புனித சபீனா பெருங்கோவிலில் திருநீற்றுப் புதன்  திருப்பலி 260220 புனித சபீனா பெருங்கோவிலில் திருநீற்றுப் புதன் திருப்பலி 260220 

திருநீற்றுப் புதனன்று திருத்தந்தை வழங்கிய மறையுரை

நிலையில்லாமல் கடந்துசெல்லும் பணம், புகழ் போன்ற தூசிகளை நாம் துரத்திச் செல்வதை விடுத்து, நாம் இறைவனால் அன்புகூரப்படுபவர்கள், என்பதை உணரும் வரத்தை தவக்காலத்தில் பெற முயல்வோம் - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்துவரும் இந்த பிரபஞ்சத்திற்கு முன் நாம் அனைவரும் தூசிகள் ஆயினும், நாம் இறைவனால் அன்புகூரப்பட்டுள்ள தூசிகள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருநீற்றுப் புதனன்று வழங்கிய மறையுரையில் கூறினார்.

இறைவனின் பார்வையில் விலையேறப்பெற்ற தூசிகள்

பிப்ரவரி 26 சிறப்பிக்கப்பட்ட திருநீற்றுப் புதனன்று மாலை, புனித சபீனா பெருங்கோவிலில் திருப்பலியை நிறைவேற்றியத் திருத்தந்தை, தவக்காலத்தின் துவக்கத்தில் நாம் சாம்பலைப் பெறும் வேளையில், "நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய்" (தொ.நூ. 3:19) என்று கூறப்படும் சொற்களை மையப்படுத்தி, மறையுரை வழங்கினார்.

கடினமானச் சூழல்களிலும், தோல்வியிலும், துவண்டுபோகும் வேளைகளில், நாம், நம்மையே தூசியாக எண்ணுகிறோம் என்பதை தன் மறையுரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வேளைகளில், நாம் இறைவனின் பார்வையில் விலையேறப்பெற்ற தூசிகள் என்பதையும் உணர்ந்துபார்க்கவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

தூசிகளைத் துரத்திச் செல்லும் வாழ்வு

நம் நெற்றியில் சாம்பல் பூசப்படும் வேளையில், நாம் எவ்வகை எண்ணங்களை நம் சிந்தனையில் பதிக்கிறோம் என்ற கேள்வியை எழுப்பிய திருத்தந்தை, நம் வாழ்வு, தூசிகளைத் துரத்திச் செல்லும் வாழ்வாக அமைந்துவிடக்கூடாது என்பதையும் வலியுறுத்திக் கூறினார்.

நிலையில்லாமல் கடந்து செல்லும் பணம், புகழ் போன்ற தூசிகளை நாம் துரத்திச் செல்வதை விடுத்து, நாம் இறைவனால் அன்புகூரப்படுபவர்கள், எனவே, நிலையான வாழ்வுக்குச் சொந்தமானவர்கள் என்பதை உணரும் வரத்தை தவக்காலத்தில் பெற முயல்வோம் என்று திருத்தந்தை தன் மறையுரையில் அழைப்பு விடுத்தார்.

தூசிகளிலிருந்து நாம் கழுவப்படவேண்டும்

அழிவையும், போரையும் உருவாக்கும் இவ்வுலகில், நம்மைச் சுற்றி தூசியும், புழுதியும் நிறைந்துள்ளன என்று தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த அழிவுக் கலாச்சாரத்திற்கு நாமும் உடன்பட்டு, நம்மையும், நம் குடும்பம், சமுதாயம் அனைத்தையும் அழிக்க முயல்கிறோம் என்று கவலையுடன் கூறினார்.

நம் உள்ளங்களை அழுக்காக்கும் தூசிகளிலிருந்து நாம் கழுவப்படவேண்டும் என்று தன் மறையுரையின் இறுதியில் கூறியத் திருத்தந்தை, இவ்வாறு கழுவப்படுவதற்கு, திருத்தூதர் பவுல் விடுத்த "கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம்" (2 கொரி. 5:20) என்ற விண்ணப்பத்தை நினைவுறுத்தினார்.

நாமாகவே நம் தூசிகளிலிருந்து விடுபட இயலாது, இயேசுவால் மட்டுமே இது இயலும் என்பதால், அவரிடம் ஒப்புரவாகி, அவரது உயிர்ப்பின் அனுபவத்தைப் பெற இந்த தவக்காலத்தில் முயல்வோம் என்ற அழைப்புடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் திருநீற்று புதன் மறையுரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 February 2020, 15:17