நோயாளிகளை சந்திக்கும் திருத்தந்தை நோயாளிகளை சந்திக்கும் திருத்தந்தை 

வாழ்வு புனிதமானது, கருணைக்கொலைக்கு மறுப்பு

மருத்துவப் பணிகளில் ஒவ்வொரு மனிதரின் மாண்பும், வாழ்வும் ஊக்குவிக்கப்பட வேண்டும், குணமாக்க முடியாத நிலையில் உள்ளவர்களையும்கூட, கருணைக்கொலைச் செய்வதற்கு எவ்விதத்திலும் உடன்படக் கூடாது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலகில் ஒவ்வொருவரும் தங்களின் உடல்நலனைப் பாதுகாத்து பேணுவதற்கு உதவுவதற்கென, தகுந்த சகிச்சைகள் வழங்கப்படுவதில் ஒத்துழைப்பை உறுதிசெய்வதற்கு தோழமையுணர்வு மற்றும், அரசின் கொள்கைகளால் முயற்சிகள் எடுக்கப்படும் என்ற தனது நம்பிக்கையை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வருகிற பிப்ரவரி மாதம் 11ம் தேதி சிறப்பிக்கப்படும், 28வது நோயாளர் உலக நாளுக்கென, சனவரி 3, இவ்வெள்ளியன்று செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,   நிதி குறித்த கவலையில், சமுதாய நீதி புறக்கணிக்கப்படக் கூடாது என, உலகிலுள்ள அனைத்து நலவாழ்வு நிறுவனங்கள் மற்றும், அரசுத் தலைவர்களை விண்ணப்பிப்பதாகக் கூறியுள்ளார்.

“பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்.11:28) என்ற இயேசு கிறிஸ்துவின் அருள்வாக்கை மையப்படுத்தி, இச்செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை, கிறிஸ்துவின் இச்சொற்கள், புண்பட்டுள்ள மற்றும், துன்புறும் மக்களுடன், அவரின் தோழமையுணர்வை வெளிப்படுத்துகின்றன என்று கூறியுள்ளார்.

இயேசு எவரையும் ஒதுக்காமல், அவர்களின் உடல்நல நிலைகளுடன், அனைவரையும் முழுமையாக அணைத்துக் கொள்கிறார் என்றும், இவர்கள் நோய்களால் உடல் அளவில் மட்டுமன்றி, உறவு, அறிவு, பாசம், ஆன்மீகம் போன்ற எல்லா நிலைகளிலும்  துன்புறுகின்றனர் என்றும், இதனால், நோயாளிகள் தங்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதோடு, தங்கள் மீது அக்கறை காட்டப்பட வேண்டுமென எதிர்பார்க்கின்றனர் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

நோயாளிகளுடன் அவர்களின் குடும்பங்களும் துன்புறுகின்றன, அதனால் அக்குடும்பங்களுக்கும் ஆதரவும், ஆறுதலும் அவசியம் எனவும், நோயாளிகள் எல்லாருமே, ஒருவிதத்தில், “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்கள்தான்” எனவும்  கூறியுள்ள திருத்தந்தை, திருஅவை இவர்களுக்கு, அதிகமதிகமாக நல்ல சமாரியராக  மாறுவதற்கு விரும்புகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவத்துறைப் பணியாளர்கள்

மருத்துவப் பணியாளர்கள் மற்றும், நோயாளிகளுக்கு உதவுகின்ற தன்னார்வலர்கள் எல்லாருக்கும் நன்றி கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நோய்கள் பற்றிய ஆய்வு, சிகிச்சை, மறுவாழ்வு போன்ற அனைத்திலும் மனிதர் என்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கருணைக்கொலைக்கு மறுப்பு

மருத்துவப் பணிகளில் ஒவ்வொரு மனிதரின் மாண்பும், வாழ்வும் ஊக்குவிக்கப்பட வேண்டும், குணமாக்க முடியாத நிலையில் உள்ளவர்களையும்கூட, கருணைக்கொலைச் செய்வதற்கும், மருத்துவர் உதவியுடன் செய்யப்படும் தற்கொலைக்கும் எவ்விதத்திலும் உடன்படக் கூடாது என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, வாழ்வு புனிதமானது, அது கடவுளுக்கு உரியது, அது மீறப்பட முடியாதது, எனவே வாழ்வை, தன்விருப்பத்துடன் முடித்துக்கொள்ள எவருக்கும் உரிமை கிடையாது என்பதை வலியுறுத்தியுள்ளார்.

மனித வாழ்வு, தாயின் கருவில் உருவானது முதல், இயற்கையான மரணம் அடையும்வரை, பாதுகாக்கப்பட வேண்டும், மருத்துவத் துறையில் பணியாற்றுகின்றவர்கள், கிறிஸ்தவப் பிறரன்பால் உந்தப்பட்டு, வாழ்வதற்குள்ள உண்மையான மனித உரிமையைப் பாதுகாப்பதற்கு உழைக்க வேண்டும் என்று திருத்தந்தை வலியுறுத்தினார்.

மருத்துவப் பணியாளர்கள் தாக்கப்படுதல்

போர்கள் மற்றும், வன்முறைச் சூழல்கள் சிலவற்றில், மருத்துவப் பணியாளர்கள் தாக்கப்படுகின்றனர், சில பகுதிகளில், அரசியல் அதிகாரிகள் தங்களின் ஆதாயங்களுக்காக, மருத்துவக் கவனிப்புக்களைத் தடுக்க முயற்சிக்கின்றனர், இவ்வாறு, மருத்துவத் துறையினரின் நியாயமான சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகின்றனர், இப்பணியாளர்கள் தாக்கப்படுகையில் அதுபற்றி எவரும் கவலைப்படாமலும் இருக்கின்றனர் என்றும் திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.

வறுமையில் வாழ்கின்ற காரணத்தால், மருத்துவ உதவிகள் கிடைக்காமல் உலகெங்கும் துன்புறும் பல சகோதரர் சகோதரிகளை, இந்த 28வது நோயாளிகள் உலக நாளில் நினைத்துப் பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ள, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,   இக்காரணத்தால், நிதி குறித்த கவலையில், இவர்களுக்கு சமுதாய நீதி புறக்கணிக்கப்படக் கூடாது என, உலகிலுள்ள அனைத்து நலவாழ்வு நிறுவனங்கள் மற்றும், அரசுத் தலைவர்களை விண்ணப்பிப்பதாகக் கூறியுள்ளார்.

புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால், கத்தோலிக்கத் திருஅவையில் 1992ம் ஆண்டு மே மாதம் 13ம் தேதி உருவாக்கப்பட்ட நோயாளிகள் உலக நாள், 1993ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி லூர்து அன்னை திருநாளன்று முதல் முறையாக சிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 11ம் தேதி, இந்த உலக நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

டுவிட்டர்

மேலும், “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்.11:28). 28வது உலக நோயாளிகள் நாளுக்குச் செய்தி என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியிலும் இடம்பெற்றுள்ளன.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 January 2020, 14:47