தேடுதல்

Vatican News
பாரி நகர் திருப்பலியில் திருத்தந்தை பாரி நகர் திருப்பலியில் திருத்தந்தை   (Vatican Media)

பாரி நகர் திருப்பலியில் திருத்தந்தை வழங்கிய மறையுரை

அன்புகூர்ந்து மன்னிப்பவர்கள், இவ்வுலகின் கண்களுக்கு தோல்வியடைந்தவர்களாகத் தெரியலாம், ஆனால், அவர்கள், இறைவனின் கண்களில் பெரும் வெற்றியாளர்கள் – திருத்தந்தையின் மறையுரை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பகைமை உணர்வுகளுக்கு உரியவராக இருந்த எதிரியை, அன்புகூர்வதற்கு உரியவராக மாற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இயேசுவின் புரட்சியே, நாம் பின்பற்றவேண்டிய பாதையாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 23, இஞ்ஞாயிறன்று வழங்கிய மறையுரையில் கூறினார்.

“மத்தியத்தரைக்கடல் பகுதி, அமைதியின் எல்லை”என்ற தலைப்பில், இத்தாலியின் பாரி நகரில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்ட 58 ஆயர்களைச் சந்தித்து உரை வழங்கியத் திருத்தந்தை, அதைத் தொடர்ந்து, அந்நகர மக்களுக்கு ஆற்றிய திருப்பலியில் வழங்கிய மறையுரையில் இவ்வாறு கூறினார்.

இத்தாலிய ஆயர் பேரவை ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஆயர்களுடன், பாரி நகரச் சதுக்கத்தில் கூட்டுத் திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, இறைவனின் அன்புக்கு நாம் பதிலுரை வழங்கவில்லையெனினும், நம்மைத் தொடர்ந்து அன்புகூரும் விண்ணகத் தந்தையின் பாதையை நாமும் பின்பற்ற அழைக்கப்பட்டுள்ளோம் என்று தன் மறையுரையில் கூறினார்.

நம் எதிரிகளையும் அன்புகூரவேண்டும் என்று அழைப்பு விடுக்கும் இயேசு, தன்னை சிலுவையில் அறைந்தவர்களையும் சுட்டும் விரல் நீட்டி குற்றம் சுமத்தவில்லை, மாறாக, அவர்களை மன்னிக்கும்படி இறை தந்தையிடம் மன்றாடினார் என்று திருத்தந்தை தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

அன்புகூர்ந்து மன்னிப்பவர்கள், இவ்வுலகின் கண்களுக்கு தோல்வியடைந்தவர்களாகத் தெரியலாம், ஆனால், அவர்கள், இறைவனின் கண்களில் பெரும் வெற்றியாளர்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.

கெத்சமனி தோட்டத்தில், பேதுருவிடம், 'உனது வாளை அதன் உறையில் திரும்பப் போடு' என்று இயேசு கூறுவது, வாள்களைக் கொண்டு தீர்வுகள் காணமுடியாது என்பதையும், இறுதிவரை, அன்புகூர்வதில் மட்டுமே தீர்வு அடங்கியுள்ளது என்பதையும் எடுத்துரைப்பதாக உள்ளது என்று, தன் மறையுரையில் கூறினார் திருத்தந்தை.

23 February 2020, 12:40