தேடுதல்

Vatican News
2020.01.11 Pontificio Collegio Etiopico in Vaticano 2020.01.11 Pontificio Collegio Etiopico in Vaticano  (Vatican Media)

நூற்றாண்டு காணும் எத்தியோப்பிய கல்லூரிக்கு வாழ்த்து

திருத்தந்தை 4ம் சிக்துஸ் அவர்கள், 1481ம் ஆண்டில் உரோம் நகருக்கு வந்த எத்தியோப்பிய திருப்பயணிகள் தங்குவதற்கு, புனித பேதுரு பெருங்கோவிலுக்குப் பின்னால், வத்திக்கான் தோட்டத்திலுள்ள புனித ஸ்தேவான் கட்டடத்தை வழங்கினார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பொதுவான மரபைக் கொண்டிருக்கும், எத்தியோப்பியா மற்றும் எரிட்ரியா நாடுகளும், அவற்றின் சமுதாயங்களும் கடந்த பல ஆண்டுகளாக அனுபவித்த வேதனைகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அவை, இனங்களுக்கு இடையேயும், நாடுகளுக்கு இடையேயும், பிரிவினைகளில் இனிமேல் ஒருபோதும் வீழ்ந்துவிடாமல் இருப்பதில் அக்கறை காட்டுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று கேட்டுக்கொண்டார்.

வத்திக்கான் தோட்டத்திலுள்ள எத்தியோப்பிய பாப்பிறை குருத்துவ கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதன் நூறாம் ஆண்டை முன்னிட்டு, எத்தியோப்பியா மற்றும் எரிட்ரியா நாடுகளின் திருஅவைத் தலைவர்கள் மற்றும், அக்கல்லூரியின் அருள்பணியாளர்களை, சனவரி 11, இச்சனிக்கிழமையன்று, திருப்பீடத்தில் சந்தித்து நல்வாழ்த்துக் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சில மாதங்களுக்குமுன்பு வரை, உடன்பிறப்பு போரில் ஈடுபட்டு, தற்போது நல்லிணக்க வாழ்வுக்கு அர்ப்பணித்துள்ள, எத்தியோப்பியா மற்றும் எரிட்ரியா நாடுகளுக்காக ஆண்டவருக்கு நன்றி கூறுகிறேன் என்றுரைத்த திருத்தந்தை, இவ்வேளையில், இவ்விரு நாடுகளில், வறுமையால் வாடும் மக்களையும் நினைக்கின்றேன் என்று கூறினார்.

இவ்விரு நாடுகளின் அருள்பணியாளர்கள், நல்லுறவுகளையும், அமைதியையும் கட்டியெழுப்புகின்றவர்களாக எப்போதும் செயல்படுமாறும்  கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள விசுவாசிகளுக்கு, கடவுள் வழங்கும் அமைதி மற்றும், நல்லுறவு எனும் கொடைகளைக் கற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தினார்.

விசுவாசிகளின் மன மற்றும், உடல் காயங்களைக் குணப்படுத்தவும், இந்நாடுகளின் சிறார் மற்றும், இளைஞர்களின் வருங்காலத்திற்காக, ஒப்புரவின் பாதைகளைத் தேட உதவவும் வேண்டுமென்று, எத்தியோப்பியா மற்றும் எரிட்ரியா நாடுகளின் அருள்பணியாளர்களைக் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்விரு நாடுகளில் பலர், வருங்காலத்தின் மீது நம்பிக்கை வைத்து, தரை மற்றும், கடல் வழியாக, வேறு நாடுகளுக்கு மேற்கொள்ளும் பயணத்தில் கடும் துயரங்களை எதிர்கொள்கின்றனர் என்று கூறியத் திருத்தந்தை, இவ்வாறு கரை சேருகின்ற புலம்பெயர்ந்தவர்களுக்கு, இவ்விரு நாடுகளின் திருஅவை அதிகாரிகள் ஆற்றும் நற்பணிகளை ஊக்குவித்தார்.

எத்தியோப்பியா மற்றும் எரிட்ரியா நாடுகளின் திருஅவைகள், தங்களின் விலைமதிப்பில்லாத திருஅவை மரபுகளைப் பாதுகாக்குமாறும், மறைப்பணி ஆர்வத்தில் எப்போதும் ஒன்றிணையுமாறும் கூறியத் திருத்தந்தை, இவ்விரு நாடுகளில்,    கத்தோலிக்கத் திருஅவைகள் பொதுநலனுக்குப் பணியாற்றுவதற்கென, உரோம் மற்றும், ஏனையப் பகுதிகளில் மாணவர்கள் தங்கள் கல்வியை முடிப்பதற்கு சுதந்திரம் உறுதி செய்யப்படும் என்று தான் நம்புவதாகக் குறிப்பிட்டார்.

அன்னை மரியாவிடம் பக்திகொண்ட இவ்விரு நாடுகளின் திருஅவைகளை அந்த அன்னையின் பாதுகாவலில் அர்ப்பணித்து, தனக்காகவும், தனது கருத்துக்களுக்காகவும் செபிக்குமாறு கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

எத்தியோப்பிய பாப்பிறை குருத்துவ கல்லூரி

திருத்தந்தை 4ம் சிக்துஸ் அவர்கள், 1481ம் ஆண்டில் உரோம் நகருக்கு வந்த எத்தியோப்பிய திருப்பயணிகள் தங்குவதற்கு, புனித பேதுரு பெருங்கோவிலுக்குப் பின்னால், வத்திக்கான் தோட்டத்திலுள்ள புனித ஸ்தேவான் கட்டடத்தை வழங்கினார். இத்திருப்பயணிகளுள் பெரும்பாலானோர் துறவிகளாக இருந்தனர். பின்னர், திருத்தந்தை 10ம் லியோ அவர்கள், புனித ஸ்தேவான் ஆலயம் மற்றும், கட்டடத்தை எத்தியோப்பிய துறவிகள் தங்குவதற்கு வழங்கினார். தற்போது புனித ஸ்தேவான் இல்லம், எத்தியோப்பிய கலாச்சாரம் மற்றும் கல்வி மையமாக விளங்குகிறது. 1919ம் ஆண்டு, இயேசு சபை அருள்பணி பெக்காரி அவர்கள், புனித ஸ்தேவான் இல்லத்தில் எத்தியோப்பிய பாப்பிறை குருத்துவ கல்லூரியை உருவாக்கினார்.

11 January 2020, 14:37