தேடுதல்

Vatican News
கிறிஸ்தவ ஒன்றிப்பு வார செபம் - 250120 கிறிஸ்தவ ஒன்றிப்பு வார செபம் - 250120  (Vatican Media)

விருந்தோம்பல் எனும் பண்பிற்கு முக்கிய இடம் கொடுப்போம்

திருத்தந்தை : மீட்பு என்பது அனைவருக்கும் உரியது என்பதால், நம் சமூகங்களுக்காக மட்டும் உழைக்காமல், அனைவருக்காகவும் உழைக்கும் திறந்தமனதுடன் செயல்படவேண்டியது அவசியம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

ஒவ்வொருவரும், தங்களுடைய சமூகங்கள் மீது மட்டும் அக்கறைகொள்ளும் வண்ணம், தங்களையே சுருக்கிக்கொள்ளாமல், அனைத்து மனித குலத்தின் மீதும் அக்கறை கொள்ள, திறந்தமனதுடன் செயல்படவேண்டும் என அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த வாரம் சிறப்பிக்கப்பட்ட 53வது கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமையன்று, பல கிறிஸ்தவ சபைகளுடன் இணைந்து செபவழிபாட்டை நடத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த காலத் தடைகளை வெற்றிகொண்டு, கிறிஸ்தவ ஒன்றிப்பை அருகாமையில் கொள்ளவேண்டும் என அழைப்புவிடுத்தார்.

இறைவன் விரும்பும் ஒன்றிப்பை நோக்கி நாம் செல்லும்போது, விசுவாசத்தினுள் நம் சகோதரர்களாக இருப்பவர்களிடையேயும், தேவையிலிருப்போருடனும் திறந்த மனதுடன் செயல்பட ஊக்கம் கிட்டும் என்றார் திருத்தந்தை.

உரோம் நகரின், புனித பவுல் பெருங்கோவிலில், சனவரி 25, இச்சனிக்கிழமை மாலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்திய இந்த வழிபாட்டில், பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

உலகின் கண்களுக்கு மிகச்சிறியதாக இருக்கும் கிறிஸ்தவ சமூகங்கள்கூட, தூய ஆவியாரை அனுபவித்து, கடவுள் மற்றும் அயலார் மீதுள்ள அன்பால் தூண்டப்பட்டவர்களாக செயல்படும்போது, கிறிஸ்தவ சமூகம் முழுமைக்கும் உரிய ஒரு செய்தியைக்கொண்டுள்ளார்கள் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல பகுதிகளில் துன்பங்களை அனுபவிக்கும் கிறிஸ்தவ சமூகங்கள் குறித்தும் சிந்திப்போம் என அழைப்பு விடுத்தார்.

மீட்பு என்பது அனைவருக்கும் உரியது என்பதால், நம் சமூகங்களுக்காக மட்டும் உழைக்காமல், அனைவருக்காகவும் உழைக்கும் திறந்தமனதுடன் செயல்படவேண்டியது அவசியம் என எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்தவ சமூகங்கள் மற்றும் குடும்பங்களின் பாரம்பரியமாக இருக்கும் விருந்தோம்பல் எனும் பண்பிற்கு, கிறிஸ்தவ சமூகங்களிலும், அனைத்து வாழ்வு நடவடிக்கைகளிலும் முக்கிய இடம் கொடுப்போம் என, மேலும் அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ். .

27 January 2020, 15:28