தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்திகளை வெளியிடும் @pontifex இணையதளப் பக்கம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்திகளை வெளியிடும் @pontifex இணையதளப் பக்கம் 

பிரான்சிசின் பொருளாதாரம் - 2000 இளம் தொழில்முனைவோர்

“பிரான்சிசின் பொருளாதாரம்” எனப்படும் பன்னாட்டு நிகழ்வில், சுலோவாக்கியா மற்றும், தாய்லாந்திலிருந்து 12 வயது நிரம்பிய தொழில்முனைவோர் கலந்துகொள்ளவுள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கடவுளை வணங்குதல் என்பதன் உண்மையான அர்த்தம் என்னவென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 10, இவ்வெள்ளியன்று தன் இரு டுவிட்டர் செய்திகளில், இரத்தின சுருக்கமாக வெளியிட்டுள்ளார்.

“வணங்குதலில், பணத்தின் கடவுள், நுகர்வின் கடவுள், புலனின்பத்தின் கடவுள், வெற்றியின் கடவுள், தன்னலத்தின் கடவுள் போன்ற எவற்றையெல்லாம் வணங்கக் கூடாதோ அவற்றையெல்லாம் புறக்கணிக்கக் கற்றுக்கொள்கிறோம்” என்ற சொற்கள், திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியில், இவ்வெள்ளியன்று வெளியாயின.

திருத்தந்தையின் இரண்டாவது டுவிட்டர் செய்தியில், “வணங்குதல் என்பது, வாழ்வின் மேன்மை, பொருள்களைக் கொண்டிருப்பதில் அல்ல, மாறாக, அன்புகூர்தலில் உள்ளது என்பதை, எல்லாம்வல்லவரின் பிரசன்னத்தில் கண்டுணர்ந்து, அவர் முன்னிலையில் தாழ்த்திக் கொள்வதாகும்” என்ற சொற்கள், இவ்வெள்ளியன்று பதிவாகியிருந்தன.    

“பிரான்சிசின் பொருளாதாரம்”

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அழைப்பின்பேரில், இம்மாதம் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை, இத்தாலியின் அச்சி நகரில் நடைபெறும், “பிரான்சிசின் பொருளாதாரம்” என்ற பன்னாட்டு நிகழ்வில் கலந்துகொள்வதற்கு, 115 நாடுகளிலிருந்து 3,300க்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கலந்துகொள்ள விண்ணப்பித்துள்ளவர்களில், இளம் தொழில்முனைவோர் மற்றும், இளம் பொருளாதார நிபுணர்கள் மட்டுமே, இரண்டாயிரத்திற்கு அதிகம் என்றும்,  இவர்களில் 41 விழுக்காடு பெண்கள் மற்றும், 56 விழுக்காடு ஆண்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

80க்கும் அதிகமான நிகழ்வுகளாக, 12 கிராமங்களில், இக்காலப் பொருளாதாரம் குறித்து ஆய்வுகள் இடம்பெறும் எனவும், இதில் 12 வயது நிரம்பிய தொழில்முனைவோர், சுலோவாக்கியா மற்றும், தாய்லாந்திலிருந்து விண்ணப்பித்துள்ளனர் என்றும்,  அறிவிக்கப்பட்டுள்ளது.

10 January 2020, 14:57