தேடுதல்

பிரசில் நாட்டின் அமேசான் பகுதியில் பிரசில் நாட்டின் அமேசான் பகுதியில் 

Querida Amazonía மடலைக் குறித்து திருஅவைத் தலைவர்கள்

அயர்லாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்க ஐக்கிய நாடு உட்பட, உலகின் பல பகுதிகளில் உள்ள தலத்திருஅவை தலைவர்கள், திருத்தந்தையின் திருத்தூது அறிவுரை மடலை, மிகுந்த ஆர்வத்துடன் வரவேற்றுள்ளனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கிய Querida Amazonía திருத்தூது அறிவுரை மடலை, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்க ஐக்கிய நாடு உட்பட, உலகின் பல பகுதிகளில் உள்ள தலத்திருஅவை தலைவர்கள், மிகுந்த ஆர்வத்துடன் வரவேற்றுள்ளனர்.

அயர்லாந்து தலத்திருஅவை

திருத்தந்தை வழங்கியுள்ள இந்த திருத்தூது அறிவுரை மடல், அமேசான் பகுதியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தாலும், அது, உலகெங்கும் வாழும் அனைவரும், தங்கள் பொதுவான இல்லமான இந்த பூமிக்கோளத்தைக் காப்பதற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாக அமைந்துள்ளது என்று, அயர்லாந்து ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் ஈமோன் மார்ட்டின் (Eamon Martin) அவர்கள் கூறியுள்ளார்.

பொருளாதாரம், சமுதாயம், மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய மூன்று அம்சங்களுக்கும் உள்ள பிணைப்பை இம்மடலில் வெளிச்சமிட்டு காட்டும் திருத்தந்தை, சுற்றுச்சூழலுக்கு இழைக்கப்படும் கொடுமை, மனிதர்களுக்கு, குறிப்பாக, வறியோருக்கு இழைக்கப்படும் கொடுமை என்று வலியுறுத்திக் கூறியுள்ளார் என்பதை, பேராயர் மார்ட்டின் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆஸ்திரேலிய தலத்திருஅவை

கத்தோலிக்கத் திருஅவை வெளியிடும் ஒவ்வொரு ஏடும் உலகினரின் கவனத்தை ஈர்ப்பது உறுதி என்று கூறிய ஆஸ்திரேலிய ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் மார்க் கோலெரிட்ஜ் (Mark Coleridge) அவர்கள், அமேசான் சிறப்பு ஆயர் மாமன்றம் நிறைவுற்ற நாளிலிருந்து, இந்த எட்டிற்காக, திருஅவையும், உலகமும் காத்திருந்தன என்று கூறினார்.

அமேசான் குறித்து திருத்தந்தை எழுப்பியுள்ள பல சிக்கலான கேள்விகள், தற்போது, ஆஸ்திரேலியாவிலும் எதிரொலிப்பதை தலத்திருஅவை ஆழமாக உணர்ந்துள்ளது என்றும், அமேசான் நிலப்பகுதி எங்களிடமிருந்து தூரமாக இருந்தாலும், அங்குள்ள பிரச்சனைகள் எங்களுக்கு மிக அருகில் உள்ளன என்றும், பேராயர் கோலெரிட்ஜ் அவர்கள் எடுத்துரைத்தார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு தலத்திருஅவை

திருத்தந்தை வெளியிட்டிருக்கும் Querida Amazonía என்ற திருத்தூது அறிவுரை மடல், வட மற்றும் தென் அமெரிக்க கண்டத்தில் வாழும் நமக்கு, நம் வாழ்வு முறையை சீர்தூக்கிப் பார்க்க விடுக்கப்பட்டுள்ள சவால் என்று, அமெரிக்க ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் ஹோஸே கோமஸ் (José Gomez) அவர்கள் கூறினார்.

இவ்வுலகின் நுரையீரலாக அமைந்துள்ள அமேசான் பகுதியையும், நமது பொதுவான இல்லமான இந்தப் பூமிக்கோளத்தையும் காப்பதற்கு, திருத்தந்தை விடுத்துள்ள அழைப்பை முழுமனதுடன் ஏற்று செயலாற்ற அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் அனைத்து கத்தோலிக்கர்களுக்கும் தான் அழைப்பு விடுப்பதாக பேராயர் கோமஸ் அவர்கள் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 February 2020, 15:11