வத்திக்கான் சிஸ்டீன் சிற்றாலயத்தில், 32 குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்கிய திருப்பலி வத்திக்கான் சிஸ்டீன் சிற்றாலயத்தில், 32 குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்கிய திருப்பலி 

குழந்தைகளுக்குத் திருமுழுக்கு அளிப்பது, இறைவனுக்கு ஏற்புடையது

குழந்தைகள், ஒளியிலும் தூய ஆவியாரின் வல்லமையிலும் வாழ்வதற்கு தங்கள் படிப்பினைகள் மற்றும் எடுத்துக்காட்டுகள் வழியாக, பெற்றோர் உதவவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

குழந்தைகள், தூய ஆவியைப் பெறும்பொருட்டு, தங்கள் குழந்தைகளை திருமுழுக்கு பெறுவதற்கென கொணர்ந்துள்ள பெற்றோர், அக்குழந்தைகள் ஒளியிலும் தூய ஆவியாரின் வல்லமையிலும் வாழ்வதற்கு தங்கள் படிப்பினைகள் மற்றும் எடுத்துக்காட்டுகள் வழியாக உதவவேண்டும் என அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வோர் ஆண்டும், இயேசுவின் திருமுழுக்குத் திருவிழாவன்று, குழந்தைகளுக்கு வத்திக்கானில் திருமுழுக்கு வழங்கும் மரபைப் பின்பற்றி வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டும், இஞ்ஞாயிறன்று, வத்திக்கான் சிஸ்டீன் சிற்றாலயத்தில், 17 ஆண் குழந்தைகள் மற்றும், 15 பெண்குழந்தைகள் என, 32 குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்கிய வேளையில், ஒரு குழந்தைக்கு திருமுழுக்கு அளிப்பது என்பது 'இறைவனுக்கு ஏற்புடையது' என எடுத்துரைத்தார்.

புனித திருமுழுக்கு யோவானிடம் திருமுழுக்குப் பெறச் சென்ற இயேசு, கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை என்று கூறியதை மையமாக வைத்து தன் மறையுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு குழந்தைக்குத் திருமுழுக்கு வழங்குவது என்பது, நீதியானது, அதாவது, கடவுளுக்கு ஏற்புடையது என்றார்.

இது இறைவனுக்கு ஏற்புடையது, ஏனெனில், நாம் திருமுழுக்கில் ஒரு குழந்தைக்கு ஒரு பெரும் செல்வத்தை வழங்குகிறோம், மற்றும், தூய ஆவியார் எனும் பற்றுறுதியை வழங்குகிறோம்,  எனவும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நீரில் திருமுழுக்குப் பெறும் குழந்தை, தூய ஆவியாரின் வல்லமையுடன் வெளிவருகிறது, ஏனெனில், அவரே வாழ்வு முழுவதும் அவர்களைப் பாதுகாத்து வளர்க்கிறார், என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதனாலேயே சிறு வயதிலேயே திருமுழுக்கு வழங்கப்படுகிறது, எனவும் கூறினார்.

தூய ஆவியாரின் வல்லமையை தங்களுள் கொண்டு வளரும் இக்குழந்தைகள், மறைக்கல்வி வழியாகவும், வீடுகளில் உள்ள நம் எடுத்துக்காட்டுகள் வழியாகவும் வளர நாம் உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார் திருத்தந்தை. 

குழந்தைகள் கோவிலில் அழுதால் அது மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்குமே என கவலைப்படாதீர்கள். அவர்களுக்கு வேண்டியதைச் செய்யுங்கள். குழந்தைகள் அழுவது, தொந்தரவல்ல, மாறாக, அது, நாம் கேட்கக்கூடிய அழகிய மறையுரை, என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 January 2020, 12:00