தேடுதல்

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை 290120 திருத்தந்தையின் மறைக்கல்வியுரை 290120 

மறைக்கல்வியுரை: மலைப்பொழிவின் பேறுபெற்றோர் பகுதி

இயேசுவின் முதல் போதனை, நம் வாழ்வையும் வரலாற்றையும் மாற்றியமைக்க உதவும், எட்டு புதிய கதவுகளை முன்வைக்கிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருத்தூதர் பணிகள் நூலில் காணப்படும் சீடர்களின் மறைப்பணி குறித்த மறைக்கல்வித் தொடரை பல வாரங்களாக வழங்கிய பின்னர், கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் அதனை நிறைவுசெய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த வாரம், கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் குறித்த தன் மறைக்கல்வி உரையை வழங்கினார். இவ்வாரம், இயேசுவின் மலைப்பொழிவின் முதல் பகுதியில் காணப்படும் பேறுபெற்றோர் என்பதன் எட்டு பேரின்பங்கள் குறித்த புதிய ஒரு தொடரை துவக்கினார். புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் திருப்பயணிகளின் கூட்டம் நிறைந்திருக்க, பேறுபெற்றோர் குறித்த மத்தேயு நற்செய்தி பிரிவு ஐந்தின் 1 முதல் 11வரை உள்ள இறைச்சொற்கள் முதலில் வாசிக்கப்பட, திருத்தந்தையின் மறைக்கல்வி உரை தொடர்ந்தது.

இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:

“ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்;

ஏனெனில், விண்ணரசு அவர்களுக்கு உரியது.

துயருறுவோர் பேறுபெற்றோர்;

ஏனெனில், அவர்கள் ஆறுதல் பெறுவர்.

கனிவுடையோர் பேறுபெற்றோர்;

ஏனெனில், அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.

நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்;

ஏனெனில், அவர்கள் நிறைவுபெறுவர்.

இரக்கமுடையோர் பேறுபெற்றோர்;

ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவர்.

தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்;

ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர்.

அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்;

ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.

நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்;

ஏனெனில், விண்ணரசு அவர்களுக்குரியது.

என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில், விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே, உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள். (மத். 5, 1-11)

அன்பு சகோதர சகோதரிகளே, மத்தேயு நற்செய்தியில் காணப்படும் மலைப்பொழிவில் இயேசு கூறிய பேறுபெற்றோர் பகுதி குறித்த ஒரு புதிய தொடரை நாம் இன்று துவக்குகிறோம். இயேசுவின் போதனைகள் ஒருவகையில் கிறிஸ்தவர்களுக்கு ஒரு அடையாள அட்டைபோல் செயல்படுகின்றன. சீனாய் மலையில் மோசே வழங்கியதைப்போல் இயேசுவும் இந்த புதிய கட்டளைகளை மலைப்பகுதியிலிருந்து வழங்குகிறார். இக்கட்டளைகளை இயேசு வலுக்கட்டாயமாக திணிக்கவில்லை. மாறாக, இறைவன் தன் விசுவாசமுள்ள மக்களுக்கு வாக்களித்துள்ள, உண்மை மகிழ்வுக்குரிய பாதையாக இதனைப் பரிந்துரைக்கிறார்.

பேறுபெற்றோர் குறித்து அவர் எடுத்துரைக்கும் ஒவ்வொரு பரிந்துரையும் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. பேறுபெற்றோர், அதாவது, ஆசீர்வதிக்கப்பட்டவர் எனத் துவங்கும் முதல் பகுதி, பேறுபெற்றோர் என அழைக்கப்படுபவர், எத்தகைய நிலையில் உள்ளனர் என்பதை தன் இரண்டாவது பகுதியிலும், எதற்காக அவர்கள் பேறுபெற்றோர் ஆகின்றனர் என்பதை தன் மூன்றாவது பகுதியிலும் கொண்டுள்ளது. ஒவ்வொரு பேறின் இரண்டாம் பகுதி, அதாவது, ஏழையரின் உள்ளத்தோர், துயருறுவோர், நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் போன்றவை, பேறுபெற்றோராக மாற உள்ளவர்களின் தற்போதைய நிலையைக் காட்டுகிறது.

இயேசு கூறும் இந்த பேறுபெற்றோர் என்பது, நாம் இன்று இருக்கும் நிலையைப் பற்றியதாக அல்லாமல், இறை அருளால் நமக்கு கிட்டும் புதிய நிலையைப் பற்றி எடுத்துரைக்கின்றது.  இயேசுவின் இந்த முதல் போதனை, எட்டு புதிய கதவுகளை முன்வைக்கிறது.  இந்த கதவுகள் வழியாக நாம் இறையன்பின் வல்லமையைப் பெற்று, நம் வாழ்வையும் வரலாற்றையும் மாற்றியமைக்க முடியும். நம் குறைபாடுகளையும், கண்ணீரையும், தோல்விகளையும் தாண்டி, இயேசு தன் மரணத்திலிருந்து வாழ்வை நோக்கி கடந்து சென்ற வெற்றிப் பாதையில் கிட்டிய பாஸ்கா மகிழ்வை உற்று நோக்க நம்மை வழி நடத்துகின்றன, இந்த பேறுபெற்றோர் பகுதி.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வரும் வெள்ளியன்று சிறப்பிக்கப்பட உள்ள புனித ஜான் போஸ்கோ  விழா பற்றி நினைவூட்டினார். இளைஞர்களின் தந்தையாகிய இவர், இளைஞர் தங்கள் வருங்கால வாழ்வுக்குரிய பாதையை கண்டுகொள்ள, அப்புனிதரின் பரிந்துரையை வேண்டுவோம் என அழைப்புவிடுத்து தன் புதன் மறைக்கல்வி உரையை நிறைவுசெய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 January 2020, 15:04