தேடுதல்

கத்தோலிக்கக் கல்விப் பேராயத்தின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்களுடன் திருத்தந்தை கத்தோலிக்கக் கல்விப் பேராயத்தின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்களுடன் திருத்தந்தை 

கல்வியின் ஒரு சில பண்புகள் குறித்து திருத்தந்தை

தன்னலத்தை வழிபட கற்றுத்தரும் இவ்வுலகின் போக்கிற்கு எதிராக, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமுதாயத்தை உருவாக்குவதன் வழியே அமைதியைக் கொணர முடியும் என்ற வழியைச் சொல்லித்தருவது, கல்வியின் முக்கிய சவால் - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கல்வி என்பது, மக்களை, ஒளியை நோக்கி நடத்திச் செல்லும் செயல்திறன் கொண்ட ஓர் எதார்த்தம் என்றும், அது, முழு மனித முன்னேற்றத்தை நோக்கி நம்மை வளர்ச்சியடையச் செய்கிறது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த திருப்பீடப் பேராயத்தின் உறுப்பினர்களிடம் கூறினார்.

கல்வியின் பண்புகள்

கத்தோலிக்கக் கல்விப் பேராயத்தின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்களை, பிப்ரவரி 20 இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, கல்வியின் ஒரு சில பண்புகளை மையப்படுத்தி, அவர்களுக்கு உரை வழங்கினார்.

கல்வி என்பது, சுற்றுச்சூழல் இயக்கத்தின் ஓர் அங்கம் என்பதை முதல் பண்பாகச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு தனி மனிதரும், நமது பொதுவான இல்லத்தின் உறுப்பினர் என்பதை உணரச்செய்வது, கல்வியின் ஒரு முக்கியப் பணி என்று எடுத்துரைத்தார்.

சமநிலையை உருவாக்கும் கல்வி

கல்வி, ஒருவருக்கு சமநிலையை உருவாக்கவேண்டும் என்று, Laudato Si என்ற சுற்றுமடலில் தான் எழுதியுள்ளதை, இவ்வுரையில் நினைவுகூர்ந்த திருத்தந்தை, ஒருவருக்குள் உருவாகும் சமநிலை, அவரை, ஏனைய மக்களுடனும், இவ்வுலகின் படைப்புக்கள் அனைத்துடனும் சமநிலையில் வாழ்வதற்குக் கற்றுத்தருகிறது என்று கூறினார்.

அனைத்து உண்மைகளையும் மாணவருக்கு வழங்குவது, கல்வியின் ஒரு முக்கிய கடமை என்று வலியுறுத்திக் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வுலகின் வறுமை, போர்களாலும், புலம்பெயர்தலாலும் மக்கள் அடையும் துன்பங்கள் என்ற கடினமான உண்மைகளையும் மாணவர்களுக்கு வழங்குவது அவசியம் என்று எடுத்துரைத்தார்.

அமைதியை உருவாக்கும் கல்வி

அமைதியைக் காப்பதும், வளர்ப்பதும், கல்வியின் மற்றொரு முக்கிய பண்பு என்பதைக் குறிப்பிட்டத் திருத்தந்தை, அமைதி என்பது, இவ்வுலகில் சாத்தியமே என்பதை, இளையோர், தொடர்ந்து உணர்த்தி வருகின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

தன்னலத்தை கடவுளாக வழிபட கற்றுத்தரும் இவ்வுலகின் போக்கிற்கு எதிராக, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமுதாயத்தை உருவாக்குவதன் வழியே அமைதியைக் கொணர முடியும் என்ற வழியைச் சொல்லித்தருவது, கல்வியின் முக்கிய சவால் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையில் வலியுறுத்தினார்.

குழு கலாச்சாரத்தை வளர்க்கும் கல்வி

குழுக்களாக இணைந்து செயலாற்றும் ஒரு கலாச்சாரத்தை உருவாக்குவது கல்வியின் மற்றொரு பண்பு என்பதை அடுத்த பண்பாக எடுத்துரைத்த திருத்தந்தை, குழு கலாச்சாரத்தை வளர்க்க திருஅவையின் ஏடுகளிலிருந்து ஒரு சில எடுத்துக்காட்டுகளை முன்வைத்தார்.

மே 14, வத்திக்கானில் பன்னாட்டுக் கருத்தரங்கு

உலகளாவிய கல்வி ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கும் நோக்கத்துடன், இவ்வாண்டு மே 14ம் தேதி, வத்திக்கானில் நடைபெறவிருக்கும் பன்னாட்டு கருத்தரங்கைக் குறித்து தன் உரையின் இறுதியில் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த கருத்தரங்கிற்கு, கத்தோலிக்கக் கல்விப் பேராயம் ஆற்றவிருக்கும் முக்கியமான பணிகளுக்கு தன் வாழ்த்துக்களையும், ஆசீரையும் வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 February 2020, 14:46