிதாபிமான துன்பங்களை அகற்றுவதற்கு, தனது திருப்பீட அவை உதவி செய்ய தீர்மானித்துள்ளது என்றும் கூறினார்.

கொலம்பியாவின் Cúcuta மறைமாவட்டம், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் அமைப்பின் உதவியுடன் சனவரி 30, 31 ஆகிய தேதிகளில், இக்கூட்டத்தை நடத்தியது.

வெனெசுவேலா நாட்டு, ஏறத்தாழ 45 இலட்சம் புலம்பெயர்ந்துள்ள மக்களில், 10 இலட்சத்திற்குமேல் கொலம்பியாவிலும், 5 இலட்சம் பேர் பெருவிலும், ஏனையோர், பிரேசில், மெக்சிகோ, ஈக்குவதோர், அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும், இஸ்பெயின் நாடுகளிலும் புலம்பெயர்ந்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 February 2020, 15:02