ஞாயிறு மூவேளை செப உரை 020220 ஞாயிறு மூவேளை செப உரை 020220 

ஆறுதல் தரும் செய்தியை எடுத்துரைக்க வேண்டிய கடமை

முடங்கிப்போயிருத்தல் என்பது, கிறிஸ்தவ சாட்சிய வாழ்வுக்கும், திருஅவையின் மறைப்பணிக்கும் எவ்விதத்திலும் ஒத்துப்போவதில்லை - திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்துவின் மீது கொண்டுள்ள விசுவாசத்தை உலகில் எடுத்துச்சென்று அறிவிப்பதில் உயிரூட்டத்துடன் செயல்படவேண்டிய தேவை அனைத்துக் கத்தோலிக்கர்களுக்கும் உள்ளது என, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வாழ்வுப் பாதையில் நடப்பதில் சோர்வடையாமல், இயேசுவின் ஆறுதல் தரும் செய்தியை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய கிறிஸ்தவர்களின் கடமையை, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளிடம் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவருக்கும் இக்கடமை உள்ளது என்றார்.

இயேசுவை கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்க மரியாவும் யோசேப்பும் வந்தபோது, சிமியோனையும் அன்னாவையும் சந்தித்த நிகழ்ச்சி பற்றி கூறும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் குறித்து, தன் சிந்தனைகளை மூவேளை செப உரையில் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த நால்வரும் பல்வேறு விதங்களில் வித்தியாசமானவர்கள் எனினும், இந்நால்வரும், இறைவனை அணுகி, அவரால் வழிநடத்தப்பட, தங்களை அனுமதித்தவர்கள் என்றார்.

இறைவனின் பாதையில் நடப்பதற்குரிய விருப்பத்தையும், தூய ஆவியாரால் வழிநடத்தப்படுவதற்கு அனுமதிப்பதையும், கிறிஸ்தவ வாழ்வு எதிர்பார்க்கிறது என்பதை, இந்த நால்வரில் நாம் கற்றுக்கொள்கிறோம் என்று கூறினார் திருத்தந்தை.

முடங்கிப்போயிருத்தல் என்பது, கிறிஸ்தவ சாட்சிய வாழ்வுக்கும், திருஅவையின் மறைப்பணிக்கும் எவ்விதத்திலும் ஒத்துப்போவதில்லை என்பதையும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ வாழ்வை வாழ்வதிலும், திருஅவையின் மறைப்பணிகளில் ஈடுபடுவதில் இளையோரையும், குடும்பங்களையும், முதியோரையும் ஈடுபடுத்துவதிலும், பங்குத்தளங்கள், அதிகம் அதிகமாக, முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என விண்ணப்பித்தார்.

நம்மைச் சுற்றி நடக்கும் நன்மைத்தனங்கள் குறித்து, நாம், திகைப்புடன் பெரும் வியப்படைவது, இறைவனுடன் நாம் கொள்ளும் சந்திப்பை பலனுள்ளதாக மாற்றும் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 February 2020, 12:40