இந்திய கத்தோலிக்கர் இந்திய கத்தோலிக்கர் 

Tura மறைமாவட்டத்திற்கு புதிய துணை ஆயர்

திருத்தந்தை : விண்ணக கண்ணோட்டத்தில், இறைவனின் கண்களுடன், நற்செய்தியின் வழியாக வாழ்வை மேலிருந்து நோக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் :  வத்திக்கான் செய்திகள்

மேகாலயா மாநிலத்தின் Tura மறைமாவட்டத்தின் துணை ஆயராக அருள்பணி ஜோஸ் சிரக்கல் அவர்களை, இத்திங்களன்று நியமித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேகாலயா மாநிலத்தில் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள புதிய துணை ஆயர் சிரக்கல் அவர்கள், 1960ம் ஆண்டு கேரளாவின் கருக்குட்டி எனுமிடத்தில் பிறந்து, பள்ளிப் படிப்பை முடித்தபின்னர், 1976ம் ஆண்டு ஷில்லாங் குருமடத்தில் இணைந்து  பயின்றார். உரோம் நகரிலும் பயின்றுள்ள Tura மறைமாவட்டத்தின் புதிய துணை ஆயர் ஜோஸ் சிரக்கல் அவர்கள், மறைமாவட்டத்தின் பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார்.

இந்நியமனத்தை அறிவித்த அதே நாளில் இரு டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் முதல் டுவிட்டரில், 'கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம்' என்ற தவக்காலச் செய்தியின் தலைப்பை எழுதியுள்ளார்.

திருத்தந்தை தன் இரண்டாவது டுவிட்டரில், 'விண்ணகக் கண்ணோட்டத்தில், இறைவனின் கண்களுடன், நற்செய்தியின் வழியாக வாழ்வை மேலிருந்து நோக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என நான் ஆவல் கொள்கின்றேன்' என கூறியுள்ளார்.

மேலும், ஞாயிறன்று மூன்று டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதல் டுவிட்டரில், மத்தியதரைக்கடல் நாடுகளில் அமைதியைக் கட்டியெழுப்புவதன் அவசியம் குறித்தும், இரண்டாவது டுவிட்டரில், நாம் ஆற்றும் நன்மைத்தனங்கள் இலாப நோக்குடன் ஆற்றப்படக்கூடாது எனவும், மூன்றாவது டுவிட்டரில், பகையையும் பழி உணர்வையும் வெற்றிகொள்ளும் வரத்தை வேண்டுவோம் எனவும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 February 2020, 16:13