தேடுதல்

இறைவார்த்தை ஞாயிறு திருப்பலியின்போது - 260120 இறைவார்த்தை ஞாயிறு திருப்பலியின்போது - 260120 

நமக்கென சுயநலமாக வாழ்ந்த காலம் போதும்

நம் வாழ்வைப்பற்றி பேசும் இறைவார்த்தைக்குச் செவிமடுக்க, விவிலியத்தை, எப்போதும், நம் அருகிலேயே வைத்துக்கொள்வோம் – திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

நமக்கென வாழ்ந்த காலம் போதும், இனிமேலாவது இறைவனுடனும், இறைவனுக்காகவும், மற்றவர்களுடனும் மற்றவர்களுக்காகவும், அன்புடனும் அன்பிற்காகவும் வாழவேண்டிய காலமிது என அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவையின் வரலாற்றில், இறைவார்த்தை ஞாயிறு, முதன்முறையாகச் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில், திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனந்திரும்பலுக்கு அழைப்புவிடுக்கும் இயேசுவின் படிப்பினைகளுக்கு நம் தினசரி வாழ்வில் இடமளிப்போம் என வலியுறுத்தினார்.

வாழ்வில் நாம் சந்திக்கும் பல்வேறு வார்த்தைகளில், நம் வாழ்வைப்பற்றி பேசும் இறைவார்த்தைக்குச் செவிமடுக்க, விவிலியத்தை, எப்போதும், நம் அருகிலேயே வைத்துக்கொள்வோம் என்ற அழைப்பையும் விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு போதிக்கத் துவங்கியது குறித்து, இன்றைய நற்செய்தி எடுத்துரைப்பதைப் பற்றி, தன் மறையுரையின் துவக்கத்தில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனந்திரும்புங்கள், விண்ணரசு அண்மையிலுள்ளது, என இயேசு போதித்தது, இறைவன் மேலிருந்து இறங்கி, நம்மருகே வந்துள்ளதை, நமக்கு, மீண்டும் நினைவூட்டுகிறது என்றார்.

நமக்காக இறைமகன் மனுவுருவெடுத்தது அவரின் கடமையல்ல, மாறாக, அவரின் அன்பின் மிகுதியால் இடம்பெற்றது என்பதையும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

நம்மீது கொண்ட அன்பால், நம்மை தேடி வந்த இறைவன், நமக்கு வாழ்வின் அழகையும், இதய அமைதியையும், மன்னிப்பிலும், அன்புணர்விலும் கிட்டும் மகிழ்வையும் தரவந்தார் எனவும், தன் மறையுறையுரையில் எடுத்தியம்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனோடு வாழும் வகையில், நம் வாழ்வு மாற்றமடைய வேண்டும் என இறைவன் விரும்புகிறார் என்று கூறினார்.

நம் வாழ்வை மாற்றியமைத்து இருளிலிருந்து நம்மை ஒளி நோக்கி அழைத்துச் செல்லும் வல்லமையுடைய இறைவார்த்தை, நம்மை, சுயநலம் எனும் அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கிறது என்பதையும், திருத்தந்தை, தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

இறைவனின் மீட்பளிக்கும் வார்த்தை, நம் வாழ்வின் அனைத்துப் பகுதிகளிலும் புகுந்து தன் செய்தியை வழங்க முயல்கிறது, ஆனால், நாம்தான், நம் குழப்பங்களையும், இருளையும் நமக்குள்ளேயே வைக்க விரும்பி, கதவுகளை மூடிக்கொள்கிறோம் எனவும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவின் முதல் சீடர்கள் சாதாரண தொழிலாளர்களே என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 January 2020, 15:10