தேடுதல்

Vatican News
அமேசான் பகுதியை மையப்படுத்தி, வத்திக்கானில் நடைபெற்ற சிறப்பு ஆயர்கள் மாமன்றத்தின்போது..... அமேசான் பகுதியை மையப்படுத்தி, வத்திக்கானில் நடைபெற்ற சிறப்பு ஆயர்கள் மாமன்றத்தின்போது.....  (Vatican Media)

திருத்தந்தையின் அமேசான் திருத்தூது அறிவுரை மடல் – சுருக்கம்

அமேசான் நிலப்பகுதி, ஒன்பது நாடுகளில் பரவியிருந்தாலும், இந்நிலப்பகுதியைக் குறித்து நான் வழங்க விழையும் திருத்தூது அறிவுரை, உலகமனைத்தையும் மனதில் வைத்து வழங்கப்படுகிறது - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமேசான் நிலப்பகுதி, ஒன்பது நாடுகளில் பரவியிருந்தாலும், இந்நிலப்பகுதியைக் குறித்து தான் வழங்க விழையும் திருத்தூது அறிவுரை, உலகமனைத்தையும் மனதில் வைத்து வழங்கப்படுகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூது அறிவுரை மடல் ஒன்றில் கூறியுள்ளார்.

2019ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி முதல் 27ம் தேதி முடிய, அமேசான் பகுதியை மையப்படுத்தி, வத்திக்கானில் நடைபெற்ற சிறப்பு ஆயர்கள் மாமன்றத்தில் நிகழ்ந்த பகிர்வுகளின் அடிப்படையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "Querida Amazonia", அதாவது, "அன்புக்குரிய அமேசான்" என்ற தலைப்பில் உருவாக்கியுள்ள திருத்தூது மடல், பிப்ரவரி 12, இப்புதனன்று வெளியிடப்பட்டது.

4 பிரிவுகளையும், 111 பத்திகளையும் கொண்டு, இஸ்பானிய மொழியில் திருத்தந்தை உருவாக்கியுள்ள இந்த அறிவுரை மடலில், அமேசான் நிலப்பகுதியைக் குறித்து அவர் கொண்டுள்ள நான்கு கனவுகள் ஆரம்பத்தில் இடம்பெற்றுள்ளன.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தான் காண விழையும் நான்கு கனவுகளை, சமுதாயக் கனவு, கலாச்சாரக் கனவு, சுற்றுச்சூழல் கனவு, மற்றும் திருஅவைக் கனவு என்ற நான்கு பிரிவுகளில் விளக்கிக் கூறியுள்ளார்.

"வறியோர், மண்ணின் மைந்தர், மற்றும் சமுதாயத்தில் மிகவும் நலிவுற்ற சகோதரர், சகோதரிகள் ஆகியோரின் சார்பாக, அவர்களின் குரல்கள் கேட்கப்படுவதற்கும், அவர்கள் மாண்பு உயர்த்தப்படுவதற்கும் போராடும் ஒரு அமேசான் பகுதியை நான் கனவு காண்கிறேன்" என்று, திருத்தந்தை தன் முதல் கனவை குறிப்பிட்டுள்ளார்.

மனித நேயத்தின் அழகு பல்வேறு வடிவங்களில் ஒளிரும்படி, தனக்கே உரிய கலாச்சாரக் கருவூலங்களைப் பேணிக்காக்கும் அமேசான் பகுதியை தனது இரண்டாவது கனவாக வடித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அளவற்ற தன் இயற்கை அழகையும், தன் காடுகளிலும், நதிகளிலும் வாழும் எண்ணற்ற உயிரினங்களையும் மிகுந்த ஆர்வத்துடன் பாதுக்காக்க விழையும் அமேசான் பகுதியை, தன் மூன்றாவது கனவாக, திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

தாங்கள் வாழும் பகுதிகளில் வேரூன்றி, தாராள அர்ப்பண உணர்வுடன் அமேசானின் உண்மை இயல்பைக் காட்டும் புதிய முகங்களை திருஅவைக்கு வழங்கும் கிறிஸ்தவக் குழுமங்களை, தனது நான்காவது கனவாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

முதல் 110 பத்திகளில் இந்த நான்கு கனவுகளைக் குறித்து தன் விளக்கங்களை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறுதி 111வது பத்தியில், அமேசான் பகுதியின் அன்னையான கன்னி மரியாவிடம் எழுப்பும் ஒரு வேண்டுதலுடன், "Querida Amazonia" என்ற தன் திருத்தூது அறிவுரை மடலை நிறைவு செய்துள்ளார்.

12 February 2020, 15:04