தேடுதல்

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ 

ஆஸ்திரேலியர்களுக்கு கடவுள் உதவுவாராக

ஆஸ்திரேலியாவில், தென் கொரியா அளவு காடுகள் சாம்பலாகியுள்ளன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 8, இப்புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில், பெருந்தீயால் பாதிப்புக்களை அனுபவித்துவரும் ஆஸ்திரேலியா நாட்டிற்காகச் செபிக்குமாறு அழைப்புவிடுத்தார்.

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்நாட்டின் மக்களுக்கு இறைவன் உதவ வேண்டும் என அவரை நோக்கி வேண்டுவோம் என்ற அழைப்பை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்துன்ப வேளையில் ஆஸ்திரேலிய மக்களுக்கு மிக அருகாமையில் தான் இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவில் இடம்பெற்றுவரும் காட்டுத்தீயால், இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரியா அளவு காடுகள் சாம்பலாகியுள்ளன. சிட்னி பல்கலைக்கழக சுற்றுச்சூழல் ஆர்வலரின் கூற்றுப்படி, இப்பெருந்தீயால் உயிரிழந்துள்ள, அல்லது, காயமடைந்துள்ள விலங்கினங்களின் எண்ணிக்கை 100 கோடியை எட்டலாம் என கணிக்கப்பட்டுள்ளது. Sydney, Melbourne தலைநகர் Canberra உட்பட பல்வேறு நகர்கள் புகை மூட்டத்தால் சூழப்பட்டுள்ள வேளையில், பசிபிக் பெருங்கடல் மேலாக கடந்து சென்ற புகை மண்டலம், தென் அமெரிக்க நாடுகளைச் சென்றடைந்துள்ளது. இப்புகை அண்டார்டிக்காவையும் சென்றடைந்திருக்கலாம் என, ஐ.நா.வின் சுற்றுச்சூழல் அமைப்பு தன் அச்சத்தை வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 January 2020, 14:59